புதன், 7 மார்ச், 2012

காங்கிரஸை கைவிட்ட முஸ்லீம்கள்.. மாயாவதியை கைவிட்ட தலித்கள்!


Sonia Gandhi
லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் வெறும் 3.3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை முலாயம் சிங் யாதவ் தோற்கடித்துள்ளார். இந்த 3.3 சதவீத வாக்கு வித்தியாசம் முலாயம் சிங் யாதவுக்கு கூடுதலாக 127 இடங்களைத் தந்துள்ளன.
இந்தத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீத விவரம்:
சமாஜ்வாடி கட்சி - 29.2%. இது கடந்த தேர்தலைவிட 3.3% அதிகம்
பகுஜன் சமாஜ் கட்சி - 25.9%. இது கடந்த தேர்தலைவிட 3.3% குறைவு
பாஜக - 15%
காங்கிரஸ் - 11.6%. இது கடந்த தேர்தலைவிட 3% அதிகம்
ராஷ்ட்ரீய லோக் தள் - 3.7%
சுயேச்சைகள்-மற்றவர்கள் - 16%
இதன் மூலம் சமாஜ்வாடி கட்சிக்கு 127 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 126 இடங்கள் குறைந்துவிட்டன.அதே நேரத்தில் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ள இடங்கள் வெறும் 28 தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக்தள் (விமானத்துறை அமைச்சர் அஜீத் சிங்கின் கட்சி. இவர் சரண் சிங்கின் மகன்) 9 இடங்களில் வென்றுள்ளது.

கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் காங்கிரஸ் 6 இடங்களில் கூடுதலாக வென்றிருந்தாலும், இது அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ள மாபெரும் தோல்வியாகும்.

முலாயம் பக்கம் சரிந்த முஸ்லீம்கள்:

மாநிலம் முழுவதும் முஸ்லீம்களின் வாக்குகள் முலாயம் சிங் யாதவுக்கே மிக அதிகமாகக் கிடைத்துள்ளன. இதனால் தான் காங்கிரசுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள 140 தொகுதிகளில் 72 இடங்களில் சமாஜ்வாடி கட்சி தான் வென்றுள்ளது.

முஸ்லீம்கள் அதிகமுள்ள இடங்களில் இரண்டாவது அதிகபட்ச இடங்களைப் பிடித்துள்ளது மாயாவதி. அவரது கட்சி 27 இடங்களில் வென்றுள்ளது.

காங்கிரஸ் வெறும் 11 இடங்களில் தான் வென்றுள்ளது. இதன்மூலம் காங்கிரஸை முஸ்லீம்களும் கைவிட்டுவிட்டது தெளிவாகிறது.

தலித் தொகுதிகளையும் கைப்பற்றிய முலாயம் சிங்:

அதே போல உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 84 ரிசர்வ் தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி தான் 54 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் வெறும் 17 இடங்களைத் தான் பிடித்துள்ளது.

காங்கிரசுக்கு இங்கு 4 இடங்களும் பாஜகவுக்கு வெறும் 3 இடங்களுமே கிடைத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக