புதன், 11 ஏப்ரல், 2012

கோவிலின் உச்சியிலிருந்து குழந்தை தூக்கி எறியப்பட்ட கொடுமை!




பெங்களூரு, ஏப்.10- நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்க, ஒரு குழந்தை 30 அடி கோயிலின் உச்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டது. இச்சம்பவம் மதச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு, கருநாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர்வாசிகள் இவ்வாறு செய்தால் புதிதாக பிறந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என நம்புகின்றனர்.
இவ்வாறு காற்றில் தூக்கி வீசப்படும் குழந்தைகள் 2 வயதுக்கும் கீழே இருப்பவையே. அவ்வாறு தூக்கி வீசப்பட்டு காற்றில் தடுமாறும் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் துண்டினைப் போட்டு பிடித்துக் கொள்கின்றனர்.

நாக்ரலா கிராமத்தில் நிகழ்ந்த திகம்பேசுவர கோயில் திருவிழா காணொளிக் காட்சியில் கோவிலின் மேற்புரத்தில் ஒரு நபர் அமர்ந்து கொண்டு குழந்தைகளை மேற்கண்டவாறு தூக்கி வீசுகின்றார். அக்குழந்தைகளை கீழே காத்திருக்கும் கூட்டம் பிடித்துக் கொள்கிறது. ஒன்றன்பின் மற்றொருவராக குழந்தைகளை கோவிலின் மேலிருக்கும் அந்த நபரிடம் தர அவர் அக்குழந்தைகளை கீழே வீசுகிறார். அவ்வாறு கீழே விழப் பயப்படும் குழந்தை அந்நபரின் ஆடையைப் பற்றினால், அதனுடைய இறுக்கத்தை தன்னுடைய வாயினால் விடுவித்து கீழ்நோக்கி எறிகிறார். காமிராவில் பார்க்கும்போது பல குழந்தைகள் பயத்தினால் அழுவதை பார்க்க முடிகிறது.
பக்தர்கள் இவ்விதமான முயற்சிகளையும், அதி லுள்ள ஆபத்தினையும் அறிந்தே இருக்கின்றனர். மாவட்ட நிருவாக அலுவலர்களும் இத்தகைய நிகழ்வுகளை தடுத்து நிறுத்தவே முயல்கின்றனர். ஆனால், எங்களுடைய ஆன்மிக நம்பிக்கைதான் ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழாவினை நடத்த எங் களை உந்துகிறது என கூறுகிறார் சங்கர் என்பவர்.
உள்ளூர் அதிகாரிகள் இத்தகைய நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவே முயற்சி செய்கின்றனர். மேலும் மதச் சடங்குகளுக்கு சட்டத்தை உடைக்கும் அதிகாரம் இல்லை என்கிறார்கள். இருப்பினும் காவல்துறையினர் இதில் தலையிட முடியாது என்றும் கூறுகின் றனராம். இவர்களுடைய மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக