திங்கள், 9 ஏப்ரல், 2012

உயிருக்குத் தவிக்கும் 3 மாத சிசு: கொடூர தந்தை கைது!

Infant
 பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.


குழந்தையின் உடல் முழுவதும் உள்ள காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது மருத்துவர்களுக்கே புரியவில்லை. ஆனால் குழந்தையை தினமும் அடித்து துன்புறுத்தியதோடு அதை யாரோ கழுத்தை நெறி்த்துக் கொல்லப் பார்த்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குழந்தையின் தந்தை உமர் பரூக்கை கைது செய்தனர்.

இது குறித்து குழந்தையின் தாய் ரேஷ்மா பானு கூறுகையில்,

அவர் ஏற்கனவே வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தி வந்தார். நான் கருவுற்றபோது ஆண் குழந்தை பிறக்கும் என்று பெரிதும் எதிர்ர்த்தார். ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் அவர் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் குழந்தையை கொல்ல முயன்றார். அப்ரீனை மருத்துவமனையில் சேர்க்கக்கூட எனது கணவரின் பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றார்.

கடந்த ஜனவரி மாதம் தான் உடல் முழுவதும் காயங்களுடன் கோமா நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை பாலக் 3 மாத போராட்டத்திற்கு பிறகு மாரடைப்பால் மரணம் அடைந்தது. அந்த அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில் பெங்களூரில் இவ்வாறு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக