வெள்ளி, 2 மார்ச், 2012

சசிகலா, கோர்ட்டுக்கு கிளி கொண்டுவர கோரிக்கை விடவில்லை!

Viruvirupu
“சசிகலா, தம்மைச் சுற்றி எத்தனையோ விலை உயர்ந்த சொத்துக்கள் இருந்தும், அவற்றின் மதிப்பு எவ்வளவு என்றுகூட தெரியாத ‘துறவு நிலை வாழ்க்கை’ வாழ்ந்திருக்கிறாரே!” இவ்வாறு ஆச்சரியப்படும் வகையில் நேற்று சசிகலாவின் பதில்கள் பெங்களூரு கோர்ட்டில் அமைந்திருந்தன.
வழக்கில் சசிகலா தொடர்பான ஆரம்பக் கட்ட கேள்விகள் முடிந்து, இப்போது அவர்கள் தரப்பிலுள்ள சொத்துக்கள் தொடர்பான கேள்விகள் தொடங்கி விட்டன. இதில் நிச்சயம் ஆயிரக் கணக்கான கேள்விகள் இருக்கும். காரணம், கோர்ட் வைத்திருக்கும் சொத்துப் பட்டியலின் அளவு, டெலிபோன் டைரக்டரியைவிட சற்றுத்தான் சிறியது.
“தெரியாது” என்ற பதில்தான் வரப்போகின்றது என்று தெரிந்தும், பட்டியலில் உள்ள ஒவ்வொரு சொத்தின் பெயரைச் சொல்லியும், “தெரியுமா? தெரியுமா?” என்று கேட்க வேண்டியது சட்ட ரீதியாக அவசியமாகிறது.
“போயஸ் கார்டன் கட்டடத்தின் மொத்த மதிப்பு, 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு கொடுக்கப்பட்டது தெரியுமா?”
“தெரியாது”

சிறுதாவூர் பங்களா மதிப்பீடு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய், பையனூர் பங்களா மதிப்பீடு, ஒன்றே கால் கோடி ரூபாய், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தின் மதிப்பு, 6 கோடியே 40 லட்சம் ரூபாய்.. என்று தொடங்கி, நீலாங்கரை ராஜா நகரிலுள்ள பிளாட்கள், பத்மநாபநகரில் உள்ள வீடுகள், சென்னை நந்தனம் பகுதியில் வாங்கிய சொத்துகள், வேல்ஸ் கார்டன் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள பிளாட்கள், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை கட்டடம், ஈ.வி.கே. தொழில்பேட்டையில் உள்ள நான்கு ஷெட்கள்… என்று வரிசையா ஒவ்வொரு சொத்தின் விபரங்களையும் சொல்லி கேள்வி கேட்டவர்தான் வாய் வறண்டு, தாகம் எடுத்து, களைப்பு அடைந்திருப்பார்.
பாவம் அப்பாவி அபலை சசிகலாவுக்கு இவற்றின் மதிப்பு ஏதும் தெரிந்திருக்கவில்லை. “தெரியாது” என்ற ஒன்றைச் சொல்லில் தனது பதிலை முடித்துக் கொண்டார்.
ஆனால், சசிகலா தரப்பு வக்கீல் சட்டத்துக்கு உரிய மரியாதை கொடுப்பதை அங்கு காண முடிந்தது. ஏனென்றால் வக்கீல், “எனது கட்சிக்காரர் “தெரியாது” என்ற ஒரே பதிலை சொல்வதால், அந்த ஒரு வார்த்தையை ஒலிப்பதிவு செய்து, அவ்வப்போது பிளே பண்ண அனுமதிக்க வேண்டும்.
அதற்கு அனுமதி இல்லாவிட்டால் ஒரு கிளியையாவது கோர்ட்டுக்கு கொண்டுவர அனுமதிக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்யாமல், சட்டத்துக்கு மரியாதை கொடுத்திருந்தார்.
இருந்தாலும் சசிகலா உஷார் பார்ட்டிதான். “ஈக்காட்டு தாங்கலில் ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் கட்டடத்தின் மதிப்பீடு செய்யப்பட்டது தெரியுமா?” என்ற கேள்வி கேட்டபோதும், கிளிப்பிள்ளை போல “தெரியாது” என்று பதில் சொல்லவில்லை.
“ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் இயங்கியதே ஒரு வாடகைக் கட்டடத்தில். அந்தக் கட்டடம் யாருடையது என்றுகூட தெரியாமல், மதிப்பீடு செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கச்சிதமாக ஒரு ஸ்கொயர் கட் அடித்தார்.
அய்! சின்னம்மாவுக்கு அந்த விஷயமாவது தெரிந்திருக்கிறதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக