புதன், 11 ஏப்ரல், 2012

மறைந்த என்.வரதராஜன் மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன் உடல் நலக்கோளாறு காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் என்.வரதராஜன்
மருத்துவமனையில் இன்று (10.04.2012) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. அவருக்கு ஜெககுரு என்ற மனைவியும், கல்யாணசுந்தரம், பாரதி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

கல்யாண சுந்தரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நகர செயலாளராக உள்ளார். பாரதி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.


என்.வரதராஜன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள பாளையம் அருகே இருக்கும் கம்பிளியம்பட்டியில் 1928ல் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே திண்டுக்கல்லில் உள்ள சவுந்தராஜா மில்லில் தொழிலாளியாக பணியாற்றினார்.

1944ல் தொழிற்சங்கத்தில் இணைந்த அவர், 1947ல் நகர செயலாளராகவும், 1953ல் மாவட்ட குழு உறுப்பினராகவும், 1954ல் மாவட்ட ஊராட்சி மன்ற கவுன்சிலராகவும், 1955ல் கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினராகவும், 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளராகவும், 1967ல் வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், 1977 மற்றும் 1981ல் திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏவாகவும், 1978 முதல் 1981 வரை கட்சியின் மதுரை மாவட்ட செயலாளராகவும், 1994ல் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
2004ல் கோவையில் நடந்த கட்சியின் மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2005 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலச் செயலாளராக பதவி வகித்தார்.
தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும், அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் அவர் கட்சியிடம் கேட்டுக்கொண்டு, பதவியில் இருந்து விலகினார்.
கடந்த திமுக ஆட்சியில் அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பேரணி, போராட்டங்கள் நடத்தி அவர்களுக்கு இடஒதுக்கீடு வாங்கிக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்.வரதராஜனுக்கு சொந்தமான வீடு கிடையாது. சென்னையில் இருக்கும்போது அவர் கட்சி அலுவலகத்திலேயே தங்குவார். திண்டுக்கல் செல்லும்போதும் அவர் கட்சி அலுவலகத்திலேயேதான் தங்குவார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 09.04.2012 அன்று நிறைவு அடைந்தது. இந்த மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பிய வரதராஜன், இன்று (10.04.2012) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
என்.வரதராஜனின் உடல் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு கட்சி பாகுபாடின்றி பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் என்.வரதராஜன் உடல் திண்டுக்கல் கொண்டு செல்லப்பட்டது. திண்டுக்கல் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்ககாக வைக்கப்படுகிறது. நாளை (11.04.2012) மாலை 3 மணிக்கு உடல் தகனம் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக