வியாழன், 19 ஏப்ரல், 2012

ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க., ஆதரவு: பெங்களூரில் பா.ஜ., ரகசிய பேச்சு?

ஜனாதிபதி தேர்தலில், தி.மு.க.,- என்.ஆர்., காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற, பெங்களூரில் உள்ள தி.மு.க., பெண் பிரமுகர் வீட்டில், பா.ஜ., தலைவர் ரகசிய பேச்சு நடத்திய தகவல், கட்சி வட்டாரங்களில் கசிந்துள்ளது. அ.தி.மு.க., சுட்டிக்காட்டும் வேட்பாளர் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில், முதல்வர் ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்து வருகிறார் என, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வரும் ஜூலை, ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க.,விடம் 65 ஆயிரம் ஓட்டுகளும், தி.மு.க.,விடம் 45 ஆயிரம் ஓட்டுகளும் உள்ளன.
சமீபத்தில், டில்லியில் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது, அவர்களிடம் ஜனாதிபதி தேர்தல் குறித்து, முதல்வர் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை நடத்தினார். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தது. பா.ஜ., வேட்பாளர் பைரோன் சிங் ஷெகாவாத்தை, அ.தி.மு.க., ஆதரித்தது. ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. தற்போது, அ.தி.மு.க., ஆளுங்கட்சி என்பதால், நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளரை தேசிய ஜனநாயக முன்னணியில் உள்ள கட்சிகளும், மற்ற கட்சிகளின் தலைவர்களும், ஆதரிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை, முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.

மத்திய அரசுக்கு நெருக்கடி: மத்திய அரசிடம் மோதல் போக்கை கையாளும் வகையில், தி.மு.க.,வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. இலங்கைக்கு செல்லும் இந்திய எம்.பி.,க்கள் பயணத்தை கடைசி நேரத்தில், தி.மு.க., புறக்கணித்தது. இலங்கையில் தனி ஈழம் கிடைப்பதற்கு, ஐ.நா., சபை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு மத்திய அரசு தேவையான ஆதரவும், அழுத்தமும் கொடுக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.

பெங்களூரில் ரகசிய பேச்சு: காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., அதிருப்தியுடன் காணப்படுவதால், வரும் பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி கதவை திறந்து வைக்க, பா.ஜ.,வில் உள்ள சில தலைவர்கள் விரும்புகின்றனர். அதன் அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க., ஆதரவை பெற பெங்களூரில் உள்ள தி.மு.க., பெண் பிரமுகர் வீட்டில், பா.ஜ., கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் ரகசிய பேச்சு நடத்திய தகவல், கட்சி வட்டாரங்களில் கசிந்துள்ளது.

என்.ஆர்., காங்கிரஸ் ஆதரவு: தி.மு.க., ஓட்டுகள் மற்றும் புதுச்சேரி என்.ஆர்., காங்கிரஸ் கட்சிகளின் ஓட்டுகளும் சேர்ந்தால், பா.ஜ., வேட்பாளருக்கு சாதகமாக அமையும் என்ற மற்றொரு கணக்கும் வகுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., எடுக்கிற முடிவுக்கு நேர் எதிரான முடிவை தான், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எடுப்பார் என்பதால், அவருடைய ஆதரவையும் கேட்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம், 5ம் தேதி டில்லிக்கு முதல்வர் ஜெயலலிதா செல்லும்போது, வேட்பாளர் தேர்வுக்கு ஒரு வடிவம் கிடைத்து விடும் என, அ.தி.மு.க.,வினர் எதிர்பார்க்கின்றனர்.

வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் கட்சி சார்பில், துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, சுசில்குமார் ஷிண்டே, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் கரண்சிங் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் அடிப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை, பா.ஜ., தரப்பில் நிறுத்தப்பட்டால் அவரை, அ.தி.மு.க., ஆதரிக்கும் என்றும், அப்துல்கலாமை வேட்பாளராக அறிவிக்க, முதல்வர் ஜெயலலிதா முன்னுரிமை கொடுப்பார் என, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக