வியாழன், 7 ஜூன், 2012

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற வீபீஷணர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!


திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பார்ப்பன மேலாண்மையாளர்களின் அம்பாக - தெரிந்தோ, தெரியாமலோ மாறிவிட்ட சில திடீர்த் தலைவர்கள், அரசியலில் அடிக்கடி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து நிலையான வெற்றியைப் பெற முடியாததோடு, பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திணறும் சில ஜாதித் தலைவர்கள், திராவிடர் இயக்க சாதனைகள் ஒன்றுமே இல்லை என்பது போல, நன்றி மறந்து உளறித் திரிகின்றனர்!
இத்தகைய விபீஷணத்திருக் கூட்டத்திற்கு பார்ப்பன ஊடகங்களும் விளம்பரம் தந்து, தூக்கிப் பிடிப்பதன் மூலம், உண்மையான சமூகநீதி, ஜாதிஒழிப்பு, பகுத்தறிவு, பெண்ணடிமை ஒழிப்பு - ஆகிய லட்சியங்களில் ஈடுபாடுள்ளவர்களை திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அழித்து ஒழித்து விடலாம் என்ற நப்பாசை கொண்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகின்றன!

வகுப்புரிமையை, தந்தை பெரியார் நீதிக் கட்சி விரும்பியவாறு, டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து ஆணை பிறப்பித்து, பார்ப்பனர் அல்லாத திராவிட மக்களின் வாழ்வை, பாலையைப் பசுஞ்சோலையாக்கியது போன்று, மலரச் செய்தவர் எஸ்.முத்தய்யா (முதலியார்) அவர்கள். வகுப்புரிமை செல்லாது என்று தீர்ப்புப் பெற்ற பார்ப்பனர்களை எதிர்த்துத் தந்தை பெரியார் தமிழ் நாட்டில் தீவிர வகுப்புரிமை ஆதரவுப் போராட்டம், ஆங்காங்கே மாநாடுகள் நடத்தி,  அசையாத மத்திய அரசை அசைய வைத்து 1951 இல் இந்திய அரசியல் சட்டத்தின் முதல் அரசியல் சட்டத்  திருத்தத்தினைக் கொண்டு வர முழுமுதற் காரணமாக  அமைந்தார்கள் என்பது எவரும் மறுக்க இயலாத உண்மையாகும். அதனால் அன்றோ இன்று பல கட்ட வளர்ச்சிகளைப் பெற்று,  பார்ப்பனரல்லாதார் என்ற எதிர் மறைப் பெயரைக் கொண்ட திராவிடர் இனத்துப் பிள்ளைகள் இன்று கல்வி, வேலை வாய்ப்புகளில் 69 சதவிகிதத்தினை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத புதுமை வாய்ப்பாக - அனுபவித்து வருகின்றனர்.
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் மன்றப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் (S.C.), மலைவாழ் மக்கள் (S.T.), மிகவும் பிற்படுத்தப் பட்டோர் (M.B.C.), சீர்மரபினர், (D.T. - Denotified Tribe), பிற்படுத்தப்பட்டோர் (B.C.), பிற்படுத்தப்பட்ட இசுலாமியர் ஆகியோர் கணிசமான அளவில் தங்களுடைய அறிவும் ஆற்றலும் மற்ற முன்னேறிய ஜாதியினர் எவருக்கும் சளைத்ததல்ல; வாய்ப்பு போதிய அளவில் கிடைத்தால் நிரூபித்துக் காட்டுவோம் என்று பிரகடனப்படுத்துவது போல வெற்றி வாகை சூடி உள்ளனர்!
இது பற்றி இணையத்தில் வந்திருக்கும் மதுரைப் பதிப்பு ஹிந்து நாளேட்டில் (சென்னை பதிப்பில் வரவில்லை என்று கூறப்படுகிறது) வந்துள்ள தகவல்களை நமது கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர்அ.அருள்மொழி அவர்கள் நமது பார்வைக்குக் கொணர்ந்துள்ளார்.
அதில் வந்துள்ள தகவல்கள்படி, தேர்வு எழுதிய 6702 பேரில் 460 பேர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். அது பற்றிய முழு விவரங்களைப் பாரீர்!
இதிலிருந்து என்ன புரிகிறது? நியாயமாக, நேர்மை யாக நடந்தால் ஒடுக்கப்பட்டு, காலங்காலமாய் வாய்ப்பு மறுக்கப்பட்ட நமது மாணவர்கள் அறிவில், ஆற்றலில், திறமையில் குறைந்தவர்கள் அல்ல என்பதும், படிப்பில் தகுதி, திறமை தமக்கே ஏகபோக உரிமை என்று பார்ப்பன ஜாதியினர் அடித்த தம்பட்டம் - இப்போது பொய்யாய், பழங் கதையாய், கனவாகிப் போனதுவே  என்ற நிலைதானே?
நேர்முகத்தேர்வில் - இட ஒதுக்கீட்டுப்படி அவர்கள் நல்ல வண்ணம் தேர்வு செய்யப்பட்டு வெற்றி அடைய நமது வாழ்த்துக்கள்.
நீதிக்கட்சி ஆட்சி, கல்வி வள்ளல் காமராஜர், திராவிடர் இயக்க ஆட்சி இல்லாமல் இருந்திருந்தால், இப்படி ஒரு மறுமலர்ச்சி - புதுவாழ்வு - புது வெற்றி நிரம்பிய வாய்ப்பு ஏற்பட்டிருக்குமா என்று எண்ணிப் பாருங்கள்! திராவிடத்தால் எழுந்தோம்; சூத்திரர் கல்வி கற்கக்கூடாது என்ற மனுவின் ஆட்சியை ஒழித்தோம் என்ற நிலையில், மீண்டும் மனுதர்மம் கொலு வீற்றிருக்கச் செய்யாமல், ஆரியத்திற்கு யாகக் குண்டம் அமைக்காமல் திராவிடர் தங்களை விழிப்புடன் நிலை நிறுத்திக் கொள்வார்களாக!
கி.வீரமணி,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக