வியாழன், 19 ஏப்ரல், 2012

Sushma Swaraj:இந்திய நிதியுதவி திட்டங்கள் திருப்தியளிக்கிறது

இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதியில் இந்திய நிதியுதவிடன் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு திட்டங்கள் திருப்தியளிப்பதாக இந்திய எம்.பி.,க்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட எம்.பி.,க்கள் குழுவினர் ஆறு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளனர். விடுதலை புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்த பின் தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வு பணிகளை இந்திய எம்.பி.,க்கள் குழு பார்வையிட்டு வருகிறது. வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாமை எம்.பி.,க்கள் குழுவினர் பார்வையிட்டனர். அங்கு தங்கியுள்ள தமிழர்களிடம் இந்த குழுவினர் விசாரித்தனர். அதன் பின் புளியங்குளம், மான்குளம் பகுதிக்கு சென்று ரயில்பாதை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர்.
இவர்களுடன் இலங்கை பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பசில் ராஜபக்சேவும் சென்றார். முல்லை தீவு பகுதியில் உள்ள பொது மருத்துவமனைக்கு சென்ற இக்குழுவினர் 3.6 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கினர். முல்லவாய்க்கால் பகுதிக்கு சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழு, இந்திய அரசின் பொருள் உதவியுடன் சீரமைக்கப்பட்ட பள்ளி கூடத்தை அப்பகுதி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தது. அங்குள்ள பள்ளி சிறுவர்களிடமும் எம்.பி.,க்கள் குழு கருத்துக்களை கேட்டறிந்தது. இன்று இந்த குழுவினர் யாழ்பாணம் செல்கின்றனர். பல தரப்பட்ட மக்களிடம் கேட்டதில் தற்போது நிலைமை முன்னேறி இருப்பதாகவும், இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் திருப்தியளிப்பதாகவும் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக