ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஒரு மாணவனின் மரணம்

இன்று காலை தி ஹிந்துவில் படித்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது.
மணிவண்ணன் என்ற இந்தப் பையனை எனக்குக் கொஞ்சமாகத் தெரியும். சில மாதங்களாக கிண்டி பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழகம்) என்.எஸ்.எஸ் மாணவர்கள் சிலருடன் சேர்ந்து சில பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சந்திப்பதற்காக ஒரு நாள் ஒதுக்கியிருந்தோம். அண்ணா பல்கலை மாணவர்கள் சிலரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி, ‘இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்; இவர்களைப் போலவே நீங்களும் சாதிக்கலாம்’ என்று சொல்லி மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் இதன் நோக்கம்.என்.எஸ்.எஸ் மாணவர்கள் பலரும் மிக நன்றாகப் பேசினார்கள். பெரும்பாலும் வறுமையான பின்னணியிலிருந்து வந்துள்ளவர்கள். பெரும்பாலும் கிராமப்புறத்திலிருந்து வந்துள்ளவர்கள். மிகச் சாதாரணப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்துள்ளவர்கள். எப்படி, தமக்கு முன் இருந்த தடைகளையெல்லாம் மீறித் தம்மால் சாதிக்க முடிந்தது என்பதை அந்த மாணவர்கள் விளக்க, பள்ளி மாணவர்கள் நிஜமாகவே மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். (அப்போது எடுத்த வீடியோ துரதிர்ஷ்டவசமாக அழிந்துபோய்விட்டது.)

ஆனால் பேசிய மாணவர்களிலேயே எங்களை மிகவும் அதிகமாக பாதித்தது மணிவண்ணன்தான். மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசினான் அவன். தன் வாழ்க்கைக் கதையை விரிவாக எடுத்துச் சொன்ன அந்த மாணவன், தன் வாழ்க்கையில் படித்து முன்னேற தனக்கு உறுதுணையாக இருந்தது மூன்று விஷயங்கள் என்றான்.

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது தாய்க்கும் தந்தைக்கும் சண்டை வந்து பிரிந்துபோயினர். பணம் இல்லாததால், அடுத்த இரண்டு வருடங்கள் படிக்காமல் வீட்டிலேயே இருந்திருக்கிறான். அந்த வயதிலேயே செங்கல் சூளைகளில் வேலை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த அபூர்வா ஐ.ஏ.எஸ், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்க எடுத்துக்கொண்ட முயற்சியால் பள்ளியில் மீண்டும் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறான். அந்த நிகழ்ச்சி அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. தானும் ஒரு கலெக்டராக வரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான். இது முதல் தூண்டுதல்.

ஆனாலும் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை. விளையாட்டு, ஊர் சுற்றுதல். ஆனால் பரீட்சை எழுதினால் மதிப்பெண்கள் மட்டும் வந்துவிடும். ஒருமுறை அவனுடைய நெருங்கிய நண்பன் அவனிடம் சொன்னானாம்: ‘நான் எத்தனையோ முயற்சி செய்து கஷ்டப்பட்டுப் படிக்கிறேன். ஆனால் படிப்பு ஏறுவதில்லை, மதிப்பெண்ணும் வருவதில்லை. நீயோ முயற்சி எடுப்பதில்லை; ஆனால் மதிப்பெண் வாங்குகிறாய். என்னால் நினைத்தாலும் கலெக்டராக வரமுடியாது. ஆனால் நீ மட்டும் ஆர்வத்துடன் படித்தால் உன்னால் கலெக்டர் ஆகமுடியும். அப்படி நீ கலெக்டர் ஆனால் நான் உன் கார் டிரைவராக வரவேண்டும். பெருமையுடன் உனக்கு கார் ஓட்டவேண்டும்.’ இது மணிவண்ணனைப் பாதித்த இரண்டாவது தூண்டுதல். அன்று தொடங்கி மிகுந்த முயற்சி எடுத்துப் படித்திருக்கிறான்.

பின்னர் அதே மாவட்டத்துக்கு கலெக்டராக வந்த அமுதா ஐ.ஏ.எஸ் ஊக்கம் கொடுத்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பில் 1167 மதிப்பெண் பெற்றிருக்கிறான். அவர் கொடுத்த ஊக்கம் மூன்றாவது தூண்டுதல்.

இவற்றையெல்லாம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துச் சொன்ன மணிவண்ணன், அந்த மாணவர்களாலும் பெரிதாகச் சாதிக்க முடியும் என்றான்.

அன்றைய கலந்துரையாடலிலேயே அனைவரையும் மிகவும் பாதித்த பேச்சு மணிவண்ணனுடையதுதான்.

தான் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை எடுத்துக்கொண்டு போய் தன் தாயிடம் காட்டி சந்தோஷப்பட்டபோது தன் மகன் என்ன செய்திருக்கிறான் என்பதுகூட அந்தத் தாய்க்கு முழுமையாகப் புரியவில்லை. ‘ஏதோ பாஸ் பண்ணிட்டியேப்பா’ என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அதை மிக இயல்பாக மாணவர்களுக்குச் சொல்லிக் காட்டி, தான் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவன் என்பதைக் கோடி காட்டியிருந்தான் மணிவண்ணன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் என்று நினைக்கிறேன்.

தான் தமிழில் நிறையக் கவிதைகள் எழுதி வைத்திருப்பதாகவும் அவற்றை விரைவில் புத்தகமாகக் கொண்டுவரப்போவதாகவும் என்னிடம் சொன்னான். இந்த மாணவனைப் பல பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்று பேசவைக்கவேண்டும் என்று நானும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தோம்.

நேற்றைக்கு முதல் நாள் மணிவண்ணன் தூக்கில் தொங்கிவிட்டான். அர்ரியர்ஸ் நிறைய உள்ளது என்றும் எதோ காதல் விவகாரம் என்றும் சொல்கிறார்கள். அவனுக்குத் தெரிந்த ஒரு மூத்த மாணவரிடம் இன்று காலை பேசினேன். மருத்துவமனைகளில் ரத்தம் கேட்டால், முதலில் போய் நிற்பானாம். இவனே பணம் சேர்த்து மூன்று மாணவர்களைப் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறானாம். இன்னும் பலப் பல நல்ல விஷயங்கள்.

எனக்கு இருக்கும் வருத்தங்கள் இரண்டு.

1. இவ்வளவு தன்னம்பிக்கையுடன், இவ்வளவு சாதித்துள்ள இந்த மாணவன், தனக்கு இருக்கும் கஷ்டத்தைப் பற்றி ஏன் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை? உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அவனுக்கு என்ன ஆகிவிட்டது? இந்தக் கல்லூரிகள் ஏன் உளவியல் கவுன்சிலர்களை வைத்து மாணவர்களுடன் தொடர்ந்து பேசச் செய்யக் கூடாது?

2. மணிவண்ணனை பல மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் அழைத்துச்சென்று ரோல் மாடல் என்று காட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இனி அடுத்து யாரைத் தேடிப் பிடிப்பது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக