வெள்ளி, 8 ஜூன், 2012

ராமஜெயம் கொலை..வினோத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்காது?

ராமஜெயம், வினோத்துக்கு சித்தப்பா முறை.

விஸ்வரூப வினோத்!
விரட்டும் காவல்துறை
ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸார் எத்தனையோ பேரை விசா​ரித்​தார்கள். அனுப்பி விட்டார்கள். ஆனால், ஒருவரை மட்டும் ஏனோ நெருக்கமாகக் கண்​காணித்தபடியே இருக்கிறார்கள். அவர் பெயர்... வினோத்!

ராமஜெயம், வினோத்துக்கு சித்தப்பா முறை.
திருச்சி மாவட்டம் பெருவளநல்லூரைப் பூர்வீக​மாகக்கொண்டவர் வினோத். ஆறு அடி உயரம். அதிர்ந்து பேசாத பால்வடியும் முகம். கோ​பால்​ராஜ் - செல்வி தம்பதியின் மூத்த வாரிசு. செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். அதன் பிறகு, எம்.பி.ஏ. படித்ததாகவும் சொல்லப்படுகிறது. இவருடைய சகோதரி ப்ரீத்தா, திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

ராமஜெயத்துக்கு எல்லாமுமாக ஆரம்பத்தில் இருந்தவர், நடிகர் நெப்போலியனின் சகோதரர் கிருபா. அவர் மீது விமர்சனங்கள் எழுந்த நேரத்தில், மிகச் சரியாக அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டார் வினோத். 2006 முதல் 2008 வரை ராமஜெயத்தின்  கேட் கீப்பர் மாதிரி இருந்தவர் வினோத். இந்த நேரத்தில், 'கேர் கல்லூரி’யைத் தொடங்கி  தன்னை ஒரு கல்வித் தந்தையாக மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்வதில் கவனம் செலுத்தினார் ராமஜெயம். இதற்கிடையே, எம்.பி. தேர்தல் வர, பெரம்பலூரில் போட்டியிட ராமஜெயத்துக்கும் நெப்போலியனுக்கும் கடும்போட்டி நிலவியது. அதில், ராமஜெயத்துக்குத் தோல்வி. நெப்போலியனுக்குத்தான் தலைமை ஸீட் ஒதுக்கியது.

இதனால், நெப்போலியனின் சகோதரர் கிருபா முற்றிலுமாக விலக்கப்பட, ராமஜெயம் கோட்டையின் தனிக் காட்டு ராஜாவாக மாறினார்வினோத். பல்வேறு நாடுகளுக்கும் பறந்து, தொழிலை விருத்தி செய்யும் முனைப்​பில் ராமஜெயம் இருக்க, அதைத் தனக்கு சாதகமாக்கிக்​கொண்டு கல்வித்துறை முதல் காவல்துறை வரை தனது ராஜாங்கத்தை விரிவு​படுத்தினார் வினோத்.

இந்த நேரத்தில் கர்நாடகாவில் மகன் வினித் படித்த கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது. அங்கே சென்ற ராமஜெயத்திடம் கல்லூரி நிர்வாகம் டி.சி-யைக் கொடுத்து, மகனை அவருடனேயே அனுப்பி வைத்தது. அதனால், மகனை திருச்சிக் கல்லூரியில் சேர்த்தவர், அவனைக் கண்காணிக்கும் பொறுப்பையும் வினோத்திடம் ஒப்படைத்தார். இதுவும் வினோத்துக்குப் பலம் சேர்த்தது.

தன்னை மீறி சித்தப்பாவை யாரும் எளிதில் நெருங்கிவிட முடியாதபடி, ஒரு வளையத்தை ஏற்படுத்தினார் வினோத். அதற்கு இவரது நட்பு வட்டாரங்களைப் பயன்படுத்திக்கொண்டார். சித்தப்பாவைப் போலவே விளையாட்டில் ஆர்வம் இருந்ததால், திருச்சியில் எல்லா ஏரியாவிலும் தனக்காக ஒரு கோஷ்டியை உருவாக்கிக்கொண்டார்.

2011-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகமாக இருக்கவே, பணம் நிர்வாகம் செய்யும் வேலையை வினோத் வசம் ஒப்படைத்தார் ராமஜெயம். கட்சிக்காரர்கள் காசுக்காக வினோத்தை நம்பிக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  வினோத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஏறுமுகம். முறைத்துக்​ கொண்டவர்கள் முடங்கிப்போனார்கள்.

தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லாத தனது நண்பன் ஆனந்துக்கு, ஜெய​லலிதாவை எதிர்த்துப் போட்டியிட ஸ்ரீரங்கம் தொகுதியில் ஸீட் பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு தி.மு.க-விலும் இவரது  செல்வாக்கு வளர்ந்தது.  உள்ளாட்சித் தேர்தலிலும் சுறுசுறுப்புக் காட்டினார் வினோத்.

ஆட்சி மாறியதும், தி.மு.க​-வில் பலதரப்பட்ட பிரமுகர்கள் மீதும் வழக்குகள் பாய்ந்தன. நகரில் முக்கியப் புள்ளியாக வலம் வந்த வினோத் மட்டும் விதிவிலக்கா என்ன? இவர் பெயரும் சில வழக்குகளில் சேர்க்கப்​​பட்டது. ஆனால், காவல் துறையில் இருந்த செல்வாக்கு காரணமாக தப்பி வந்தார். இதில் முத்தாய்ப்பாக செங்கிப்பட்டி ஐ.ஓ.சி. அலுவலகத்துக்கு ஏஜென்சி எடுக்கச் சென்றிருப்பதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. அங்கேயே வினோத்தைக் கைது செய்ய ஒரு டீம் புறப்பட்டது.  இந்தத் தகவல் எப்படியோ அவருக்குப் போய்ச் சேரவே, சுவர் ஏறிக் குதித்துத் தப்பினார்.

சித்தப்பா ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பிறகு, தன்னுடைய அலை​பேசிகள் அனைத்தையும் சுவிட்ச்-ஆஃப் செய்துவிட்ட வினோத்தை, யாராலும் அத்தனை எளிதில் தொடர்பு​கொள்ள முடியவில்லை. ராமஜெயத்தின் கொலை வழக்கைத் தோண்டித் துருவும் போலீஸாரின் கண்கள், இப்போது வினோத்தை நோக்கியே பயணிக்கின்றன. காவல்துறை அழைத்தால், வழக்கறிஞர் துணையுடன் வந்து செல்லும் வினோத், மற்ற நேரங்களில் எல்லாம் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார். வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

வினோத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்காது என்று காவல்துறை முழுமையாகவே நம்புகிறது. அதனால், கண்காணிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்துப் பேச நாம் பல முறை முயற்சி செய்தும், முடியவே இல்லை. வினோத் வெளிப்படையாகப் பேசினால் மட்டுமே ராமஜெயம் வழக்கு முடிவுக்கு வரும்!

- நமது நிருபர்
thanks vikatan +  habibu KL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக