செவ்வாய், 6 மார்ச், 2012

கலாமை 'செக்கப்' செய்யலாம், ஆனால் தலாய் லாமாவை தொடக் கூடாது- மத்திய அரசு

Abdul Kalam Dalailama
டெல்லி: வெளிநாட்டு விமான நிலையங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனையின்றி அனுமதிக்கப்படும் விவிஐபிக்களின் எண்ணிக்கையை 4 முதல் 6 வரை குறைப்பது குறித்து இந்திய விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகின்றது.
இந்திய விமான நிலையங்களில் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் உள்ள விவிஐபிக்களை சோதனைக்கு உட்படுத்துவது இல்லை. ஆனால் வெளிநாட்டு விமான நிலையங்களில் நாட்டின் முக்கிய தலைவர்களை தவிர, அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இந்த நிலையில் இந்திய விமான போக்குவரத்து துறை சார்பில் வெளிநாட்டு விமான நிலையங்களில் சோதனையின்றி அனுமதிக்குமாறு நீண்ட பட்டியல் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இதில் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், முன்னாள் குடியரசு தலைவர்கள், முன்னாள் துணை குடியரசு தலைவர்கள், எம்.பி.க்கள், இந்திய தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களவை, மக்களவை எதிர்கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை துணை சபாநாயகர், மக்களவை துணை சபாநாயகர், மாநிலங்களின் ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய இணை அமைச்சர்கள் ஆகியோர் உள்ளனர்.

ஆனால் முன்னாள் குடியரசு தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய தலைமை நீதிபதி ஆகியோரை விமான நிலையங்களில் சோதனையின்றி அனுமதிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. மேலும் இங்கிலாந்து விமான போக்குவரத்து துறை சார்பிலும் இந்தியா அளித்துள்ள நீண்ட பட்டியலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட பட்டியலில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், சபாநாயகர் மற்றும் திபெத் மதத் தலைவர் தலாய் லாமா ஆகியோரை தவிர மற்றவர்கள் அனைவரையும் நீக்குவது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து துறை ஆலோசித்து வருகின்றது.

இது குறித்து விமான போக்குவரத்து செயலாளர் டாக்டர் நாசீம் சைதி கூறியதாவது,

விமான நிலையத்தில் சோதனை இல்லாமல் அனுமதிக்கப்படும் விவிஐபிக்களின் எண்ணிக்கையை 4 முதல் 6 வரை குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

இதைப் பார்த்தால் அப்துல் கலாம் போன்ற முன்னாள் குடியரசுத் தலைவர்களை இனிமேல் நிற்க வைத்து அமெரிக்காவில் சோதனையிட மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுவது போல தெரிகிறது. தலாய் லாமாவை விட நமது முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கீழே போய் விட்டார்களா, என்ன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக