வெள்ளி, 9 மார்ச், 2012

ஒசாமாவுக்கு மொத்தம் 6 மனைவிகள்.முதல் மனைவி தான் காட்டிக் கொடுத்ததார்

osama Bin Laden
இஸ்லாமாபாத்: அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது முதல் மனைவி தான் அமெரிக்கப் படைகளிடம் காட்டிக் கொடுத்ததாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் ஒரு வீட்டை அமெரிக்கப் படைகள் தாக்கி, ஒசாமா பின் லேடனைக் கொன்றன. அந்த வீட்டில் ஒசாமாவின் 3 மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகள், பாதுகாவலர்கள் உள்பட 27 பேர் இருந்தனர்.
இதில் ஒரு பெண், பாதுகாவலர்கள், ஒசாமாவின் ஒரு மகன் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட, மீதியிருந்தவர்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது அமெரிக்கா.
இதையடுத்து ஒசாமாவின் மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தியது.

மேலும் இந்த முழு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செளகத் காதிர் நியமிக்கப்பட்டார். இப்போதைய பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானிக்கு மிக நெருக்கமான காதிர், அபோடாபாத் சென்றும் விசாரணை நடத்தினார்.

மேலும் ஒசாமாவின் மனைவிகள், குழந்தைகளிடமும் தீவிர விசாரணை நடத்தினார். இதில், ஒசாமாவை அமெரிக்கப் படைகளுக்குக் காட்டித் தந்தது செளதி அரேபியாவைச் சேர்ந்த அவரது முதல் மனைவியான கைரியா சபர் (வயது 62) தான் என்று தெரிய வந்ததாக காதிர் தெரிவித்துள்ளார்.

தனது விசாரணை குறித்து அவர் கூறுகையில், 2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் தோரா போரா மலைப் பகுதிகளில் குகைகளிலேயே பதுங்கியிருந்தார் ஒசாமா. அவருடன் அவரது குடும்பத்தினரும் இருந்துள்ளனர். பின்னர் பாகிஸ்தானின் தெற்கு வசீர்ஸ்தான் பகுதிக்குள் வந்துள்ளனர்.

2002ம் ஆண்டில் ஒசாமாவுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சையும் நடந்துள்ளதாகத் தெரிகிறது. பின்னர் கொஞ்ச காலம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்துவிட்டு 2004ம் ஆண்டில் வடக்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதிக்குள் வந்துள்ளார் ஒசாமா. அங்கும் ஹரிப்பூர் மாவட்டத்திலும் சில காலம் வசித்துள்ளனர்.

பின்னர் அபோடாபாத்தில் பெரிய வீடு கட்டி முடிக்கப்பட்டு, 2005ம் ஆண்டு மே மாதத்தில் அங்கு குடியேறியுள்ளனர்.

ஒசாமாவுக்கு மொத்தம் 6 மனைவிகள். இதில் முதல் 3 பேர் யார், யார் என்பதோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதோ தெரியவில்லை. நியூயார்க் தாக்குதலை நடத்தியபோது ஒசாமாவுடன் இருந்தது 2 மனைவிகள் தான். இன்னொருவரான (4வது மனைவி) கைரியா சபர் ஈரானில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

ஆனால், 2010ம் ஆண்டில் அவரை ஈரான் விடுவித்தது. இதையடுத்து 2011ம் ஆண்டில் அவரும் பின்லேடனுடன் வந்து இணைந்து கொண்டார்.

அவர் பின்லேடனின் வீட்டுக்குள் வருவரை எல்லாமே நன்றாகவே போயுள்ளது. ஒசாமாவுடன் அவரது 5வது மனைவி ஷிகாம் (செளதியைச் சேர்ந்த இவரது வயது 54), அவரது 3 குழந்தைகள், கடைசி மனைவியான அமல் (31), அவரது ஐந்து குழந்தைகள் அபோடாபாத் வீட்டில் 5 ஆண்டுகள் வசித்து வந்த நிலையில், ஈரானில் இருந்து விடுவிக்கப்பட்ட கைரியா சபர் 2011ம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் வந்து ஒசாமாவுடன் இணைந்தார்.

ஆனால், கைரியா சபரை ஒசாமாவும் நம்பவில்லை, மற்ற மனைவிகளும் நம்பவில்லை. தன்னை சபர் எந்த நேரமும் காட்டிக் கொடுக்கலாம் என்பதால், மற்ற 2 மனைவிகளையும் குழந்தைகளோடு வேறு இடம் சென்றுவிடுமாறு ஒசாமா கூறியிருக்கிறார். ஆனால், அதை அவர்கள் கேட்கவில்லை.

கைரியா அந்த வீட்டுக்குள் வந்த பின்னர் தான் ஒசாமா அங்கிருக்கும் தகவல் அமெரிக்க உளவுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. மற்றபடி ஒசாமாவுக்கு கடிதம் எடுத்துச் செல்லும் நபரை கண்காணித்துத் தான் ஒசாமாவை கண்டுபிடித்தோம் என அமெரிக்கா சொல்வது பொய்.

மேலும் ஒசாமா பின் லேடனுக்கு குறைந்த வயதிலேயே மறதி நோயும், சிறுநீரக பிரச்சனையும் இருந்ததால் உடல் நிலையும் மிகவும் நலிவுற்றுவிட்டது. மேலும் degenerative disease எனப்படும் உடல் சிதைவு நோயும் இருந்ததால், அவருக்கு அல்-கொய்தாவின் தலைமை கவுன்சிலான ஷூரா ("shura") ஒய்வு தந்துவிட்டது.

இந்த மூன்று மனைவிகளில் கடைசி இருவர் இணக்கமாக இருந்தாலும், கைரியா சபருக்கும் இவர்களுக்கும் இடையே எப்போதும் மோதல் இருந்தே வந்துள்ளது. வீட்டுக்குள் நடக்கும் சண்டைகளைத் தீர்க்க முடியாத அளவுக்கு உடல் நலமில்லாமல் தான் ஒசாமா இருந்துள்ளார்.

இவ்வாறு பிரிகேடியர் செளகத் காதிர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக