வியாழன், 5 ஏப்ரல், 2012

10 லட்சம் பிற மாநில– இளைஞர்களை விழுங்கிவரும் தமிழகம் !!

தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது!தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது! வினவு">
மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்தவர்கள் நியாயமற்ற முறையில் அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளாகும் நபர்களாகிவிட்டனர். பாதிக்கப்பட்ட குழுக்களான அவர்கள் பாதுகாப்பின்றி, எவ்வித சட்ட, சமூக காப்புமின்றி உள்ளனர்.
உழைப்புச் சுரண்டல் – இளைஞர்களை விழுங்கிவரும் தமிழகம் ”தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 லட்சம் புலம்பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இங்கேயுள்ள தொழிலாளர்கள் குறைந்த கூலி மற்றும் அபாயகரமான பணி சூழல்களுக்கு வர மறுப்பதால் இந்த நிலை.  ஆனால் அத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ‘வட இந்தியர்கள்’ மேலுள்ள தவறான எண்ணம் காரணமாக எளிதாக தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்”டந்த வார இறுதியி்ல், அலங்கோலமான தோற்றத்துடன், உடம்பில் சட்டையின்றி வந்த ஒரு மனிதன் ஏறக்குறைய சாவை சந்திக்கும் அளவிற்கு தாக்கப்பட்டார்.  காவல்துறையினரும், வேடிக்கை பார்த்த பொது மக்களும் அந்த மனிதன் நினைவை இழக்கும் வரை தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தனர்.  ஒரு சிலர் உற்சாகத்துடன் அந்த தாக்கும் கூட்டத்தை ஊக்குவித்தனர்.

இந்த நிகழ்வு நடப்பதற்கு 3 தினங்கள் முன்னதாக சமீபத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி 5 நபர்கள் நடு இரவில் >காவல்துறையினரால் (என்கவுன்டர்) கொல்லப்பட்டதை> சென்னை நகரம் கண்டது.
இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு விஷ‌யம் பொதுவானதாக இருப்பதை அறியலாம் – ‘வட இந்தியர்’ என்ற காரணம்.  அந்த தாக்குதலை கண்ணுற்ற சாட்சி ஒருவர் பத்திரிகையாளரிடம் விவரிக்கும் போது கூட்டம் ‘வடஇந்திய திருடனை’ தாக்கியது, கடுமையாக தாக்கி நினைவிழந்த நிலையில் மெயின் ரோட்டிற்கு அவன் இழுத்து வரப்பட்டான் என்றார். தோற்றத்தில் வட இந்தியர் போல் காணப்பட்டவர் இறுதியில் ஆந்திராவிலிருந்து இங்கு பிழைக்க வந்த வெங்கட்ராவ் என தெரிய வந்தது.  எனவே யார் இந்த வட இந்தியர்கள், அவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்.

கட்டிடத் தொழிலில் வட இந்திய இளைஞர்கள். தமிழகத்தில்ம 10 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் - படம் thehindu.com

வடஇந்தியர்

சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக ஆறு வழக்கறிஞர்கள் மற்றும் சமீபத்தில் என்கவுன்டர் நடந்த வேளச்சேரி பகுதி குடியிருப்போர் ஆகியோர் இணைந்து இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த வட இந்தியர்கள் வட மாநிலங்களிலிருந்து கூலிக்கு வேலை தேடி வந்த தொழிலாளர்கள்.  நிதானமாக இங்கு பழகி காலூன்றிய பிறகு பல குற்றங்களை புரிய துவங்கினர்.  பெரும் பாலானவை மிகக் கொடூரமான மற்றும் கடுமையான குற்றங்கள், இவ்வாறாக அவர்களைப் பற்றி விவரிக்கிறது மேற்சொன்ன மனுக்கள்.  மேலும் அதில் விவரிக்கையில் வடஇந்தியர்களால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.  சில குழுக்களான வட இந்தியர்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் தமிழக மக்களின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய மனுக்கள் காவல்துறை மேற்கொண்ட மனித உரிமை மீறல் கொலைகள்தான் நடந்துமுடிந்த என்கவுன்டர் என தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலன் சார்ந்த மனுக்களை எதிர்த்து சொல்வதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தீய நோக்கம் மற்றும் தவறான எண்ணத்துடன் மேற்படி மனுக்களில் சொல்லப் பட்டவை யாவும் உண்மையல்ல.  அவர்கள் ‘தொழிலாளர்கள்’.  ஆனால் அந்த உண்மை இதோடு நிற்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, அதன் சுற்றுப்புறங்கள், கோவை, திருச்சி, மதுரை, ஓசூர், திருப்பூர், கன்னியாகுமரி, மற்றும் திருநெல்வேலி நகரங்களை மையங்களாக வைத்து ஏறக்குறைய 10 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணி புரிவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
அசாம், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் இன்னும் போபால் போன்ற பகுதிகளிலிருந்து பிழைப்பு தேடி வரும் இத்தகைய தொழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு சார்ந்த கட்டிட கட்டுமான பணிகள், சிறிய சிறிய பொறியியல் நிறுவனங்களின் பிரிவுகள், ஸ்டீல் ரோலிங் மில், லேத், பனியன் நிறுவனங்கள், ஆகியவற்றில் தொழிலாளர்களாக, சாலையோர உணவகங்கள், இன்னும் நகரின் ஆடம்பர உணவகங்கள் போன்றவற்றில் உணவு தயாரிப்பு, காவலர் பணி இன்னும் பண்ணை வீடுகள் போன்றவற்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நாட்களில் ஒரு சேரியையோ அல்லது மீனவ குப்பத்தை கடந்தோ நடந்து செல்லும்போது பெரும்பாலும் இனிமையான குரலில் போஜ்புரி, இந்தி, பங்ளா அல்லது ஒரிய மொழியில் பேச்சுக்கள் அல்லது பாட்டுக்களை கேட்கலாம்.
வட இந்திய “திருடர்கள்” என மோசமாக வருணிக்கப்பட்டவர்களில் யார் திருடர்கள், அவர்கள் திருட்டு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிய முற்பட்டேன் நான்.  எனவே அப்போதுதான் பணி முடித்து திரும்பியிருந்த பீகார் இளைஞர்கள் சிலரை சந்தித்தேன்.  அவர்கள் நான்கைந்து பேர்களாக பழைய மகாபலிபுரம் சாலை அருகேயுள்ள சேரி ஒன்றில் சிறிய அறையில் வசிக்கின்றனர்.  120 சதுரஅடி அளவிலான அறை, இளம் பச்சை வண்ண சுவர், சுவரில் அடிக்கப்பட்ட ஆணிகளில் சில சட்டைகள், பேண்ட்கள், ஒரு கண்ணாடி, ஒரு பிளாஸ்டிக் சீப்பு, சிறிய பெட்டிகள், பைகள், ஒரு மண்ணெண்ணை அடுப்பு, சில சமையல் பானைகள், சட்டிகள், தட்டுகள், டம்ளர், இரண்டு வாளிகள், தரை விரிப்புகள், சில கைபேசிகள்.  கழிவரை இல்லை, பொது திறந்த வெளி குளிப்பிடம். அடுத்த வீட்டில் குடியிருக்கும் தொழிற்சாலை தொழிலாளி ஒருவருடன் ஒப்பிடும் போது வேறு எந்த குறிப்பிடத்தக்கவையோ, அல்லது இயல்பிலிருந்து மாறுபட்டோ எதுவுமில்லை.  இருவரும் புலம் பெயர்ந்தவர்கள்.  ஒரு வீட்டிலுள்ளவர் பிற மாநிலத்தவர், மற்றொரு வீடு பிற மாவட்டத்தை சேர்ந்தவர். முக்கியமான வேறுபாடு என்பது அவர்கள் பேசும் மொழி.  அடுத்த வீட்டுக்காரர் பேசுவது தமிழ், இந்த இளைஞர்கள் பேசுவது போஜ்புரி.  அடுத்த வீட்டுக்காரருக்கு குடும்பம் உள்ளது.  இந்த இளைஞர்கள் தங்கள் குடும்பங்களை சொந்த மாநிலத்தில் விட்டு விட்டு வந்துள்ளனர்.
பின்னர் சொல்லப்பட்டவர்கள் சந்திக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க வித்தியாசம், அவர்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகிற அளவிலான மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒப்புக்கொள்ளவைக்கும் பணி நிபந்தனைகள் ஆகியவை ஆகும்.  பெரும்பாலான இத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு ஒப்பந்த காரர்கள், சார்நிலை ஒப்பந்தகாரர்களின் கீழ் அணிதிரட்டப்பட்டு பணி வழங்கப்படுகின்றனர்.
முன்னிராஜ் என்ற தலித் ஒப்பந்தகாரர் ஏறக்குறைய 650 பீகார் தொழிலாளர்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டு ஓசூரை சுற்றியுள்ள  சிறிய முதலீட்டு பொறியியல் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.  எந்த இடமாக இருந்தாலும் இத்தகைய தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ 3500 முதல் 4000 வரை கூலி கொடுக்கப்படுகிறது,  அவர்கள் அதில் 10 சதவீதத்தை மேற்படி ஒப்பந்த காரருக்கு கொடுக்க வேண்டும்.  அந்த வகையில் ஒப்பந்தகாரருக்கு கிடைப்பது மாதம் உத்தேசமாக ரூ 2 லட்சத்திற்கு மேல்.  இது போல் ஏறக்குறைய 30000 தொழிலாளர்கள் பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, நேப்பால் பகுதியிலிருந்து வந்து இந்த பகுதிகளில் பணிபுரிகின்றனர்.
நம் பகுதி தொழிலாளர்கள் பெரும்பாலும் உடலுழைப்பு குறைந்த பணிகளை விரும்புவதுடன், இத்தகைய தொழிற்சாலைகளில் பணிபுரிய மறுக்கின்றனர். ஓசூர் சிறு தொழில் சங்கத்தை சேர்ந்த சம்பத் கூறுகையில் இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நமது கலாச்சாரத்திற்குள் படையெடுப்பு போல் நுழைந்தவர்கள், இந்தி பேசுகின்றனர், துர்கா பூஜை வழிபடுகின்றனர் என்றார்.  முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ‘விரல்கள்’ என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள ஆவணப்படத்தில் எவ்வாறு நமது தொழிலாளர்கள் நாசூக்காக இத்தகைய தொழிற்சாலையில் பணிபுரிவதை தவிர்க்கின்றனர் என்பதை படம் பிடித்துள்ளனர்.  அந்த படத்தில் இந்த தொழிற்சாலைகளில் உள்ள ஆபத்தான பணி  சூழல்கள், நிபந்தனைகள் மற்றும் அடிக்கடி அவர்களின் விரல்கள் நசுங்கி இழக்கப்படுவதை விவரிக்கிறது.  இரும்பு தகடுகளை வடிவமைக்கும் பொறிகளில் இது அடிக்கடி நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.  சில மருத்துவ உதவிகள் தவிர இழப்பீடு என்ற வகையில் இவர்களுக்கு எந்த உதவியும் தரப்படுவதில்லை.

துயரம் நிறைந்த கதைகள்

“எங்கள் காயங்களுக்கு எந்த பண உதவியும் தரப்படுவதில்லை. நாங்கள் தான் அவற்றிற்கு செலவழிக்கவேண்டியுள்ளது.  ஏறக்குறைய தினசரி நான் என் கைகளில் அடிபட்டுக் கொள்கிறேன், என்னைப் போன்று பல தொழிலாளர்கள் காயமுறுகின்றனர்” என்று கூறுகிறார் 21 வயதான மனாஸ்.  இவர் கயா மாவட்டத்திலிருந்து இங்கு வந்து கடந்த 6 மாதங்களாக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடியில் தண்ணீர் அடிபம்பிற்கான வடிவங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
மனாஸ் தெரிவிக்கையில் என்னுடன் நான் பணிபுரியும் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவரும் அசாம் மற்றும் பீகாரிலிருந்து வந்தவர்கள் என்றும், வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணி நேரம் பணிபுரிகிறோம், எங்களுக்கு மாதச் சம்பளம் 6000 என்கிறார்.  அவருடன் உடன் வசிக்கும் 19 வயது தொழிலாளி கூறுகையில் நான் கடந்த வருடம் வேறு ஒரு தொழிற்சாலைக்கு பணிக்கு வந்தேன்.  அங்கு தினமும் 12 மணிநேரம் அதிகமான பளுவை தூக்கும் பணி என்பதால் நோய் வாய்ப்பட்டு அதை விட்டுவிட்டேன் என்றார்.
“நான் டெல்லியில் ஒரு உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்.  3 மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்தேன்.  அங்கு தினமும் 16 மணி நேரப்பணிக்கு மாதம் ரூ 5000 கொடுத்தார்கள்.  இங்கு அதைக்காட்டிலும் குறைவான நேர பணிக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கிறது, இருப்பினும் நான் இங்கு தொடர விரும்பவில்லை, நான் பாதுகாப்பற்றவனாக உணர்கிறேன்.  இங்குள்ள காவல் துறையினர் எங்கள் வாழ்க்கையை துன்பத்திற்குரியதாக ஆக்குகின்றனர்” என்கிறார் நந்த்லால் என்ற கயா மாவட்ட தொழிலாளி.  இவர் 6 பேர் கொண்ட தனது குடும்பத்திற்கு மாதம் ரூ 4000 அனுப்பிவருவதாக கூறுகிறார்.  இதுவரை காவல்துறை துன்புறுத்தலைப் பற்றி எதுவும் கூறாத மனாஸ், வரிசையில் காத்திருந்தது போல், எனக்கும் இரவு 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல பயமாக இருக்கிறது.  வெளியே சென்றால் நகர்வலம் வரும் காவலர் தடுத்து நிறுத்தி புகைப்பட அடையாள சான்று கோருகிறார்.  இல்லையென்று சொன்னால் காவல் நிலையத்திற்கு விசாரிக்க அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்றார்.  கடந்த மாத வங்கி கொள்ளை நிகழ்விற்கு பிறகு காவல்துறையினர் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் சேரிகளில் புகுந்து அவர்கள் அடையாள சான்று, பணிபுரிவதற்கான அத்தாட்சி போன்றவற்றை வினவியுள்ளனர்.
முறைசாரா  தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த கீதா ராமகிருஷ்ணன் என்பவர் எங்கே, யார் இந்த பிற மாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையும், பணிச்சான்றும் வழங்குவார்கள் என கேள்வி எழுப்புகிறார்.  பிற மாநிலங்களுக்கிடையேயான புலம் பெயர் தொழிலாளர்கள் சட்டத்தில் மாநிலங்களுக்கிடையே புலம் பெயரும் தொழிலாளி என்பதற்கான விளக்கமே பிரச்சனைக்குரியதாக உள்ளது.  அந்த சட்டம் ஒரு மாநில ஒப்பந்தகாரரால் பிற மாநில நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தொழிலாளர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது.

பாதுகாப்பில்லை

இதை மொழிபெயர்த்து பார்த்தால் பெரும்பாலான இத்தகைய தொழிலாளர்கள் இந்தசட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள்.  எனவே சம்பளம், மாற்றுப் பணிக்கான படிகள், பணி நிபந்தனை, நியமன நிபந்தனை போன்ற அந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள உரிமைகள் தொடர்பாக கேள்விகள் இவர்களுக்கு எழாது. சொல்லப் போனால் 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அனைத்து கட்டுமான பணி தொழிலாளர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென்று உத்திரவிட்டது.  இரண்டு அரசாணைகள் காரணமாக இந்த தீர்ப்பு நிறைவேற்ற இயலாத சிரமத்தில் உள்ளது.
அந்த ஆணைகளில் பதிவிற்கு முன்பாக ஒவ்வொரு தொழிலாளியையும் கிராம நிர்வாக அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப் பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.  எந்த ஒரு கிராம நிர்வாக அலுவலரும் இத்தகைய மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்களை சரி பார்த்து சான்று செய்ய தயாரில்லை என்கிறார் கீதா ராமகிருஷ்ணன்.  2009ல் இரண்டு பிற மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மானபங்கப் படுத்தப்பட்ட நிகழ்விற்கு பிறகு இத்தகைய தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மாநில அளவிலான கொள்கை வரைவு செய்யப்பட்டது.  ஆனால் அது இன்னும் செயல்முறைக்கு வராமல் தூசியடைந்து உள்ளது.
மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்தவர்கள் நியாயமற்ற முறையில் அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளாகும் நபர்களாகிவிட்டனர்.  பாதிக்கப்பட்ட குழுக்களான அவர்கள் பாதுகாப்பின்றி, எவ்வித சட்ட, சமூக காப்புமின்றி உள்ளனர்.  இத்தகைய தொழிலாளர்கள் மாநிலத்தவர்களால், அரசாங்கத்தால், அதிகமான பொறாமையுள்ள தேசியவாத அமைப்புகளால் இன்னும் வேதனையோடு சொல்லப்போனால் உள்ளூர் தொழிலாளர்களால் தாக்குதலுக்கு எளிதாக இலக்காக்கப்படுகின்றனர்.
____________________________________________________________________
நன்றி – மதுமிதா தத்தா (சென்னையில் வசித்துவரும் ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர்) – தி இந்து நாளிதழ்
Come south, young man, but here be dragons
தமிழில் – சித்திரகுப்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக