வியாழன், 19 ஏப்ரல், 2012

தன்னையே தடயமாக விட்டுப் போயிருக்கிறான் கொலைகாரன்

கேமராவைப் பார்த்தும் அசராத கொலையாளி!



கொடூரக் கொலைகளையும் கொள்ளைகளையும் சர்வ சாதாரணமாக அரங்கேற்றுவது, சமுக விரோதிகளுக்கு சகஜமாகிப் போனது. திருவள்ளுர் மாவட்டம் நெற்குன்றத்தில் உள்ள படேல் சாலையில் கடந்த 14-ம் தேதி பட்டப்பகலில் நடந்த நகைக்கடை கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம், நகைக்கடை உரிமையாளர்களை மட்டுமின்றி மக்களையும் நடுங்க வைத்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த புரோ ராம் தன்னுடைய இரண்டு மகன்களுக்காக, கடந்த 2006-ல் பாலாஜி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் ஒரு சிறிய நகைக் கடை தொடங்கினார். இளைய வரான கணேஷ்ராம்தான் நகைக் கடையில் இப்போது கொல்லப்பட்டவர்.
விசாரணையில் இறங்கினோம். ''அன்னைக்கு பகல் 11 மணிக்கு டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்த வாலிபர் ஒருவர் கடைக்கு வந்திருக்கிறார். அப்போது, கணேஷ் ராம் மட்டுமே கடையில் இருந்திருக்கிறார். புதிய மாடல் நகைகளை காட்டச் சொல்லி இருக்கிறார்.
கணேஷ் காட்டிய எந்த நகையும் தனக்குப் பிடிக்கவில்லை என்று அந்த வாலிபர் கூறியிருக்கிறார். அதனால் வேறு சில மாடல் நகைகளை எடுக்க லாக்கர் அறைக்குள் நுழைந் திருக்கிறார் கணேஷ். சட்டென அந்த வாலிபரும் லாக்கர் அறைக்குள் சென்று, கணேஷின் வாயைப் பொத்தி தாக்கி இருக்கிறார். நிலைதடுமாறிய கணேஷ் கீழே விழ... தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை விருட்டென அறுத்திருக்கிறார். அத்தோடு, வயிற்றிலும் சராமரியாகக் குத்தி கணேஷை சாய்த்து இருக்கிறார். விறுவிறுவென அங்கிருந்த அத்தனை நகைகளையும், தான் கொண்டுவந்த பையில் நிரப்பிக்கொண்டு, எதுவும் தெரியாதவனாக கடையில் இருந்து சாவகாசமாக வெளியேறி இருக்கிறார்'' என்கிறது காவல் துறை வட்டாரம்.
எந்தத் திருடனும் காவல் துறைக்கு ஏதோ ஒரு தடயத்தை விட்டுச்செல்வான் என்பார்கள். இங்கு தன்னையே தடயமாக விட்டுப் போயிருக்கிறான் கொலைகாரன். ஆம். கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் அந்த வாலிபரின் அத்தனை செயல்பாடுகளும் அப்படியே துல்லியமாகப் பதிவாகி இருக்கிறது.
அந்தக் காட்சிகளைப் பார்த்தோம். கணேஷ்ராமுடன் பேசியபடியே கடையை நோட்டம் விடும் அந்த வாலிபர், ஒரு கட்டத்தில் கடையில் கண்காணிப்புக் கேமரா இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், நகராமல் அடுத்த காரியத்தில் இறங்குகிறார்.
''வழக்கம்போல காலை 8 மணிக்கு கணேஷ் கிளம்பிப் போனான். 9 மணிக்குப் போன நான், கொஞ்சநேரம் அவனுடன் இருந்துவிட்டு விருகம்பாக்கத்துக்கு ஒரு வேலையாகப் போயிட்டேன். திரும்ப 12 மணிக்கு வந்தப்ப, கடை திறந்து கிடந்தது. குழப்பத்துடன் கடைக்குள் நுழைஞ்சப்ப, லாக்கர் சாவி, ஷோ கேஸ் மீது ஏனோ தானோ வென்று கிடந்தது. பூட்டிக் கிடந்த லாக்கர் அறையை பதட்டத்தோடு திறந்து பார் த்தேன். என் தம்பி ரத்த வெள்ளத்தில் கிடந்தான். நகைகளும் கொள்ளை போய் இருந்தது. என் தம்பி அதிர்ந்துகூட பேசமாட்டான். அவனைப் போய் இப்படிப் பண்ணிட்டானே அந்தப் பாவி'' என்று, கதறினார் கணேஷ் ராமின் சகோதரர் தானா ராம்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 'காவல் துறையின் பாதுகாப்பு இன்மையால்தான் நகைக் கடைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது’ என்று நகை அடகு வியாபாரிகள் சங்கம் அந்தப் பகுதியில் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
சென்னை நகை அடகு வியாபாரிகள் சங்கத்தின் காவல்துறை விசாரணை அணியின் தலைவர் மேகாராம் சவுத்ரி, ''சமீப காலமாக நகை வியாபாரிகள், சமூக விரோதிகளால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. இந்தச் சம்பவங்களில் புலன் விசாரணை என்ற பெயரில் காவல் துறையின் அணுகு முறையும் அத்துமீறலும் சகிக்க முடியாததாக உள்ளது. இதே கடையில் ஆறு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ மதிப்புள்ள நகை திருடு போனது. அந்தப் புகாரையே ஏற்க மறுத்து விட்டது காவல்துறை. சங்கத்தின் மூலம் போராடித்தான் வழக்கைப் பதிய வைக்க முடிந்தது. ஆனாலும் விசாரணையில் காவல் நிலையத் திலேயே எங்கள் ஆட்கள் மிரட்டப்பட்டனர். இப்போது அந்த சில அதிகாரிகளே இந்த வழக்கிலும் முக்கியப் பொறுப் பில் இருப்பது எங்களுக்கு அவநம்பிக்கையைத் தருகிறது'' என்றார் வேதனையும் வெறுப்பும் கலந்த குரலில்.
மதுரவாயல் துணைக் கமிஷனர் ஐயப்பனிடம் பேசினோம். ''கண்காணிப்புக் கேமரா பதிவின் மூலம் கொலையாளியை அடையாளம் கண்டுவிட்டோம். அவனது செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து, அவன் இருப்பிடத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். இன்னும் ஓரிரு நாளில் கொலையாளி பிடிபடுவான்'' என்றார் உறுதியாக.
''முந்தைய வழக்கில் காவல்துறை மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதே..?'' என்றோம். ''ஒரு புகாரை வழக்காக பதிவு செய்வதற்கு, அதில் அடிப்படையான விஷயங்கள் இருக்கவேண்டும். அந்தப் புகாரில் உண்மைத்தன்மை இல்லாததால் வழக்காகப் பதியவில்லை. விசாரணை நேரத்தில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் தந்தனர். நாங்கள் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதால், காவல் துறை மீது சேற்றைப் பூசுகிறார்கள்'' என்றார்.
தங்கத்தைக் காப்பாற்றும் கவலை போய், தங்களையே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கவலை நகை வியாபாரிகளுக்கு வந்திருக்கிறது. காவல்துறைதான் இவர்கள் கவலையைத் தீர்க்கவேண்டும்.
- எஸ்.கிருபாகரன்
படங்கள்: வீ.ஆனந்தஜோதி
thanks vikatan + kumar lalwani chennai( Pl help us to locate the killer)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக