திங்கள், 30 ஏப்ரல், 2012

ஆருஷி கொலை வழக்கு: நுபுர் தல்வார் சிறையில் அடைப்பு

Nupur Talwar
ஆருஷி தல்வார் மற்றும் ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் நுபுர் தல்வார் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று காசியாபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து அவர் தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த 2008ம் ஆண்டு ஆருஷி தல்வார் மற்றும் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஹேம்ராஜ் என்னும் வாலிபர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களை அழித்ததாக ராஜேஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் நுபுர் தல்வாருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி வாரண்ட்டை காசியாபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்தது. இதையடுத்து நுபுர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த ஏ.கே. பட்நாயக் மற்றும் ஜே. எஸ். கோகர் அடங்கிய பெஞ்ச் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரண்டுக்கு தடை விதிக்க மறுத்ததோடு அவரை இன்று நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டது.

நுபுர் காசியாபாத் நீதிமன்றத்தில் சரணடைந்தால் அவர் கைதாகக்கூடும் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். அதற்கு நீதிபதிகள் ராஜேஷ் தல்வாருக்கு காசியாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை சுட்டிக்காட்டினர்.

பல்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து நுபுர் வழக்கு விசாரணையைத் தள்ளிப்போடுவதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நுபுர் தல்வார் இன்று காசியாபாத் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே நுபுர் தான் ஒரு பெண் என்ற அடிப்படையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து அவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் ஜாமீன் மனு மீதாள தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டதையடுத்து நுபுரை தஸ்னா சிறைக்கு கொண்டு சென்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக