வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஸ்டானுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் பகிரங்கப் புகார்

சென்னை, ஏப்.19: அதிமுக உறுப்பினராக இருப்பவர்கள் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.  இளைஞர் அணி நிர்வாகிகளை மாற்றியமைப்பது திமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரே நேரடியாக நேர்காணல் நடத்தி இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்கிறார். வயது கட்டுப்பாடு இருப்பதால் கல்விச் சான்றிதழ் உள்பட அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  பெரும்பாலான இடங்களில் இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு முறையாக அது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக மதுரையிலும், சேலத்திலும் பெரும் பிரச்னை எழுந்தது.  தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் மு.க.அழகிரியை கலந்து ஆலோசிக்காமல், மின் கட்டண உயர்வைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை பேச அனுமதித்தது தொடர்பாக பிரச்னை எழுந்தது.  திமுக தலைவர் கருணாநிதி வருவதாக இருந்தால்கூட மாவட்டச் செயலாளரை கலந்து ஆலோசித்த பிறகே வரவேண்டும் என்பது திமுகவில் எழுதப்படாத விதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இதை மீறி மு.க.ஸ்டாலின் செயல்பட்டதாலேயே மதுரையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தைப் புறக்கணிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி கூறியதாகச் சொல்லப்படுகிறது.  அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் கேட்டு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  அடுத்த சர்ச்சை: இப்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடர்பாகவும் திமுகவில் புது சர்ச்சை எழுப்பியுள்ளது.  தென் மண்டல அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி இருக்கையில், அவரைக் கேட்காமல் அமைப்புச் செயலாளர் எப்படி நோட்டீஸ் அனுப்பலாம் என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கேட்கின்றனர்.  திமுகவைப் பொறுத்தவரை முறையாக அதிகாரம் பெற்ற பொதுச்செயலாளர் க.அன்பழகன்தான் விளக்கம் கேட்க முடியும். இது மீறப்பட்டிருப்பதால் அதிருப்தி இன்னும் அதிகரித்துள்ளது.  சேலத்திலும் பிரச்னை: இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வில் சேலத்திலும் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வீரபாண்டி ஆறுமுகம் தனிப்பட்ட முறையில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி நேர்காணல் நடத்துகிறார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.  இதற்குப் பிறகு திமுக தலைமை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பையடுத்து, அப்படி எதுவும் நேர்காணல் நடைபெறவில்லை என்றும், மு.க.ஸ்டாலினுக்கு உதவிச் செய்யும் வகையில் விண்ணப்பங்கள் பெற்று வைத்ததாகவும் வீரபாண்டி ஆறுமுகம் விளக்கம் கூறினார்.  இதன் பின்னர் சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 6-ம் தேதி இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு வந்த ஸ்டாலினுக்கு வீரபாண்டி ஆறுமுகம் உற்சாக வரவேற்பு கொடுத்தார். ஸ்டாலினுக்குப் பொன்னாடை போர்த்தி எங்களுக்குள் எந்தவிதப் பிரச்னையும் இல்லை என்று வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.  நிர்வாகிகள் பட்டியல்: சேலத்தில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞரணி நிர்வாகிகளின் பட்டியல் ஏப்ரல் 11-ம் தேதி முரசொலியில் வெளியிடப்பட்டது.  இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் பெரும்பாலானோர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருபவரும், மு.க.ஸ்டாலின் ஆதரவாளருமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் வீரபாண்டி ஆறுமுகம் மிகுந்த அதிருப்தியில் இருந்து வருவதாகத் தெரிகிறது.  அதிமுக உறுப்பினர்: இதற்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் பலர் இப்போதும் அதிமுகவில் உறுப்பினர்களாகத் தொடர்கின்றனராம். இதற்கான ஆதாரங்களை முழுமையாகத் திரட்டி அதை அப்படியே கருணாநிதியிடம் வீரபாண்டி ஆறுமுகம் கொடுத்துள்ளார்.  அதிமுக உறுப்பினருக்கான அடையாள அட்டைகளுடன் கூடிய அந்த ஆதாரங்களைப் பார்த்து கருணாநிதியே அதிர்ச்சி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.  பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலினிடம் கூறி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீரபாண்டி ஆறுமுகத்திடம் கருணாநிதி உறுதி அளித்துள்ளாராம்.  ஸ்டாலினுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் ஆதாரத்துடன் புகார் கூறியுள்ளது கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக