சனி, 24 மார்ச், 2012

கணக்கு இடிக்கிறதே!அரசின் தொலைநோக்கு கனவு நிறைவேறுமா?

தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டத்தில், அடுத்த 11 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் 15 லட்சம் கோடி ரூபாயில், பெரும்பாலும் தனியார் முதலீடுகளை சார்ந்தே உள்ளதால், அரசின் கனவு நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்டமைப்புக்கு முக்கியத்துவம்: மொத்தம் எதிர்பார்க்கப்படும் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 13.25 லட்சம் கோடி ரூபாய், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக எதிர்பார்க்கப்படுபவை. இதில், எரிசக்தித் துறையில் 4.5 லட்சம் கோடி, போக்குவரத்துத் துறையில் 3.7 லட்சம் கோடி, தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்கு 1.6 லட்சம் கோடி, நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு 2.75 லட்சம் கோடி என, எதிர்பார்க்கப்பட்டுள் ளது.
இது தவிர, பொது மற்றும் சமூக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, இதை 2023க்குள் செயல்படுத்த வேண்டுமானால், வரும் நிதி ஆண்டில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், 1.2 லட்சம் கோடி முதலீடுகள் வர வேண்டும்.
தனியார் முதலீட்டை நம்பி...: இந்த துறைகளில் அதிக அளவு செலவிடலாம் என்று எண்ணும் காரணம், தனியார் முதலீடு தான். இந்த வகை முதலீடுகள் திட்டம் லாபகரமாக இருந்தால் மட்டுமே வரும். அது மட்டுமின்றி, அரசுடன் சேர்ந்து திட்டத்தைச் செயல்படுத்துவதில், சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது, டெண்டர் எடுக்கும் முன் லஞ்சம், பணி துவங்கும் முன் லஞ்சம் போன்ற சூழல்கள் இருந்தால், தனியார் முதலீடு வராது. உதாரணத்திற்கு, மோனோ ரயில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து, பல முறை டெண்டர் திறக்கப்பட்ட போதும், அதை நிறைவேற்ற தனியாரிடம் ஆர்வம் இல்லை. காரணம், அவர்களே அந்த திட்டத்தை முடித்து, செயல்படுத்தி, மக்களிடம் கட்டணம் வசூலித்து, லாபம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உலகில் எந்த நாட்டிலும் நீண்ட தூரத்திற்கு மோனோ ரயில் செயல்படுத்தப்படவில்லை. ஏனெனில், அது லாபகரமான திட்டம் இல்லை. இதனால், தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை.

நடைமுறை சிக்கல்கள்: சென்னைக்கு அருகே கிரீன்பீல்டு விமான நிலையம் என்பது, ஆறு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டதாகும். ஆனால், இடம் தேர்வு செய்வது, நில ஆர்ஜிதம் போன்றவற்றில் பிரச்னை ஏற்பட்டது. எனவே, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதே நேரத்தில், பெங்களூரில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அறிவிப்பு செய்யப்பட்டு, திட்டமும் முடிக்கப்பட்டுவிட்டது. விரைவு சாலைகள், பிரத்யேக சரக்கு வழிச் சாலைகள், துறைமுகங்கள் மேம்பாடு போன்றவை தற்போது அறிவிக்கப்பட்டுள் ளன. இவற்றை எல்லாம் அரசு செயல்படுத்துவதற்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை. மேலும், இது போன்ற சாலைகளுக்கு நில ஆர்ஜிதம் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படும். இவற்றுக்கான வழிமுறைகள் ஏதும், தொலைநோக்கு திட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை.

நிதி ஆதாரம் எங்கே? தொலைநோக்குத் திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் முதலீடுகளில், மாநில அரசின் நிதி 60 சதவீதம் என்றும், மத்திய அரசின் நிதி 25 சதவீதம் என்றும், தனியார் நிதி 15 சதவீதம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசின் பங்கு குறைந்து, தனியார் பங்கீடு வரும் காலத்தில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 லட்சம் கோடி ரூபாயில், 60 சதவீதம் மாநில அரசு பங்கு என்றால், ஒன்பது லட்சம் கோடி ரூபாய், அரசின் முதலீடாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசின் ஆண்டு பட்ஜெட்டே 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் தான் உள்ளது. இதில், கட்டமைப்பு முதலீடுகளை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 2012-13க்கான மத்திய பட்ஜெட்டில், உள்கட்டமைப்புத் துறைக்கு தனியார் முதலீடை ஊக்குவிக்க சலுகைகள் அளித்து, வரும் நிதி ஆண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வரும் என, எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசாலே அவ்வளவு நிதி மட்டும் தான் திரட்ட முடியும் என்ற நிலையில், மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திரட்ட முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

21 கி.மீ.,க்கு 10 ஆண்டுகள்! தொலைநோக்குத் திட்டத்தில் போக்குவரத்து வசதியை பொறுத்தவரை, சென்னை - கோவை - மதுரை - கன்னியாகுமரி இடையே அதிவேக ரயில் இயக்கப்படும் என்றும், சென்னை - தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழிப் பாதை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - மதுரை இடையே இருவழி ரயில் பாதை அமைக்க வேண்டுமென, 20 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால், இந்த திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. அப்படியிருக்கும் போது, அடுத்த 11 ஆண்டுகளில், சென்னை - கோவை - மதுரை - கன்னியாகுமரி இடையே அதிவேக ரயில் போக்குவரத்து என்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, 2,000 கி.மீ., நெடுஞ்சாலை, ஆறு மற்றும் எட்டு வழிச்சாலையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், சிறுசேரி வரையிலான நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கும் பணியை முடிக்கவே, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. 21 கி.மீ., தூரத்தை முடிக்க இவ்வளவு காலம் என்றால், 2,000 கி.மீ., தூரத்தை 11 ஆண்டுகளில், ஆறு மற்றும் எட்டு வழிச்சாலையாக மாற்றுவது என்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக