புதன், 11 ஏப்ரல், 2012

பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திக்கடன் பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் விழா

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பூமிதித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு குண்டம் விழா, மார்ச் 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 27ம் தேதி இரவு பண்ணாரி கோவிலில் இருந்து பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் பல்வேறு கிராமங்களுக்கு வீதியுலா செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. ஏப்., 3ம் தேதி மீண்டும், பண்ணாரி கோவிலை அம்மன் வந்தடைந்தார். இதையடுத்து, கோவில் முன் உள்ள அக்னி குழியில் கம்பம் நடப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, குண்டத்தில் பரப்பி வைக்கப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்ச மரத்துக்கு தீ வைத்து, அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3.45 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகளை கோவில் தலைமை பூசாரி சேகர் செய்தார். முதன் முதலில் அவர் குண்டம் இறங்கி பூ மிதித்தல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து மற்ற பூசாரிகள் சப்பரத்தில் வீற்றிருக்கும் அம்மனை பூக்குழி வழியாக எடுத்து வந்தனர். மகளிர் மேம்பாட்டு ஆணைய நிர்வாக அதிகாரி அமுதா, சென்னை போலீஸ் ஐ.ஜி., பாலசுப்பிரமணியம், பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் சுப்பிரமணி, பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை கமிஷனர் நடராஜன் உட்பட முக்கிய பிரமுகர்களும், ஏராளமான போலீஸாரும் பூக்குழி இறங்கினர்.
தொடர்ந்து, சனிக்கிழமை முதல் வரிசையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். நடப்பாண்டு முதன்முதலாக பூ மிதிக்கும் பக்தர்கள் நேராக மூலவர் அம்மனை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றது. நேற்று அதிகாலை துவங்கிய பூ மிதிக்கும் நிகழ்ச்சி மாலை 5 மணி வரை நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர் மாவட்டங்களில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். கோபி ஆர்.டி.ஓ., பழனிச்சாமி, சத்தியமங்கலம் தாசில்தார் மாதேஸ்வரன் ஆகியோரும் ஏற்பாடுகளை செய்தனர். இன்று மதியம் மாவிளக்கு பூஜை, மாலையில் புஷ்ப ரதம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழா, 13ம் தேதி விளக்கு பூஜை, தங்கரதம் புறப்பாடு, 16ம் தேதி மறுபூஜை ஆகியவை நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக