சனி, 17 மார்ச், 2012

250 கோடி மோசடி: நடிகை ஜெனிலியா உள்பட 5 பேர் மீது வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

ஹைதராபாத் கட்டுமான நிறுவனத்தின் ரூ 250 கோடி மோசடியில், அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கும் நடிகை ஜெனிலியா உள்பட ஐவர் மீது வழக்கு தொடர ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அஞ்சனிபுத்ரா இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தூதராக உள்ளார் நடிகை ஜெனிலியா.
ரூ 250 கோடி நிதி மோசடியில் சிக்கியுள்ளது இந்த நிறுவனம். வீடுகட்டித் தருவதாகக் கூறி 500 பேரிடம் பெரும் தொகையை வசூலித்தது இந்த நிறுவனம்.

இப்படி பணம் கொடுத்தவர்களில் ஒருவரான சிஎச் திருப்பாதையா என்பவர், ஹைதராபாத்தில் உள்ள பெருநகர தலைமை முதல் வகுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், "2008-ல் அஞ்சனிபுத்ரா நிறுவனத்தின் இயக்குநரான சுதர்சன் குமார் ரெட்டி தனது நிறுவனத்தின் வீட்டு வசதித் திட்டத்தைச் சொல்லி, அதில் வீடு வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால், ஒரு தனி வீடு மற்றும் மாடிவீடு ஆகிய இரு வீடுகளுக்கு ரூ.54 லட்சம் கொடுத்தேன். ஆனால் அந்த நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி வீடு கட்டித்தரவில்லை.

சந்தேகத்தில் நிறுவன அலுவலகத்துப் போனேன். அது பூட்டப்பட்டிருந்தது. எனக்கு வீடு கட்டித்தருவதாகக் கூறப்பட்ட இடத்துக்குப் போய் விசாரித்ததில் அது வேறு ஒருவருக்குச் சொந்தம் என்று தெரிந்தது. என்னைப் போல பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதில் இழந்துள்ளனர். இந்த வீட்டு வசதித் திட்டம் தொடர்பான அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீட்டு வசதித் திட்டத்துக்கு விளம்பரத் தூதராக இருந்தவர் நடிகை ஜெனிலியாதான்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மோசடியில் நடிகை ஜெனிலியா மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறும், வருகிற 27-ந் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நேற்று சைபாபாத் போலீசுக்கு உத்தரவிட்டிருப்பதாக திருப்பாதையாவின் வக்கீல் பாலாஜி வதேரா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக