சனி, 24 மார்ச், 2012

கலைஞர்: பிரதமரை வசைபாடியவர் மூன்றே நாளில் நன்றி நவின்றார்

சென்னை: "இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, தான் தான் கடிதம் எழுதினேன், தீர்மானம் கொண்டு வந்தேன், பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன், என்றெல்லாம் தற்புகழ்ச்சி பாடி, ஊரை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா' என, தி.மு.க., தலைவர்கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 20ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைக்கு எதிராக ஐ.நா., சபையில் அமெரிக்கா   கலைஞர் கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் கூறியது, ஒரு மழுப்பலான பதில்' எனக் கூறியிருந்தார். "கருணாநிதியின் கபட நாடகத்துக்கு, பிரதமரே துணைபோகும் வகையில், இலங்கையின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல், தெளிவற்ற ஒரு பதிலைக் கூறியிருப்பது வருத்தத்துக்குரியது' எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதே ஜெயலலிதா, மூன்றே நாட்களில் விடுத்த அறிக்கையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்தமைக்காக, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 20ம் தேதி பிரதமரை வசைபாடியதும் இதே ஜெயலலலிதா தான். 23ம் தேதி நன்றி கூறியிருப்பதும் அவரே. கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி, ஜெயலலிதா, தமிழக சட்டசபையில் முன்மொழிந்த தீர்மானம் என்ன தெரியுமா? "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை உடனடியாகக் கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு, மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, விடுதலைப் புலிகள் தமிழகத்திலேயே நடமாடக் கூடாது என தடுப்பதற்கு, முதல் முதலாக வழிவகுத்தார்.
புலிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டவர்களை எல்லாம், "பொடா' சட்டத்தில் கைது செய்து, சிறையில் வைத்த பெருமைக்கு உரியவர் தான் ஜெயலலிதா. தமிழர்களும், தமிழக மக்களும் அதையெல்லாம் மறந்திருப்பர் என எண்ணி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, தான் தான் கடிதம் எழுதினேன், தீர்மானம் கொண்டு வந்தேன், பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன் என்றெல்லாம் தற்புகழ்ச்சி பாடி, அறிக்கை விட்டு, ஊரை ஏமாற்ற நினைக்கிறார். பிரதமர் பற்றி கருத்து தெரிவிக்கும் ஜெயலலிதா, தேவையில்லாமல் அதில் என்னையும் இழுத்து, நான் கபட நாடகம் போடுவதாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? யார் போடுவது கபட நாடகம்?

இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது, 2009ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அவர் விடுத்த அறிக்கையில் என்ன சொன்னார்? "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று அந்நாட்டு ராணுவம் எண்ணவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை' என ஜெயலலிதா சொல்லவில்லையா? அதை எல்லாம் அப்படியே மறைத்துவிட்டு, இப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினால், அதற்குப் பெயர் தான் கபட நாடகம்! இவ்வாறு கலைஞர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக