ஜெயலலிதாவின் ஜோசியர், ஷங்கரின் மெகா பட்ஜெட் பட யூனிட் ஆசாமியா?
Viruvirupu
“ஜோதிடர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தோஷக் கோளாறு இருப்பதாக
கூறியதாலே, 1006 ஜோடிகளுக்கு தமிழக அரசு செலவில் இலவச திருமணம் நடத்தி
வைத்தார்” என்று கூறியிருக்கிறார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு முதல்வர் இன்று இலவசத் திருமணங்களை செய்து வைத்துள்ளார். மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கில் அரசுப் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. நல்லவேளை, “ஜோடிகளின் முகங்களுக்கு பெயின்ட் அடிக்க வேண்டும்” என ஜோதிடர் சொல்லவில்லை!
முதல்வரை வரவேற்று சென்னை போயஸ் தோட்டத்தில் தொடங்கி திருவேற்காடு வரை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை நெடுகிலும் வாழை மரங்களும்,தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. இலவச திருமணம் என்ற பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை வீணாக செலவழிப்பது சரியல்ல.
தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன. தமிழகத்தில் உள்ள எத்தனையோ கோவில்களில் ஒருவேளை பூஜைக்குக் கூட வழியில்லாத நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுவது நியாயம்தானா என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
நீண்டகால திட்டங்களான இலவச ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர் கொடுத்துவிட்டு, மத்திய அரசு போதிய நிதி தருவதில்லை என அவ்வப்போது கடிதம் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இடையே குறுகிய கால இலவசத் திட்டமாக திருமணங்களும் நடத்தப்படுகின்றன.
இதில் யாரோ ஒரு ஜோதிடரின் கைவரிசை இருப்பதாகதான் அ.தி.மு.க. வட்டாரங்களிலும் சொல்லப்படுகின்றன. மேற்படி ஜோதிடர் ஜெயலலிதாவின் தோஷத்துக்கு மெகா சைஸ் பரிகாரமாக சொல்லிவிட்டு போயிருக்கிறார். அரசு பணம்தானே என ஜோதிடரும் நினைத்திருக்கலாம்.
ஒரேயொரு சந்தேகம்தான் உள்ளது. தோஷ பரிகாரங்களை சொந்தப் பணத்தில் செய்ய வேண்டும் என்று சொல்வார்களே… பொதுப் பணத்தில் பரிகாரம் செய்தால், முதல்வருக்கு தோஷம் நீங்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக