புதன், 29 பிப்ரவரி, 2012

நடராஜன்: என்கவுன்டரில் கொலை செய்யத் திட்டம்: நீதிபதி முன்

தஞ்சாவூர்: நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய, சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட மூவருக்கு, ஒருநாள் போலீஸ் கஸ்டடி கொடுத்து, தஞ்சை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை மாவட்டம், விளார் சாலை அன்பு நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், சசிகலாவின் கணவர் நடராஜன் தரப்பினர் மீது, நில அபகரிப்பு மனு புகார் ஒன்றை கொடுத்தார். இப்புகாரின்பேரில், சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது அண்ணன் விளார் சாமிநாதன் (75), அக்கா மகன்கள் சுரேஷ், சின்னையா, நீடாமங்கலம் யூனியன் தலைவர் (பொ) குபேந்திரன், சாமிநாதனின் கணக்குப்பிள்ளை மாரிமுத்து, நடராஜனின் நண்பர் சென்னை இளவழகன் ஆகிய ஏழு பேர் மீது, தஞ்சை நில அபகரிப்பு சிறப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களில் நடராஜன், குபேந்திரன், சின்னையா ஆகியோர் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது ஜாமின் மனுக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தஞ்சை ஜே.எம். 2 கோர்ட்டில், நடராஜன் உள்ளிட்ட மூவரையும் வழக்கு தொடர்பாக விசாரிக்க கஸ்டடி கேட்டு போலீசார் மனு செய்தனர். மனு மீதான விசாரணை, மாஜிஸ்திரேட் முருகன் முன்னிலையில் நேற்று காலை நடந்தது.

திருச்சி சிறையில் இருந்து நடராஜன் உள்ளிட்ட மூவரையும் பலத்த பாதுகாப்புடன் வேனில் போலீசார் அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த நடராஜன் ஆதரவாளர்கள், "போடாதே, போடாதே, பொய் வழக்கு போடாதே' என கோஷமிட்டனர். நில அபகரிப்பு மீட்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆஜராகி, "சம்பந்தப்பட்ட நிலப்புகாரில் நடராஜனுக்கு உள்ள தொடர்பு குறித்து, போன் உரையாடல் நடந்துள்ளது. இதுகுறித்தும், நில அபகரிப்பு ஆவணங்கள் குறித்தும் விசாரிக்க நடராஜனை மூன்று நாள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்' என்றார்.

மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடராஜன் கூறுகையில், "நில அபகரிப்பு புகார் முற்றிலும் பொய்யானது. அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனக்கும், புகாருக்கும் சம்பந்தமில்லை. என்னைக் கைது செய்து விட்டுத்தான் போலீசார் எப்.ஐ.ஆரையே தயார் செய்தனர். கடந்த தி.மு.க., ஆட்சியிலேயே டிரஸ்ட் மூலமாக முள்ளிவாய்க்கால் நினைவக தூண் கட்டப்பட்டு வருகிறது. அதில் உறுப்பினராகக்கூட நான் இல்லை. எனக்கு சம்பந்தமில்லாத வழக்கில், என்னை போலீசார் சேர்த்துள்ளனர். தற்போது என்கவுன்டர்களை போலீசார் நடத்தி வருகின்றனர். அதனால் என்னையும் என்கவுன்டரில் கொல்ல வாய்ப்புள்ளது. எனது உயிருக்கு போலீசாரால் பாதுகாப்பு இல்லை. அதனால், என்னை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதிக்கக்கூடாது,' என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.

நடராஜன் தரப்பு வழக்கறிஞர்கள், " புகாரின் கூறப்பட்டுள்ள நிலம் அருகே உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் ஈழப்போரில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் குறித்து, வருங்கால சந்ததியர் அறிய நினைவுத்தூண் அமைக்கப்பட்டு வருகிறது. இதை பழ.நெடுமாறன் மேற்கொண்டு வருகிறார். சம்பவத்துக்கு உரிய தொடர்பு குறித்து போன் உரையாடல் குறித்து விசாரிக்கவும், நில ஆவணங்கள் குறித்து அறியவும், போலீஸ் கஸ்டடி வேண்டும் என போலீசார் கேட்கின்றனர். போன் உரையாடல் விவரம் தொலைபேசித் துறையிடமும், நில ஆவணங்கள் வருவாய்த் துறையிடமும் தான் இருக்கும். அதனால், போலீஸ் கஸ்டடி விசாரணை தேவையற்றது. சிறையிலேயே போலீசார் விசாரித்துக் கொள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. பொய் வழக்கு என்பதால், போலீஸ் கஸ்டடி விசாரணை தேவையற்றது. அதனால் அனுமதி வழங்கக்கூடாது,' என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து மாஜிஸ்திரேட் முருகன், "நடராஜனை மாலை 5.30 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டும். அதுவரை அவருக்கு உரிய வசதிகளை போலீசார் செய்து தர வேண்டும்' என உத்தரவிட்டார். மீண்டும் மாலை 5.30 மணிக்கு நடராஜன், மாஜிஸ்திரேட் முருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முருகன், ""நடராஜன் உள்ளிட்ட மூன்று பேரையும் ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க (28ம் தேதி மாலை ஆறு மணியிலிருந்து, 29ம் தேதி மாலை ஆறு மணி வரை) உத்தரவிட்டார். நடராஜன் உள்ளிட்ட மூன்று பேரையும் தஞ்சை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் நில அபகரிப்பு மீட்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த நடராஜனின் அண்ணன் சாமிநாதனின் கணக்குப்பிள்ளை மாரிமுத்துவை (85) போலீசார் நேற்று கைது செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக