செவ்வாய், 12 ஜூன், 2012

9ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால்???

 இரண்டு சம்பவங்கள். ஒன்றில் மாணவன். இன்னொன்றில் மாணவி. இவர்கள் 9ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் பெற்றோர் திட்டியுள்ளனர். கோபமடைந்த யோகேஷ் மதுரைக்கு ரயில் ஏறி விட்டார். அதேபோல் செல்வி ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு திருச்சிக்கு ரயில் ஏறி விட்டார். 
ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த இருவரையும் ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சென்னை தி.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் யோகேஷ். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

முழு ஆண்டுத்தேர்வில் தோல்வியடைந்ததால், தந்தை திட்டினார். இதில் கோபமடைந்த யோகேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். ரயில் மூலமாக மதுரை வந்த அவர் மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, ரயில்வே ஸ்டேஷன் வந்தார். பணம் முழுவதும் செலவழிந்த நிலையில், பசியால் வாடிய யோகேஷ் பிளாட்பாரத்தில் நின்று அழுதுகொண்டு இருந்தார். இதைக்கண்ட ரயில்வே போலீசார் அம்மாணவனை மீட்டனர்.

சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் செல்வி. 9ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.  பெற்றோர் கண்டித்தனர்.

உடனே செல்வி வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.  ரயிலில் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து தஞ்சை வந்து இறங்கினார். ரூ.15 ஆயிரத்துக்கு 2 புதிய செல்போன்கள், ரூ.10 ஆயிரத்துக்கு 4 சுடிதார், ரூ.2,000க்கு 2 ஜோடி கவரிங் வளையல், 2 நெக்லஸ் மற்றும் ரூ.2,000க்கு ஐபேடு வாங்கி உள்ளார். தஞ்சையில் இருந்து சிவகாசி செல்ல ரயில் டிக்கெட் வாங்கினார். எந்த ரயிலில் செல்வது என தெரியாமல் இரவில் ரயில் நிலையத்தில் தவித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த ரயில்வே போலீசார், மாணவியை மீட்டனர்.

வகுப்பில் பெயிலானால் பெற்றோர் திட்டாமல் கொஞ்சவா செய்வார்கள். திட்டு பொறுக்க முடியாதவர்கள் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நன்றாக படித்திருக்க வேண்டும். இப்படி ஓடிப்போகும் மாணவர்கள் சமூக விரோதிகளின் கையில் சிக்கியிருந்தால் என்ன ஆயிருக்கும்? வாழ்க்கைக்கு படிப்பு அவசியம்தான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை. இதை பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். படிப்பின் அவசியத்தை புரிய வைத்தால் இந்தக்கால மாணவர்கள் புரிந்து கொள்ளாமலா போய் விடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக