புதன், 21 மார்ச், 2012

ஆஸ்பத்திரி: பணம் கேட்டதை யாரிடமும் சொல்ல வேண்டாம்..மருத்துவ காப்பீட்டு திட்ட

விருதுநகர் :மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற, நோயாளிகளிடம் பணம் கேட்கும் ஆஸ்பத்திரிகளால், அத்திட்டத்தின் நோக்கமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில், விருதுநகரை சேர்ந்த தொழிலாளி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் உயிரை காக்க போராடி வருகிறார்.
விருதுநகர் அல்லம்பட்டி அனுமன்நகரை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி பால்ராஜ், 52, மனைவி மாரீஸ்வரி, 45. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ காப்பீட்டு திட்ட உதவி மையத்தை நாடினார். அவர்கள், மதுரை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றிற்கு அனுப்பி வைத்தனர். அதன்படி அங்கு மனைவியை அழைத்து சென்று, காப்பீட்டு அடையாள அட்டையை காண்பித்த பால்ராஜிடம், ""ரூ.10 ஆயிரம் கட்டினால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிப்போம்,'' என டாக்டர் கூற
இதன் தகவலை உதவிமையத்தில் தெரிவித்தார். அதே ஆஸ்பத்திரிக்கு போன் செய்த உதவி மையத்தினர், மீண்டும் அதே ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு, கூறினர். மீண்டும் சென்றபோது, "பணம் கேட்டதை யாரிடமும் சொல்ல வேண்டாம்,' என கூறி சிகிச்சைக்கும் மறுத்துவிட்டனர். இதனால் இத்திட்டத்தில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரியை அணுகியபோது , " நோய் முற்றிய நிலையில் வந்துள்ளீர்கள், இதற்கு அரசு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை பெற வசதியுள்ளது,' என டாக்டர்கள் கூறி திருப்பி அனுப்பினர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி சென்ற பால்ராஜ், அங்கு கொடுத்த மாத்திரைகளை பெற்றப்படி, வேறு வழியின்றி மனைவியுடன் விருதுநகருக்கே திரும்பினார். காப்பீட்டு அடையாள அட்டை இருந்தும், மனைவியின் உயிரை காக்க முடியாது விரக்தியில் உள்ளார் பால்ராஜ்.

அவர் கூறுகையில் ,""கடந்த அரசு கொண்டு வந்த காப்பீட்டு திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததால், தற்போதைய அரசு புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. இதிலும் பல்வேறு குளறுப்படிகள் உள்ளதை நானே நேரில் புரிந்து கொண்டேன் . எனக்கு நேர்ந்த இந்த துயரம் வேறு யாருக்கும் நேரக்கூடாது,'' என்றார்.

சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், ""காப்பீட்டு திட்ட நோயாளிகளிடம் பணம் கேட்பது தவறு. இதுமுற்றிலும் இலவசமாக செய்யப்பட வேண்டிய சிகிச்சை. இதற்கான தொகை போதுமானதாக இல்லை என்றால், இன்சூரன்ஸ் நிறுவனத்தைத்தான் அணுக வேண்டும். புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகள், அரசு காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கப்படும். மேலும், நோயாளிக்கும் சிகிச்சைக்கான வசதி செய்து தரப்படும்,'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக