சனி, 24 மார்ச், 2012

கனிமொழி:சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. எனவே, இந்தக் குற்றச்சாட்டுகளை நீக்கவேண்டும்' என்று கோரி, டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், கடந்த ஆண்டு மே மாதம், கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், குற்றச் சதிக்காகவும் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு நவம்பரில் கனிமொழிக்கு சி.பி.ஐ., கோர்ட் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, தற்போது வரை வழக்கு விசாரணையில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று கனிமொழி சார்பில் டில்லி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தபோது, கலைஞர் "டிவி'க்காக 200 கோடி ரூபாய் பெறப்பட்டது என்பது என் மீது சி.பி.ஐ., கூறுகிற குற்றச்சாட்டு. இந்த பணப்பரிமாற்றம், 2008 டிசம்பர் மாதத்திலிருந்து 2009 ஆகஸ்ட் மாதத்திற்குள் நடந்தது என்றும் கூறியுள்ளது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் நான் கலைஞர் "டிவி'யில் 20 சதவீத பங்குகள் மட்டுமே வைத்திருந்தேன். கலைஞர் "டிவி' எடுத்த முக்கிய முடிவுகளில் நான் பங்கேற்கவில்லை. இந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக, எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. மேலும், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் மட்டும்தான், கலைஞர் "டிவி'யின் இயக்குனராக இருந்தேன். நிதி தொடர்பாக அப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை.

கலைஞர் "டிவி'யின் மூளையாகச் செயல்பட்டதாக சி.பி.ஐ., கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தினால், நான் எந்த ஆதாயமும் பேற்றேன் என்றோ, அந்தப் பணம் என் வங்கிக் கணக்கில் இருந்தது என்றோ சி.பி.ஐ., குற்றச்சாட்டில் எதுவும் கூறப்படவில்லை. எனவே, என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவற்றை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை டில்லி ஐகோர்ட் ஏற்றுக் கொண்டால், திங்கட்கிழமை விசாரணைக்கு வரும்.

- நமது டில்லி நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக