செவ்வாய், 24 ஏப்ரல், 2012

அடுத்த ஜனாதிபதியாக கலாமுக்கு வாய்ப்பு சமாஜ்வாடி சாமர்த்தியமாக

புதுடில்லி: ""நாட்டின் அடுத்த ஜனாதிபதி, அரசியல் சார்பில்லாதவராக இருக்க வேண்டும்' என, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் கூறியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து, அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக, பேச்சு எழுந்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி பிரதிபாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ளது. இந்நிலையில், "ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கோ, தங்கள் விருப்பப்படி, ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு, போதிய உறுப்பினர்கள் பலம் இல்லை.
எனவே, அரசியல் சார்பற்ற, அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒருவரை, அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும்' என, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார், நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவரது இந்த பேட்டி, டில்லி அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் கலாமா? அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான நபராக, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கருதப்படுவதால், அவரையே அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக, பேச்சு எழுந்துள்ளது. உ.பி., சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அதிக எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் சமாஜ்வாதி கட்சி, அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நடவடிக்கைகளை, ஏற்கனவே துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திரிணமுல் காங்கிரஸ், அ.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன், சமாஜ்வாதி சார்பில் பேச்சு நடத்தப்பட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இதுகுறித்து, சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ஷாகித் சித்திக், நேற்று கூறுகையில், "கடந்த 2002ல், ஜனாதிபதி தேர்தலில், அப்துல் கலாமை பரிந்துரை செய்தது, முலாயம் சிங் யாதவ் தான். எனவே, அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதியாவதில், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை' என்றார்.

காங்கிரஸ் கருத்து என்ன? சமாஜ்வாதி கட்சியின் இந்த நடவடிக்கைக்கு, காங்கிரசும் ஒத்துழைப்பு அளிக்கலாம் என்று, தவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், "ஜனாதிபதி பதவி என்பது மிக உயர்ந்தது. எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், பெரும்பான்மை இல்லாத நிலையில், அனைத்து கட்சிகளும் இணைந்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில், அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வது நல்லது' என்றார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், "ஜனாதிபதி தேர்தலில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கு இடையே, ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக