ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

நேருவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சிக்கினார்!

திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தரக்குறைவாக திட்டமி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சங்கரன்கோவில் அருகே ஒருவரைப் போலீஸார் பிடித்துள்ளனர்.
நேருவின் தம்பி ராமஜெயம் சமீபத்தில்தான் திருச்சி அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் தற்போது கே.என்.நேருவுக்கும் மிரட்டல் வந்துள்ளது.
ச்சி தில்லை நகர் 5வது குறுக்குத் தெருவில் திமுக மாவட்ட அலுவலகம் உள்ளது. அங்குள்ள லேன்ட்லைன் போனுக்கு அதிகாலையில் ஒரு போன் வந்துள்ளது. அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர் பவுன்ராஜ் என்பவர் போனை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், ராமஜெயத்துக்கு நேர்ந்த கதிதான் அடுத்து நேருவுக்கும் நேரப் போகிறது என்று மிரட்டியபடி தகாத வார்த்தைகளால் நேருவை கடுமையாக திட்டினாராம். பின்னர் அவர் போனை வைத்து விட்டாராம்.

இந்த மிரட்டல் குறித்து நேரு தரப்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். தொலைபேசியில் உள்ள காலர் ஐடி மூலம் ஒரு செல்போன் எண்ணிலிருந்துதான் அந்த மிரட்டல் அழைப்பு வந்தது என்பது தெரிய வந்தது. மேலும் மதுரையிலிருந்து அது வந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணுக்குரிய நபர் சங்கரன்கோவில் அருகே இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸ் தனிப்படை அங்கு விரைந்தது. சங்கரன்கோவில்-ராஜபாளையம் இடையே உள்ள பெரும்பத்தூர் என்ற ஊரில் உள்ள சண்முக வேல் என்பவரைப் போலீஸார் பிடித்தனர். அவர்தான் அந்த செல்போன் எண்ணுக்குரியவர் ஆவார்.

இவரிடம் தற்போது ரகசிய இடத்தில் வைத்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கும், இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏன் நேருவுக்கு இவர் கொலை மிரட்டல் விடுத்தார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் தரப்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக