புதன், 4 ஜூலை, 2012

சைதாப்பேட்டையில் கனிமொழி கைது.வழியனுப்பினார் ராசாத்தி அம்மாள்!

 Kanimozhi Arrested Rajathi Ammal Gives Send Off
 சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
காலை 10 மணிக்குப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணியிலிருந்தே தொண்டர்கள் திரளத் தொடங்கி விட்டனர். காலை 10 மணியளவில் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அதிமுக அரசைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதாக போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.

கனிமொழி இன்று சிறையில் அடைக்கப்பட்டால், அவர் சிறை செல்வது இது 2வது முறையாக இருக்கும். இதற்கு முன்பு அவர் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இன்று காலை கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் வந்திருந்தார். அவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் கனிமொழியை வழியனுப்பி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். பஸ்சில் ஏறிய கனிமொழியை பத்திரமாக இருந்து கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ராசாத்தி அம்மாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக