செவ்வாய், 12 ஜூன், 2012

ஆ(ட்டு)திமுகவின் ஒட்டு வேட்டை வாக்குப் பதிவு

புதுக்கோட்டை: ஆட்டின் தலையில் அமைச்சரின் முகம் தெரியும் அதிசயம்!

Viruvirupu 
32 பரிதாபத்துக்குரிய ஜீவன்களின் கடின உழைப்புக்கு இன்று பலன் கிடைக்கவுள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்குத் துவங்கியது. தமிழகத்தை ஆளும் (!) 32 அமைச்சர்கள், 30 நாட்களாக கெஞ்சியும், கொஞ்சியும் (லோக்கல் குழந்தைகளை) கும்பிட்டுக் கேட்டுக் கொண்டபடி வாக்களிக்க, புதுக்கோட்டை வாக்காளர்களுக்கு 9 மணி நேரம் டயம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு நிறைவடைகிறது.
தொகுதிக்குள் மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 251 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 502 வாக்குப் பதிவு இயந்திரங்களும் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் மொத்தம் 1,095 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்குச் சாவடிகள் அனைத்தும் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 450 ஊர்க்காவல் படையினரும், உள்ளூர் காவல் துறையினர் 1,392 பேரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் 348 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படை காவலர்கள் 452 பேரும் ஆக மொத்தம் 2,642 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள 37 வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க மைக்ரோ பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமானும், தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசேனும் போட்டியிடும் இந்தத் தேர்தலில், ஆளும் கட்சி குறைந்த பட்சம் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு, 32 அமைச்சர்கள் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இந்த 1 லட்சம் இலக்கை எட்டுவதற்காக, தமிழக அரசின் சகல துறைகளும், கடந்த 3 வார காலமாக தமது செயல்பாடுகளை நிறுத்தியிருந்தன.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் கையெழுத்துக்காக (ஓரிரு அமைச்சர்களின் கைநாட்டுக்காக?) தேங்கியுள்ள ஒவ்வொரு பைலுக்கும், 1000 ஓட்டாவது விழுந்தால்தான், 1 லட்சம் இலக்கை எட்ட முடியும்.
தொகுதிக்குள் பிரசாரம் செய்து களைத்துப் போயுள்ள அமைச்சர்கள், ஓட்டுக் கால்குலேஷன்களில் மூழ்கியுள்ளார்கள்.
அ.தி.மு.க. ஓட்டு வங்கி: 30,000 ஓட்டுக்கள்
முதல்வர் ஜெயலலிதா, 1 நாள் அதிரடி சுற்றுப் பயணத்துக்கு: 10,000 ஓட்டுக்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமையின் ராஜ்யசபா எம்.பி. டீலுக்காக: 3,000 ஓட்டுக்கள்
விலையில்லாத ஆடு விசுவாசத்துக்காக: 2,000 ஓட்டுக்கள்
சரத்குமாரின் ஆக்ரோஷ பிரசாரத்துக்காக: 50 ஓட்டுக்கள்
மேலேயுள்ள எண்ணிக்கை சாலிட் ஓட்டுக்கள். 1 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயிப்பதை விடுங்கள்; 1 லட்சம் ஓட்டுக்களை பெறுவதற்கு மேலும் 54,950 ஓட்டுக்கள் தேவை. 32 அமைச்சர்களும், தலைக்கு 1717 ஓட்டுக்களை பெற்றுக் கொடுத்தால் 54,950 ஓட்டுக்களை பெற்றுவிடலாம். ஒவ்வொரு அமைச்சரும், 15 நாட்களாவது தொகுதிக்குள் பம்பரமாக வேலை செய்திருந்தால், 1 அமைச்சர், 1 தினத்துக்கு 114 ஓட்டுக்களை கவர்ந்தாலே போதும்.
அ.தி.மு.க. வேட்பாளருக்கு 1 லட்சம் ஓட்டுக்களாவது விழாவிட்டால், அமைச்சர்களுக்கு டோஸ் விழும். “யோவ், தினத்துக்கு வெறும் 114 ஓட்டுக்களை பெற்றுக் கொடுக்க நீரெல்லாம் ஒரு அமைச்சரா?” அதுதான், அமைச்சர்களின் தற்போதைய நடுக்கத்துக்கு காரணம்.
புதுக்கோட்டை வாக்காளர்களே, 32 பரிதாபத்துக்குரிய ஜீவன்களின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொள்ளாதீர்கள். அ.தி.மு.க.-வுக்கு ஓட்டுப்போட ஓட்டுச் சாவடிக்கு வாருங்கள்.
தயக்கமாக இருந்தால், உங்கள் வீட்டுப் பின்கட்டில் உள்ள ‘விலையில்லா ஆடு’ முகத்தைப் பாருங்கள். அதில் பரிதாபத்துக்குரிய அமைச்சர்களில் யாராவது ஒருவரின் முகம் தெரிவது போல பிரமை ஏற்படவில்லையா? வாருங்கள்.. ஓட்டுச் சாவடிக்கு வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக