வெள்ளி, 2 மார்ச், 2012

நதிகள் இணைப்புத் திட்டத்தை ஏற்க மாட்டோம்: கேரளா

Oommen Chand

திருவனந்தபுரம்: நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார். நதிகள் இணைப்பை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலமான கேரளா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கேரள நதிகளை இணைக்க முடியாது என்று முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் உம்மன் சாண்டி கூறியதாவது:
நதிநீர் இணைப்பு விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரள மாநிலத்திற்கு பொருந்தாது. ஏனென்றால், இதுவரையில் நதிநீர் இணைப்பு தொடர்பாக எந்தவிதமான ஒப்புதலையும் கேரள அரசு வழங்கவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நதிநீர் இணைப்பை மேற்கொண்டால் கேரள மாநிலம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, நதிநீர் இணைப்பு தொடர்பான எந்தவித திட்டத்தற்கும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காது என்றார் அவர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தனிச் சட்டம் போட்டு ஒன்றுமில்லாமல் செய்தது கேரளா என்பது நினைவிருக்கலாம். இப்போது தமிழகத்திற்குப் பயன் வந்து விடுமோ என்ற ஒரே காரணத்தை மனதில் கொண்டே நதிகளை இணைக்க முடியாது என்று அது கூறியுள்ளதாக கருதப்படுகிறது.

கேரளாவில் உள்ள பெரும்பாலான நதிகள் வீணாக கடலில் போய்த்தான் கலந்து வருகின்றன என்பது நினைவிருக்கலாம். தண்ணீர் வீணாகப் போய் கடலில் கலந்தாலும் கலக்கும், தமிழகத்திற்குத் தர மாட்டோம் என்பதுதான் கேரளாவின் நிலைப்பாடாக காலம் காலமாக உள்ளது.

கப்பல் வழக்கு

மேலும் இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாவலர்களால், இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், நீதிமன்றத்துக்கு வெளியே எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

"இந்த விவகாரத்தில் இத்தாலி ஊடகங்கள் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகின்றன'' என்பதும் உம்மன் சாண்டியின் குற்றச்சாட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக