திங்கள், 30 ஏப்ரல், 2012

சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் மதுரை ஆதீனம்- திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி பரபரப்புத் தகவல்!

மதுரை ஆதீனம் சூழ்நிலைக் கைதியாக உள்ளார். அவரையும், மடத்தையும் மீட்க தமிழகத்தில் உள்ள அத்தனை மடாதிபதிகளையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூர் திருப்பனந்தாள் மடாதிபதியின் பிரதிநிதி சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நி்த்தியானந்தாவை நியமித்ததற்கு சகல தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நேற்று இந்து மக்கள் கட்சி உள்ளிட்டோர் பெரும் திரளாக மதுரை ஆதீனத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் மதுரை ஆதீனத்தை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் நித்தியானந்தா ஆதரவாளர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் பேரூர் திருப்பனந்தாள் மடாதிபதியின் தூதராக வந்திருந்த சுரேஷ் பாபுவை மட்டும் அனுமதித்தனர். ஆதீனத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த சுரேஷ் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை ஆதீனம் சூழ்நிலை கைதியாக உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள மடாதிபதிகளை ஆலோசனை செய்து ஆதீனத்தையும், மடத்தையும் மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மதுரை ஆதீனம் சூழ்நிலைக் கைதியாக உள்ளதாக திருப்பனந்தாள் மடாதிபதியின் பிரதிநிதி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீனத்திற்கு அப்படி என்னதான் பிரச்சினை என்ற கேள்வியும் பெரிதாக வெடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக