வெள்ளி, 2 மார்ச், 2012

சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் பொதுவானது உறவினரை கைது செய்ய சொன்ன மம்தா

கொல்கத்தா, மார்ச் 1- மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தாபானர்ஜியின் உறவினர் ஆகாஷ்பானர்ஜி. இவர் கொல்கத்தாவில் உள்ள கிட்டர்போர் பகுதியில் இரண்டு நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் போக்குவரத்து விதியை மீறியதால் அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் காரை நிறுத்துமாறு கூறினார்.
இதனால் கோபமடைந்த ஆகாஷ்பானர்ஜி காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் நான் யார் தெரியுமா? மம்தாபானர்ஜியின் நெருங்கிய உறவினர் என்று கூறியபடி காவலரை கடுமையாகத் தாக்கினார்.
இதனால் காவலர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் ஆகாஷ் பானர்ஜி தன்னை தாக்கியது பற்றி உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அடுத்த நிமிடமே உயர் அதிகாரிகள் முதல்வர் மம்தாபானர்ஜியிடம், ஆகாஷ் பானர்ஜி காவல்காரரை தாக்கியது பற்றி கூறினார்.
இதை கேட்டதும் சற்று அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி, சட்டம்- ஒழுங்கு அனைவருக்கும் பொதுவானது. ஆகாஷ் பானர்ஜியை உடனே கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று ஆகாஷ்பானர்ஜி உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக