செவ்வாய், 6 மார்ச், 2012

அன்னா குழுவால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை

டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா குழுவினர் காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தும் அக்கட்சி 5 மாநிலங்களிலும் கடந்த சட்டசபை தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மணிப்பூரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் கோவா பாஜகவுக்கு கிடைத்துள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகண்டில் கடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பிடித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலம் ஹிஸாரில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது. இதையடுத்து சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் செய்த பிரச்சாரத்தின் விளைவாகவே காங்கிரஸ் படுதோல்வியடைந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் அதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
இதையடுத்து உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப் போவதாக அன்னா அறிவித்தார். ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவருக்குப் பதில் அவரது குழுவினர் பிரச்சாரம் செய்தனர்.
ஹிஸாரைப் போன்று 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என்று அன்னா குழுவினர் தெரிவித்திருந்தனர். இருப்பினும் எந்தக் கட்சிக்கும் அன்னா குழுவினரால் பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்து ஐந்து மாநிலத் தேர்தல் பெரும் தோல்விதான் என்றாலும் கூட கடந்த தேர்தலில் வாங்கியதை விட கூடுதல் இடங்களையே உ.பியில் பெற்றுள்ளது.
கட்சி ரீதியாக பார்த்துதான் மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர் என்பதும், அன்னா குழுவினரின் பிரசாரம் மக்களை பாதிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக