புதன், 11 ஏப்ரல், 2012

Bore Well இனி இஷ்டத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்

வீட்டில் ஏகப்பட்ட ஆழ்துளை கிணறுகளைப் போட்டு, நிலத்தடி நீரை இனி இஷ்டம் போல உறிஞ்ச முடியாத நிலை உருவாகப் போகிறது. நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய நீர்வள அமைச்சகம் சார்பில், "தேசிய தண்ணீர் வாரம்' என்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதைத் துவக்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
அதிகம் வீணடிப்பு: குடிதண்ணீர், விவசாயம் என, இரண்டுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால், நாளுக்கு நாள் பெருகி வரும் தண்ணீர் தேவை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கான தீர்வை கண்டறியும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது, நிலச்சுவான்தாரர்கள் ஆழ்துளை கிணறு (போர்வெல்) மூலமாக, தங்களது நிலங்களில் துளையிட்டு, எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும், எடுக்கலாம் என்ற நிலை உள்ளது. உற்பத்தி செலவைக் காட்டிலும் தண்ணீரும், மின்சாரமும் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. நியாயமான விலையில், இந்த இரண்டுமே விற்கப்படவில்லை. இதனால், இரண்டையும் மக்கள் அதிகமாக வீணடிக்கின்றனர். மக்கள் மத்தியில் அதிகப்படியாக வீண் செலவு ஆகக் கூடியவைகளாக மின்சாரமும், தண்ணீரும் உள்ளன. இந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்கான முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது.

விரைவில் சட்டம்: நிலத்தடி நீரை பொது நலச் சொத்தாக மாற்றுவதற்கு சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. நிலத்தடி நீரை, நிலத்தின் உரிமையாளர்கள் எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்களை எல்லாம், அரசே தீர்மானிக்கும் வகையில், அந்த சட்டம் இருக்கும்.

அனைவருக்கும் சொந்தம்: நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், முக்கிய அம்சங்கள் இடம் பெறவுள்ளன. நிலத்தடி நீர் ஆதாரங்கள் என்பவை குறிப்பிட்ட, ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடாது. இந்த நீர் ஆதாரங்கள், அனைத்து மக்களுக்குமே சொந்தம். அனைவருக்கும் பயன் அளிக்கூடியவை என்ற நிலை உருவாக்கப்படும். நிலத்தடி நீரை எல்லா மக்களுக்கும் சொந்தமாக்கும் வகையில்தான் புதிய சட்டம் இருக்கப் போகிறது. நிலத்தடி நீர் ஒழுங்கு முறை ஆணையங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்படும். தேசிய அளவிலும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக