ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

சங்கரன்கோவில் வெற்றிக்கு அரசு அளித்த பரிசு

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குறைந்த மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ.5,300 கோடியும், வசதி படைத்தோர் தொழிலதிபர்கள் பயன்படுத்தும் உயர் மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ.2,574 கோடியும் 

சென்னை, மார்ச் 31: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்றதற்காக அதிமுக அரசு மக்களுக்கு அளித்துள்ள முதல் பரிசு மின் கட்டண உயர்வு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.  இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  அதிமுக ஆட்சிக்கு வந்த 10 மாதக் காலத்தில் மின் கட்டணத்தை 37 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளனர். சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்ததாகச் சொல்லப்படும் மக்களுக்கு, அரசு அளித்துள்ள முதல் பரிசு இது.  திமுக ஆட்சியில் மின் கட்டணம் ரூ.1,651 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்டது. இப்போது அதிமுக ஆட்சியில் ரூ.7,874 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அபரிமிதமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம். திமுக ஆட்சியில் 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தவர்களுக்குக் கூட யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் இப்போது 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகிப்போருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.70 காசு என்ற அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  திமுக ஆட்சியில் வாங்கும் சக்தி ஓரளவுக்கே பெற்றுள்ள சாதாரண நுகர்வோருக்கு எவ்விதக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ஆனால், இப்போது அதிமுக ஆட்சியில் சகட்டு மேனிக்கு ஏழை, எளியோர், நடுத்தர வர்க்கத்தினர், வசதி படைத்தோர் என்ற எவ்வித வேறுபாடு இன்றி அனைவருக்கும் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.  இன்னும் சொல்லப்போனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குறைந்த மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ.5,300 கோடியும், வசதி படைத்தோர் தொழிலதிபர்கள் பயன்படுத்தும் உயர் மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ.2,574 கோடியும் கூடுதலாக அரசுக்குக் கிடைக்கத்தக்க வகையில் கட்டண உயர்வைச் செய்திருக்கின்றனர். என்ன சமதர்மமோ இது? இவ்வாறு கட்டணங்களை உயர்த்தி, வாக்களித்த மக்களைக் கஷ்டப்படுத்துவது என்பது ஜெயலலிதாவுக்கு புதிதல்ல.  மின் கட்டண உயர்வை திரும்பப் பெற பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக