சனி, 24 மார்ச், 2012

உச்சநீதிமன்றம்: ரம்மி விளையாடுவது சூதாட்டம் இல்லை

சென்னை, மார்ச்.23- பணம் வைத்து விளையாடும் ரம்மி சீட்டாட்டத்தை சூதாட்டமாகவே கருத வேண்டும் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகராயநகரை சேர்ந்த மகாலட்சுமி கலாச்சார சங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், சென்னை தியாகராயநகரில் 1981- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் சங்கத்தில் 49 ஆயுள்கால உறுப்பினர்களும், 235 சாதாரண உறுப்பினர்களும் உள்ளனர்.
இவர்களில் பலர் 13 சீட்டுகள் கொண்ட ரம்மி என்ற சீட்டு விளையாட்டை விளையாடுவார்கள். பணம் வைத்தும் வைக்காமலும் இந்த விளையாட்டை உறுப்பினர்கள் ஆடுவது வழக்கம்.
கடந்த 10.8.2011 அன்று பாண்டிபஜார் காவல்துறையினர் வந்து எங்கள் சங்கத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது மங்காத்தா என்ற சூதாட்டத்தை ஆடுவதாக கூறி 56 பேர் மீது வழக்கு தாக்கல் செய்தனர். 178 பண டோக்கன்களையும் கைப்பற்றினர்.

ரம்மி சீட்டு விளையாட்டு சூதாட்ட குற்றத்தின் கீழ் வராது. அது மனரீதியான திறமையை வளர்க்கும் விளையாட்டு. பந்தயமாக பணம் கட்டியோ, கட்டாமலோ ரம்மி விளையாடுவது சூதாட்டம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே ரம்மி சீட்டு விளையாடுவதை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரித்தார். அவர், `வாய்ப்பை ஏற்படுத்தி பணத்தை கொட்டிக் கொடுக்கும் மற்ற சீட்டுக்கட்டு ஆட்டங்களைப் போல், ரம்மி ஆட்டத்தை கருத முடியாது. பல திறமையான அம்சங்களை உள்ளடக்கிய ஆட்டம் என்று உச்சநீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில்  ரம்மி பற்றி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே மனுதாரர் கூறுவதுபோல், அவர்கள் ரம்மி ஆட்டம்தான் ஆடியிருந்தால் அதில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. பணம் வைத்து ரம்மி ஆடியிருந்தாலும் அது குற்றமல்ல. எனவே மனுதாரர் சங்கத்தை தொந்தரவு செய்யக்கூடாது' என்று தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ரம்மி சீட்டாட்டம், மனிதனின் திறமையை பரிசோதிக்கும் ஒரு விளையாட்டாகத்தான் உள்ளது. திறமைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் ரம்மி விளையாடும்போது அதில் காவல்துறையினர் தலையிடக் கூடாது. அதற்கு காவல்துறையினருக்கு உரிமை இல்லை.

ஆனால் திறமையை சோதிக்கும் அதே ரம்மி ஆட்டத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பணம் வைத்து விளையாடும்போது, அதை ஒரு சூதாட்டத்துக்கான ஆட்டமாகவே கருத வேண்டும். அதுபோன்ற நிலையில் சூதாட்டத்தை தடுக்கும் நோக்கத்தில், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொள்ளவும், பணம் வைத்து ரம்மி ஆடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்கு அதிகாரம் உண்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக