செவ்வாய், 24 ஏப்ரல், 2012

யார், எங்கே "பட்டுவாடா' என்பது முடிவாகி விட்டது புதுக்கோட்டை தொகுதியில்

சென்னை: "புதுக்கோட்டை தொகுதியில் அமைச்சர்கள் கூட்டம் போட்டு, யார் எங்கே, "பட்டுவாடா' செய்வது என்பதெல்லாம் பேசி முடிவாகி விட்டது' என்று, கருணாநிதி ஆவேசமாகக் கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள, "கேள்வி - பதில்' அறிக்கை:
* புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி எப்போது அறிவிப்பார்கள்?
புதுக்கோட்டைக்கு இப்போது தான், தமிழக அரசு 50 கோடி ரூபாய் ஒதுக்கி, அங்கு பராமரிப்புப் பணிகள் எல்லாம் வேகமாக நடைபெறுகிறதாம். தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு தொகுதி, விரைவில் இடைத்தேர்தல் நடக்கப்போகும் தொகுதி. அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் அ.தி.மு.க., அரசு, 50 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை எவ்வித டெண்டரும் இல்லாமல் அங்கு செலவழிக்கப்படுகிறதாம். அவசர அவசரமாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்றிவிட்டு, இவா இழுத்த இழுப்பிற்கு வரக்கூடிய ஒருவரை அங்கு நியமனம்
செய்திருக்கிறார்களாம். மக்களுக்கு வேறு இடங்களில் இலவசமாக வழங்க வேண்டிய விலையில்லாப் பொருட்கள் எல்லாம், ஜெயலலிதாவின் படம் ஒட்டிய பெரிய அட்டைப் பெட்டிகளில் வந்திறங்கும் புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளில் வந்துள்ளன. விபத்தில் சிக்கி இறந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் இறுதிச் சடங்குகள் முடிவதற்குள்ளேயே, அமைச்சர்கள் எல்லாம் அந்த தொகுதியில் கூட்டம் போட்டு, யார் எங்கே, "பட்டுவாடா' செய்வது என்பது பற்றிக் கூட பேசி முடிவாகி விட்டதாம்.
* சத்திஸ்கர் மாநிலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கடத்தப்பட்டுள்ளாரே?
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், சத்திஸ்கர் முதல்வருடன் இதுபற்றி பேசியுள்ளார். கடத்தப்பட்ட அதிகாரியை மீட்க, அந்த மாநில அரசுக்கு, மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்து, அவரை விரைவாக மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக