சனி, 21 ஏப்ரல், 2012

ஸ்டாலினுக்கு அழகிரி பதிலடி: மதுரை நிர்வாகிகள் உற்சாகம்

மதுரையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் வரவேற்பு அளிக்கவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், ""தி.மு.க.,வில் யாரையும் வரவேற்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை,'' என, மத்தியமைச்சர் அழகிரி பதிலடி கொடுத்தது, அவரது ஆதரவாளர்களை உற்சாகமூட்டியுள்ளது.
தி.மு.க.,வில் இருவருக்கும் இடையே மறைமுகமாக நடந்த "சகோதர யுத்தம்' தற்போது வெளிப்படையாக வெடித்து உள்ளது.
மதுரையில் ஏப்.,15ல் நடந்த நகர் இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல், கண்டன பொதுக்கூட்டங்களில் அழகிரி ஆதவாளர்கள் பங்கேற்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு தலைமை நோட்டீஸ் அனுப்பியது. "டென்ஷன்' ஆன அழகிரி ஆதரவாளர்கள் தலைமைக்கு பதில் அனுப்புவது குறித்து முடிவு எடுக்க ரகசிய கூட்டம் நடத்தினர். அதில் எடுத்த முடிவுபடி நேற்று முன்தினம் தனித்தனியாக விளக்கம் அனுப்பினர். விளக்கத்தில், ""நேர்காணல், பொதுக்கூட்டம், போஸ்டர்களில் மத்திய அமைச்சர் மற்றும் தென் மண்டல அமைப்பு செயலாளர் முறையில் அழகிரி பெயர் இல்லை. நகர செயலாளருக்கு கட்சி தலைமை உரிய பதில் அளிக்கவில்லை. கட்சி விதிப்படி இளைஞரணி அமைப்பு நிர்வாகிகள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பகுதி செயலாளர்களிடம் கொடுத்து தான் போட்டியிட விரும்புவோருக்கு வழங்க வேண்டும். மதுரைக்கு ஸ்டாலின் வரும்போது அழகிரிக்கு தகவல் தெரிவிப்பது உண்டு. தற்போது ஸ்டாலின் வருகை குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. நோட்டீஸ்களை பொது செயலாளர் தான் அனுப்ப வேண்டும். ஆனால் அமைப்பு செயலாளர் பெயர் குறிப்பிட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவருக்கு அதிகாரம் இல்லை,'' என குறிப்பிட்டனர். இதில் பேசிய முக்கிய விசுவாசி ஒருவர், ""அழகிரி அசைவு இல்லாமல் யாரையும் வரவேற்க வேண்டும் என அவசியம் இல்லை,'' என குறிப்பிட்டார். இந்நிலையில், அழகிரியும், ""தி.மு.க.,வில் யாரையும் வரவேற்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை,'' என, பேட்டியளித்து எங்கள் கருத்தை வெளிப்படுத்தினார் என அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தர்மசங்கடம் தவிர்ப்பு: தலைமை அளித்த நோட்டீசுக்கு அழகிரி வந்தவுடன் அவரிடம் விளக்க கடிதத்தை காட்டி விட்டு அனுப்பலாம் என முதலில் ரகசிய கூட்டத்தில் முடிவு எடுத்தனர். ஆனால் முக்கிய விசுவாசிக்கு "மொபைல் போனில்' வந்த தகவல்படி அன்றிரவே விளக்க கடிதங்களை 17 பேரும் கூரியரில் அனுப்பினர். விளக்க கடிதம் அனுப்பிய நிர்வாகி ஒருவர், ""அமைச்சரிடம் கடிதத்தை காட்டி நாங்கள் விளக்கம் அளித்தால், அவருக்கு தேவையில்லாத தர்மசங்கடம் ஏற்படும் என்பதை தவிர்க்கவே அவர் மதுரை வருவதற்கு முன் அனுப்பினோம்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக