வெள்ளி, 23 மார்ச், 2012

G.D.Naidu பஸ்ஸில் தானாகவே டிக்கெட் தரும் மெஷினை கண்டுபிடித்தார். கணக்கு போடும் கால்குலேட்டரை உருவாக்கினார்.

இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் எனவும், அகிலம் போற்றும் அதிசய மனிதர் எனவும் புகழப்படுகிற ஜி.டி.நாயுடு மிகப் பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல, பிஸினஸ் உலகில் தன் முத்திரையை ஆழமாகவே பதித்தவர். நாயுடு சமூகம் தந்த இந்த பிஸினஸ்மேனை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

கோபால்சாமி துரைசாமி நாயுடு (சுருக்கமாக ஜி.டி.நாயுடு) 1893-ல் பிறந்தார். கோவைக்குப் பக்கத்தில் சூலூருக்கு அருகில் இருக்கிற ஒரு குக்கிராமம்தான் கலங்கல். இந்த கிராமத்தில் ஜி.டி.நாயுடுவின் தந்தை ஓரளவுக்குப் பெரிய விவசாயி. நாற்பது ஏக்கரில் விவசாயம் செய்த கொண்டிருந்தார்.ஜி.டி.நாயுடுவுக்கு சிறுவயது முதலே பள்ளிப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. பள்ளிக்கூடத்தில், இல்லாத சேஷ்டைகளை எல்லாம் செய்தார். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்கு முழுக்குப் போட்டு விட்டார்.
ஆனால், பிற்பாடுதான் கல்வி என்பது ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய தேவை என்பதை உணர்ந்தார். அதனால், தனது பிற்காலத்தில் கோவையில் சில முக்கிய கல்வி நிலையங்களைத் திறந்தார்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஜி.டி.நாயுடுவிற்கு, தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்கள் கிளர்ச்சி தருவதாக இருந்தது. அந்த சமயத்தில் கலங்கல் கிராமத்திற்கு நில சர்வே செய்வதற்காக லாங்கார்ஷயர் என்கிற வெள்ளைக்காரர் ஒரு மோட்டார் பைக்கில் வந்தார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம்.
கிராமத்திற்கு வந்த இந்த மோட்டார் பைக் திடீரென ரிப்பேரானது. அதை சரிசெய்ய ஜி.டி.நாயுடுவிடம் கொஞ்சம் பெட்ரோலையும் கந்தல் துணியையும் கேட்டார் அந்த வெள்ளைக்காரர். அந்த ரிப்பேரை அவர் எப்படி சரி செய்கிறார் என்பதை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜி.டி.நாயுடு. பிறகு, அந்த பைக்கை விலைக்குத் தரமுடியுமா? என அந்த வெள்ளைக்காரரிடம் கேட்க, ''தம்பி, இதை வாங்குற அளவுக்கு உன்னிடம் பணம் இருக்கா?'' என்று கேட்டார் வெள்ளைக்காரர்.
பணம் சம்பாதிக்க வேண்டியதன் அவசியத்தை அப்போதுதான் அவர் உணர்ந்தார். உடனடியாக கோவைக்குச் சென்று ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சில ஆண்டுகள் கடுமையாக உழைத்ததில் கிட்டத்தட்ட 400 ரூபாய் சேர்த்தார். அப்படி சேமித்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் அந்த வெள்ளைக்காரரைச் சந்தித்து, அவர் வைத்திருந்த பைக்கை விலைக்கு வாங்கினார்.
பைக்கை வாங்கியவுடன் அதை எடுத்துக் கொண்டு தன் கிராமத்திற்கு வந்தார். அந்த பைக்கை தனித்தனியாக பிரித்துப் போட்டார். மீண்டும் சேர்த்தார். மீண்டும் பிரித்தார். இப்படி பலமுறை செய்ததில், மோட்டார் பைக் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய அத்தனை விஷயங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.
இப்படி சுற்றிக் கொண்டிருந்த ஜி.டி.நாயுடுவை பருத்தி விவசாயம் பக்கம் திருப்பிவிட்டார் அவரது அப்பா. காரணம், அந்த சமயத்தில் இந்தியாவிலேயே பருத்தி வர்த்தகத்தில் முக்கியமான நகரமாக மாறியிருந்தது கோவை. முதலில் பருத்தி விவசாயம் செய்த ஜி.டி.நாயுடு, பிற்பாடு பருத்தி வர்த்தகத்தில் இறங்கினார்.
தரமான பருத்தியை சட்டென கண்டுபிடித்த அவரது திறமை, பருத்தி வர்த்தகத்தில் அவரை பெரும் செல்வந்தராக மாற்றியது. பருத்தி வர்த்தகத்தை இன்னும் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று நினைத்து மும்பை சென்றார். ஆனால், மும்பையில் பருத்தி வர்த்தகம் என்பது ஏறக்குறைய ஒரு சூதாட்டமாகவே மாறியிருந்தது. சூதுவாது தெரியாமல் இந்த ஆட்டத்தில் சிக்கியதன் விளைவு, மிகப் பெரிய நஷ்டமடைந்தார் ஜி.டி.நாயுடு.
அதுவரை சம்பாதித்த பணம் அத்தனையையும் இழந்து, ராபர்ட் ஸ்டேன்ஸ் என்கிற வெள்ளைக்காரர் நடத்திய கம்பெனியில் மெக்கானிக்-ஆக வேலை செய்யத் தயாராக இருந்தார் ஜி.டி.நாயுடு. அந்த சமயத்தில் இந்தியாவில் பஸ்களை விற்றுக் கொண்டிருந்தார் ராபர்ட் ஸ்டேன்ஸ். ஒரு பஸ்ஸின் விலை நான்காயிரம் ரூபாய்.
பஸ்களின் வருகை மூலம் மக்கள் இன்னும் அதிக அளவில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்வார்கள் என்பதைச் சரியாகவே கணித்தார் ஜி.டி.நாயுடு. தவிர, அந்த சமயத்தில் கோவையில் ஒரு பஸ்கூட இல்லை. எனவே, ஒரு பஸ்ஸை வாங்கி பொள்ளாச்சி - பழநிக்கு இடையே ஓட்ட முடிவு செய்தார். காரணம், அந்த சமயத்தில் பொள்ளாச்சியிலிருந்து பல ஆயிரம் பேர் மாட்டு வண்டி மூலமாக நாள் கணக்கில் பயணம் செய்து பழநிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
சரி, பஸ் வாங்க பணத்திற்கு எங்கே போவது? நல்ல வேளையாக பஸ் கம்பெனி அதிபர் ராபர்ட் ஸ்டேன்ஸே இரண்டாயிரம் ரூபாய் பணம் தந்தார். தனக்குத் தெரிந்த மற்ற நண்பர்களிடமும் பணத்தை புரட்டி எடுத்து, ஒரு பஸ்ஸை வாங்கி, பொள்ளாச்சியிலிருந்து பழநிக்கு அவரே ஓட்டிச் சென்று வந்தார். யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்கிற பெயரில் அவர் நடத்திய இந்த போக்குவரத்துக் கம்பெனி நல்ல லாபத்தைத் தந்தது.
1920-ல் அவரிடம் இருந்தது ஒரே ஒரு பஸ்தான். 1924-ல் 24 பஸ்ஸாக உயர்ந்தது. 1933-ல் அவரிடம் இருந்த பஸ்களின் எண்ணிக்கை 280. ஒரு கட்டத்தில் 600 பஸ்களுக்கும் மேலே வைத்திருந்தார் ஜி.டி.நாயுடு.
இந்த கம்பெனி நன்கு வளர்ந்த சமயத்தில் தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக வடிவம் தர ஆரம்பித்தார். முக சவரம் செய்து கொள்ளும் மின் சாதனமான எலெக்ட்ரானிக் ரேஸரைக் கண்டுபிடித்தார். பஸ்ஸில் தானாகவே டிக்கெட் தரும் மெஷினை கண்டுபிடித்தார். கணக்கு போடும் கால்குலேட்டரை உருவாக்கினார்.
ஜி.டி.நாயுடு ஒரு கேமிரா பிரியர். படம் எடுக்கும் கேமிராவில் உள்ள தூரத்தை சரி செய்யும் லென்ஸை கண்டுபிடித்தார். 1930 வாக்கில் அவர் பல்வேறு மேற்கத்திய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது பல்வேறு காட்சிகளை படமெடுத்தார். ஜெர்மனிக்குப் போனபோது ஹிட்லருடன் சேர்ந்து படமெடுத்துக் கொண்டார்.
ஜி.டி.நாயுடு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை எனினும், 1936-ல் நடந்த கோவை புரவின்ஷியல் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இதன் விளைவாக, மோசடி செய்ய முடியாத மின் வாக்குப்பதிவு இயந்திரத்தை அப்போதே தயாரித்தார்.
1941-ல் அவர் ஒரு ரேடியோவை உருவாக்கி, எல்லோரும் வாங்கும் வகையில் 70 ரூபாயில் கொடுக்க முடிவு செய்தார். இப்போது வந்திருக்கும் நானோ கார் போல 1940-லேயே வெறும் 2,000 ரூபாயில் இரண்டு சீட்கள் கொண்ட காரை உருவாக்கினார். ஆனால், இந்த புதுமையான முயற்சிக்கு அப்போதைய அரசாங்கம் அனுமதி அளிக்காததால், குறைந்த விலை கார் முயற்சி அப்படியே நின்று போனது.
தவிர, போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வு பண்ணை ஒன்றையும் அமைத்தார். இதில் அதிக விளைச்சல் தரக்கூடிய பருத்தி விதைகள் உள்பட பல்வேறு விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், மைசூர் அணையைக் கட்டிய விஸ்வேஸ்வரய்யா உள்பட பல அறிஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.
1944-ல் ஐம்பது வயதுகூட நிரம்பாத நிலையிலேயே தொழில் துறையிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் ஜி.டி.நாயுடு. 1945-ல் ஆர்தர் ஹோப் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கி, 1949-ல் அதை அரசாங்கத்திற்குத் தானமாக தந்தார்.
1974-ல் ஜி.டி.நாயுடு இறந்தாலும், அவரது வாரிசுகள் இன்றளவும் தொடர்ந்து பிஸினஸ் உலகில் சாதனை படைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
(அறிவோம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக