புதன், 29 பிப்ரவரி, 2012

கூடங்குளம் உதயகுமார்: கைதான ஜெர்மானியருக்கும், எனக்கும் எந்த தொடர்பும்

பாங்க் டேர்ன் ஓவர் (வங்கி பணப்பரிவர்த்தனை) பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை'' என, ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் ஹெர்மான்,50, கைது விவகாரத்தில், நிருபர்களை சந்தித்த கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மழுப்பினார்.

நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்த உதயகுமார் கூறியதாவது: கைதான ஜெர்மானியருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை நாங்கள் ராய்னர் என்று அழைப்போம். கடந்த நான்கு ஆண்டுகளாக பழக்கம் உண்டு. சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் லால் மோகனுக்கும் தெரிந்தவர். ஜெர்மனியில் கணினி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
உலகின் பல நாடுகளுக்கு சென்று, அங்குள்ள கலாசாரத்தை தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் உண்டு. நாகர்கோவிலில் அவர் தங்கியிருக்கும் போது, அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால், வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுப்பேன். நான் நடத்தும் பள்ளிக்கு, அவரை அழைத்துச் சென்றதாக நினைவு இருக்கிறது. அவருக்கும் எந்த உளவு நிறுவனத்துக்கோ, தொண்டு நிறுவனத்துக்கோ தொடர்பு கிடையாது. இந்தியாவின் நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் அவரை, கடந்த ஒரு ஆண்டு காலமாக நேரிலோ, கடிதம், போன் மூலமோ தொடர்பு கொண்டதில்லை. அவருக்கும், நாங்கள் நடத்தும் போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை.

நான் பதவிக்காக இந்த போராட்டத்தை நடத்தவில்லை. நான் யாரிடமும் பணம் வாங்கியதில்லை. இன்று முதல்வரை கோட்டையில் சந்திக்க இருக்கிறோம். நிபுணர் குழு அறிக்கை ஒருதலைப்பட்சமானது என்பதை தெரிவிக்கப் போகிறோம். போராட்டத்துக்காக, மீனவர்கள் தாங்கள் மீன் பிடிப்பதில் இருந்து, 10 சதவீதம் பணம் தருகின்றனர். இதற்கு, கணக்கு சரியாக கையாளப்படுகிறது. ராதாபுரத்தில், "தமிழர் களம்' சார்பில், ஜப்பான் புக்குஷிமா நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. புக்குஷிமாவில் இருந்து வந்திருக்கும் மாயாகொபையாஷி என்பவர் கலந்து கொள்கிறார். அவரை எப்படி அழைத்து வந்தீர்கள், அவருக்கு எப்படி பிளைட் டிக்கெட் கிடைத்தது என்றெல்லாம் கேட்கக் கூடாது. இவ்வாறு கூறிய உதயகுமார், தன் பல்வேறு வங்கி கணக்கு எண்களை படித்து, அதில் மீதமுள்ள தொகையையும் படித்தார். "உங்கள் கணக்கில் மொத்த, "டேர்ன் ஓவர்' என்ன?' என நிருபர்கள் கேட்ட போது, "அப்படி எனக்கு சொல்லத் தெரியவில்லை' என்று மழுப்பினார். வங்கி பாஸ் புத்தகத்தின், நகல் தருவதாக சொல்லி விட்டு, அதை கொடுக்காமலேயே சென்று விட்டார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக