புதன், 11 ஏப்ரல், 2012

சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்! ஆர்.எஸ்.எஸ். மதவாதக் கண்ணோட்டத்தில்

ஹரி மசூதி
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய கையோடு ஆர்.எஸ்.எஸ். சிவசேனா கும்பல் மும்பய் நகரில் நடத்திய கலவரத்தின்பொழுது, அந்நகரின் வடாலா பகுதியில் அமைந்துள்ள ஹரி மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்கள் மீது மும்பய் மாநகர போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் ‘காணாமல்’ போனார்.  மும்பய் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இப்படுகொலை சம்பவத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக விசாரித்து வந்த மையப் புலனாய்வுத் துறை, “இத்துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்யும் சுதந்திரமான சாட்சியங்கள் (Neutral witnesses)  எதுவுமில்லை” என நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் அறிக்கை அளித்திருக்கிறது.  இத்துப்பாக்கிச் சூடு சம்பவமும், அது பற்றி மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி முடிவுக்கு வந்த விதமும் இந்து மதவாதம் அரசு இயந்திரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் எத்துணை ஆழமாக ஊடுருவி நிறைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.

ஜனவரி, 1993  இல் ஆர்.எஸ்.எஸ்.  சிவசேனை கும்பல் தலைமையில் நடந்த இந்து மதவெறிக் கலவரம் மும்பய் நகரெங்கும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு மதிய வேளையில், போலீசு உதவி ஆய்வாளர் நிகில் காப்சே தலைமையில் வந்த போலீசு பட்டாளமொன்று ஹரி மசூதியைச் சுற்றி வளைத்தது.  மதிய வேளை தொழுகை நடந்துகொண்டிருந்த நேரமது.  அக்காக்கிச் சட்டை கிரிமினல் கும்பல் எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாது, மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்களை நோக்கிச் சுட்டதில் நான்கு பேர் மசூதிக்குள்ளேயே குண்டடிபட்டு இறந்து போனார்கள்.  ஒருவர் மசூதியிலிருந்து வெளியேற முயன்றபொழுது, நேருக்கு நேராக மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார்.  சுட்டுக் கொல்லப்பட்ட முசுலீம்களின் உடல்களை போலீசு வேனில் எடுத்துப்போட்டு அப்புறப்படுத்திய மற்றொரு முசுலீம் அதற்குப் பின்‘காணாமல்’ போனார்.  பலர் படுகாயமடைந்தனர்.  இத்துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக, ஹரி மசூதிப் பகுதியில் முசுலீம்கள் கலவரத்தில் இறங்கியதாகவும் கொலைவெறியோடு இந்துக்களைத் தாக்கியதாகவும் மும்பய் போலீசாரால் கதை புனையப்பட்டதோடு, அப்பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் 50 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.
இத்துப்பாக்கிச் சூடு நடந்த ஒருசில நாட்களிலேயே அது பற்றி விசாரணை நடத்திய சர்வதேச பொதுமன்னிப்புக் கழகம் (Amnesty International) மும்பய் போலீசின் கட்டுக்கதையை அம்பலப்படுத்தியதோடு, நிகில் காப்சேயின் தலைமையில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசு பட்டாளத்தைக் குற்றவாளியாகவும் அறிவித்தது.  மும்பய்க் கலவரம் பற்றி விசாரணை நடத்துவதற்காக மகாராஷ்டிர மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறீகிருஷ்ணா கமிசனும், “மனிதத்தன்மையற்ற முறையிலும் மிகக் கொடூரமாகவும் நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பளித்தது.
இத்துப்பாக்கிச் சூடு பற்றிய கிருஷ்ணா கமிசனின் பரிந்துரையை மகாராஷ்டிரா மாநிலத்தைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆண்ட பா.ஜ.க.  சிவசேனா கூட்டணியும் சரி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரசு  தேசியவாத காங்கிரசு கூட்டணியும் சரி, ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை.  கலவரத்தின்பொழுது இந்து மதவெறி கிரிமினல் கும்பலுக்குத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்து கௌரவிக்கும் வேலையை இவ்விரண்டு அரசுகளுமே சிரமேற்கொண்டு செய்தன.
இந்நிலையில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த ஃபரூக் மாப்கர், அப்பாவி முசுலீம்களைச் சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்த போலீசாரைத் தண்டிக்கக் கோரிப் போராடத் தொடங்கினார்.  இதனையடுத்து, நிகில் காப்சே உள்ளிட்ட போலீசார் மீது துறைரீதியான விசாரணை என்ற நாடகத்தை நடத்தி, அவர்களை உத்தமர்களாக அறிவித்தது, மாநில அரசு.  இதன் பின்னர், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஹரி மசூதி படுகொலை உள்ளிட்டு, அக்கலவரத்தின்பொழுது நடந்த பல படுகொலை சம்பவங்களை விசாரிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்பட்டது.  மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளைக் கொண்டே உருவாக்கப்பட்ட இச்சிறப்புப் புலனாய்வுக் குழுவும் ஹரி மசூதி உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகளை ஊத்தி மூடும் வேலையைச் சட்டப்படியே செய்து முடித்தது.  இனி மாநில அரசை நம்ப முடியாது என்ற நிலையில் இப்படுகொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி ஃபரூக் மாப்கர் வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கு மும்பய் உயர் நீதிமன்றத்தில் நடந்தபொழுது, “இது சாதாரணமான வழக்கு” எனக் கூறி, இவ்வழக்கு விசாரணையை மீண்டும் மகாராஷ்டிரா போலீசிடமே தள்ளிவிட முயன்றது, சி.பி.ஐ.  எனினும், ஹரி மசூதி படுகொலையை சி.பி.ஐ. விசாரிக்குமாறு மும்பய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  மகாராஷ்டிரா மாநில அரசு இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இம்மேல்முறையீட்டின்பொழுது, “போலீசு அதிகாரி நிகில் காப்சே இவ்வழக்கின் காரணமாக கடந்த 16 ஆண்டுகளாகப் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக” வாதாடியது, காங்கிரசு கூட்டணி அரசு.
ஹரி மசூதிஇத்துணை இழுத்தடிப்புகள், எதிர்ப்புகளுக்குப் பின் விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ., இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிர் பிழைத்த முசுலீம்களின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தது.  “அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்; எனவே, அவர்களின் சாட்சியத்தை சுதந்திரமான சாட்சியமாகவோ, நம்பகமான சாட்சியமாகவோ கருத முடியாது” என அவர்களுக்கு உள்நோக்கம் கற்பித்து அந்த சாட்சியங்களை நிராகரித்தது. மேலும், நிகில் காப்சே உள்ளிட்ட போலீசு அதிகாரிகளுக்கு எதிராகச் சாட்சியம் அளித்த முசுலீம்கள் அனைவரின் மீதும் கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற காரணத்தையும் வலிந்து சுட்டிக்காட்டியது.  அவ்வழக்குகள் பொய் வழக்குகள் என்பதையோ, அந்த உண்மை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்கள் அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டதையோ ஒதுக்கி வைத்துவிட்ட சி.பி.ஐ., பாதிக்கப்பட்ட முசுலீம்களைக் குற்றவாளிகளாகவே கருதி ஒருதலைப்பட்சமாகவே தனது விசாரணையை நடத்தியது.
இவ்விசாரணையின்பொழுது, பக்க சார்பு அற்றவர்கள் என்று தன்னால் மதிப்பிடப்பட்ட இரு சாட்சிகளும்  சி.பி.ஐ.ஆல் விசாரிக்கப்பட்டனர். அதிலொருவர் இந்து; மற்றொருவர், முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர்.  அந்த இந்துவின் சாட்சியம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஃபரூக் மாப்கர் அளித்த சாட்சியத்திலிருந்து வேறுபட்டிருந்தது.  முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர் அளித்த சாட்சியமோ, பாதிக்கப்பட்ட முசுலீம்கள் அளித்த சாட்சியங்களை ஒத்திருந்தது.  ஒரு இந்து அளித்த சாட்சியத்தை நம்பத்தக்கது என்று ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., மற்றொரு சாட்சியம் அளித்த வாக்குமூலத்தை, அவர் முசுலீம் என்பதனாலேயே நிராகரித்தது.
இவை அனைத்தும் சி.பி.ஐ. நடத்திய விசாரணை ஆர்.எஸ்.எஸ். சார்பு இந்து மதவாதக் கண்ணோட்டத்தில், அதாவது, இந்து பொய் சொல்லமாட்டான், துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமாக நடந்திருந்தாலும், துப்பாக்கியால் சுட்டவன் நம்ம ஆளு என்ற முசுலீம் வெறுப்பு அரசியல் அடிப்படையிலும்; இந்து மதவெறி கொண்ட போலீசாரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும்தான் நடத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன.  ஃபரூக் மாப்கர் சி.பி.ஐ. அளித்துள்ள இந்த அறிக்கையை நிராகரிக்கக் கோரி தற்பொழுது வழக்கு தொடுத்திருக்கிறார்.
குஜராத் இனப் படுகொலையின்பொழுது நடந்த குல்பர்க் சொசைட்டி படுகொலைகளுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, மோடிக்கும் அப்படுகொலைக்கும் தொடர்பில்லை என அறிக்கை அளித்திருப்பதாகக் கூறப்படுவதையும், ஹரி மசூதி படுகொலை வழக்கில் தொடர்புடைய காக்கிச்சட்டை கிரிமினல்களை விடுவித்து சி.பி.ஐ., இறுதி அறிக்கை அளித்திருப்பதையும் வெவ்வேறானதாகப் பிரித்துப் பார்க்க முடியாது.
அதுபோல, குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலையும், மும்பய்க் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் காங்கிரசையும் இருவேறு துருவங்களாகப் பார்க்க முடியாது.
அப்சல் குருவுக்கும், கசாபுக்கும் தூக்கு தண்டனை விதிப்பதில் காட்டப்பட்ட நீதிமன்ற முனைப்பும் வேகமும், பால் தாக்கரே, அத்வானி, மோடி உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கிரிமினல்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில்கூடக் காட்டப்படுவதில்லை.  நரேந்திர மோடி மீது கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்யக் கோரி ஜாகியா ஜாஃப்ரி கடந்த பத்தாண்டுகளாகவும், நிகல் காப்சே மீது கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்யக் கோரி ஃபரூக் மாப்கர் கடந்த இருபது ஆண்டுகளாகவும் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இந்து மதவெறிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்குச் சட்டப்படியான உரிய நீதியை வழங்காமல் அலைக்கழிப்பதன் மூலம், அவர்களை இந்திய அரசு இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறது என்பது மட்டுமல்ல,  முசுலீம் பயங்கரவாதம் வளர்வதற்கான வாய்ப்பினையும் வாரி வழங்கி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக