புதன், 29 பிப்ரவரி, 2012

பாரம்பரிய பிற்போக்குத் வர்க்க தமிழர் புலிகளையே ஆதரித்தனர்

children warபுலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது அவசியம்தானா?
கேள்வி: புலிகள் அழிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்பொழுது இலங்கையில் அவர்களின் தாக்குதல்கள் எதுவுமில்லை. அப்படியிருக்க அரசாங்கமும் சில ஊடகங்களும் (வானவில் உட்பட) புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இது அவசியம்தானா?
சு.தர்மானந்தன், மார்க்கம், கனடா
பதில்: புலிகள் இராணுவ ரீதியாக இலங்கையில் தோற்கடிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அவர்கள் பெரும் பண பலத்துடனும் வலிமை வாய்ந்த சில வெளிநாட்டு சக்திகளின் பின்பலத்துடனும் புலம்பெயர் நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர். உள்நாட்டிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பணியைத்தான் முன்னெடுத்து வருகிறது. இது பருண்மையான கள நிலவரம். ஆனால் இதற்கும் அப்பால் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய, மறைந்து கிடக்கின்ற பல முக்கியமான விடயங்கள் புலிகள் விடயத்தில் இருக்கின்றது. அதுதான் இந்தப் பிரச்சினையின் ஆணிவேர்.புலிகள் இயக்கம் என்பது தமிழர் வாழ்வில் திடீரெனத் தோன்றிய ஒரு அமைப்பு அல்ல. அந்த இயக்கத்தில் பிரபாகரன் என்ற தனி மனிதன் செலுத்திய ஆளுமைமிக்க வெளிப்படையான தலைமைத்துவத்தை வைத்துக்கொண்டு, அந்த இயக்கம் முழுக்க முழுக்க ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்டது என்ற பார்வை பலரிடம் உள்ளது. உண்மை அதுவல்ல.
புலிகள் இயக்கம் என்பது தமிழ் மேட்டுக்குடி பிற்போக்கு வர்க்கத்தின் ஒரு ஆயுதம் தாங்கிய அணியே தவிர வேறொன்றுமல்ல. அது முதலில் சேர்.பொன்.இராமநாதன் போன்றவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, பின்னர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ், எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சி என்பனவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் பிரித்தானிய காலனித்துவம் விட்டுச்சென்ற வெஸ்ற்மினிஸ்ரர் முதலாளித்துவ ஜனநாயக பாரம்பரியத்தைப் பின்பற்றி இரு கட்சி ஜனநாயக முறையில் தமிழ் காங்கிரசும் தமிழரசுக்கட்சியும் எதிர் எதிர் அணிகளாகச் செயற்பட்ட போதும், 1970களில் தமிழ் ஆளும் வர்க்கம் மக்கள் செல்வாக்கை இழந்து ஆபத்து ஏற்பட்ட போது, அந்த இரு கட்சிகளும் ‘தமிழர்களின் நலன்களைக் காக்க’ என்ற போர்வையில் தமது நீண்டகாலப் பகைமையை மறந்து ஒரே அணியாகச் சேர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டன.

அந்த தமிழர் விடுதலைக் கூட்டணியே தமிழ் பிற்போக்கு ஆளும் வர்க்கத்தின் அபிலாசையான தனித் தமிழ் நாடு என்னும் கோரிக்கையை முன்வைத்தது. அதேநேரத்தில் இனரீதியாக முரண்பாடு இருந்தபோதிலும் தமது பழைய தென்னிலங்கை வர்க்க சகாவும், ஏகாதிபத்தியத்தின் மிக நம்பிக்கையான விசுவாசியுமான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கூடிக்குலாவி வந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டரசாங்கங்கள் பதவிக்கு வரும் நேரங்களில் தமிழ் பிற்போக்குத் தலைமை அரச எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்துவதிலிருந்தும், ஐ.தே.க ஆட்சிபீடம் ஏறும் நேரங்களில் அவர்களுடன் கூடிக்குலாவுவதிலிருந்தும் இந்த உண்மையை இலங்கை வரலாற்றில் அடிக்கடி காணலாம்.

70களில் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தது போல, 80களில் அவர்கள் இரு பகுதியினரும் சேர்ந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கிய தமிழீழ தீர்மானமும், அது தொடக்கி வைத்த வன்முறை நடவடிக்கைகளும், அதற்காக அவர்கள் திரட்டி வைத்திருந்த இளைஞர் குழாமும் அப்படியே இருந்தன. எனவே பழைய தமிழர் கூட்டணித் தலைமையை நிராகரித்த தமிழ் இளைஞர்கள் தமிழீழக் கோரிக்கையையும், வன்முறை அரசியலையும் தமது கைகளில் எடுத்துக்கொண்டு பல்வேறு இயக்கங்களை உருவாக்கி ஆயுதம் தாங்கிப் போராடத் தொடங்கினர்.

பொதுவாக உலகில் எல்லாவிதமான விடுதலைப் போராட்டங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் முற்போக்கு அரசியலையும் அடிப்படையாகக் கொண்டு வழி நடாத்தப்பட்டவையே என்ற அடிப்படையில், இலங்கைத் தமிழ் இளைஞர்களின் பெரும்பாலான ஆயுதப்போராட்ட இயக்கங்களும்; கூட அந்த வழிமுறையையே பின்பற்ற முயற்சித்தன. அதற்கொரு பிரதான காரணம், அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் ஏகாதிபத்திய சார்பான, படு பிற்போக்கான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐ.தே.க ஆட்சியில் இருந்தமையும், அது தேசிய இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்காமல், அதை இராணுவ ரீதியாகத் தீர்க்க முயன்றதுமாகும்.

இத்தகைய ஒரு சூழலில், இலங்கைத் தமிழர்களின் தேசிய தற்பாதுகாப்புக்கான போராட்டம் முற்போக்கு புரட்சிகர சக்திகளின் சுயாதீனமான தலைமையை உருவாக்கும் சூழலும் உருவாகி வந்தது. இதைக்கண்டு முதலில் அஞ்சிய, இலங்கையின் அயல்நாடான இந்தியாவின்  பெரும் முதலாளித்துவ ஆளும் வர்க்கம், அவ்வாறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக தனக்கு விசுவாசமான இயக்கங்களை தமிழர்கள் மத்தியில் உருவாக்கத் தொடங்கியது. மறுபக்கத்தில் இந்தியாவின் நெருங்கிய நட்பு சக்தியான சோவியத் வல்லரசுடன் உலகளாவிய ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டிருந்த மேற்கத்தைய ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசமான அணியை தமிழ் இயக்கங்கள் மத்தியில் உருவாக்க எத்தனித்தது. இதன் விளைவாகவே இந்திய சார்பு இயக்கங்களும் அதற்கெதிராக மேற்கத்தைய சார்பு புலிகளும் தோற்றம் பெற்றார்கள். இதன் அடிப்படையிலேயே சில அமைப்புகளுக்கு இந்தியாவின் நட்பைப் பெற்றிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கம் இராணுவப் பயிற்சி அளிக்க, ஏகாதிபத்திய விசுவான நாடான இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு புலிகளுக்கு இராணுவப் பயிற்சி அளித்தது.

ஆனால் இறுதியில் இந்தப் போட்டா போட்டியில் புலிகள் இயக்கமே வெற்றி பெற்றது. அது சுலபமாக இந்திய சார்பு இயக்கங்களையும், சுயாதீனமான முற்போக்கு புரட்சிகர இயக்கங்களையும் அழித்தொழித்தது. அதன் இந்த நடவடிக்கைகளுக்கு மேற்கிலிருந்து சென்ற பெருந்தொகை பணமும் ஆயுதங்களும் அரசியல் ஆதரவும் பக்க பலமாக அமைந்தன. அது மாத்திரமின்றி பாரம்பரிய பிற்போக்குத் தமிழ் தலைமையும் புலிகளையே ஆதரித்தது. ஐ.தே.கவின் மறைமுக ஆதரவும் (பிரேமதாச அரசு வெளிப்படையாகக்கூட) புலிகளுக்கே இருந்தது.

புலிகள் இந்த ஆதரவுகளைப் பயன்படுத்தி மாற்று இயக்கங்களை மட்டுமின்றி, ஜனநாயக அரசியல் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், புத்திஜீவிகள் என எல்லாவிதமான தமிழ் ஜனநாயக சக்திகளையும் அழித்தொழித்து, வடக்கு கிழக்கில் தமிழ் பிற்போக்கு சக்திகளின் ஒரு பாசிச ஆட்சியதிகாரத்தை நிறுவினர். உள்நாட்டில் மட்டுமின்றி இந்தியா உட்பட இந்தப் பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் அபாயகரமான சக்திகளாகவும் உருவெடுத்தனர். அரபுக்கள் மத்தியில் எப்படி ஏகாதிபத்தியம் சியோனிச இஸ்ரேலை உருவாக்கியதோ, அதேபோன்று புலிகளை தென்னாசியப் பிராந்திய இஸ்ரேலாக உருவாக்கி வந்தது.

1994ல் சந்திகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் அமைந்ததும், ஏகாதிபத்தியம் புலிகளுக்கு மேலும் புதிய இரத்தத்தைப் பாய்ச்சியது. நோர்வே மூலம் இது சமாதான முயற்சிகள் என்ற போர்வையில் வெகுசாதுரியமாகச் செய்யப்பட்டது. அதன் மூலம் புலிகள் இயக்கம் இலங்கையின் தேசிய சுதந்திரம், பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றுக்கும், தமிழ் மக்களின் ஜனநாயக வாழ்வுக்கும் சவால் விடுக்கும் பாரிய சக்தியாக உருவெடுத்தனர். மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகள் தமது நாடுகளில் புலிகள் இயக்கம் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்குமுகமாக அதைத் தடை செய்தனவே தவிர, அது இலங்கையில் மேற்கொண்ட பயங்கரவாத மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுக்க பெரிய முயற்சிகள் எதனையும் எடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான், மகிந்த ராஜபக்ச அரசு ஆட்சிக்கு வந்ததும் புலிகள் இயக்கத்தைச் சரியான முறையில் கையாண்டு, அவர்களை முற்றுமுழுதாக இலங்கை மண்ணிலிருந்து அழித்தொழித்தது. இந்த நடவடிக்கையானது இலங்கையின் அனைத்து இன மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதேநேரத்தில் இந்த வெற்றிகரமான நடவடிக்கையானது ஏகாதிபத்தியத்தின் தென்னாசியா சம்பந்தமான திட்டங்களைக் கணிசமான அளவில் உடைத்தெறிந்தது. எனவே தான், இன்று மேற்குலக சக்திகள் இலங்கை மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தற்போதைய அரசை வீழ்த்த முயற்சிப்பதோடு, இலங்கையின் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்க முயல்கின்றன.

மறுபக்கத்தில், புலிகள் இயக்கம் இலங்கையில் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டிருப்பினும், அதைப் பெற்றெடுத்த தமிழ் பிற்போக்கு  சக்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இன்னமும் வலுவாகச் செயற்படுவதுடன், இன்னொரு புலி இயக்கத்தை உருவாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதுமாத்திரமின்றி, இலங்கையில் புலிகள் என்ற ஆலமரம் வீழ்த்தப்பட்டாலும், புலம்பெயர் நாடுகளில் அந்த மரத்தின் விழுதுகள் நாட்டப்பட்டு நிரூற்றி வளர்க்கப்படுகின்றன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்யப்படும் இந்த எதிர்ப்புரட்சிகர செயல்களுக்கு, சர்வதேச ஏகாதிபத்திய சக்திகள் துணை நிற்கின்றன.

எனவே புலிகளின் அழிவு என்பது தமிழ் பிற்போக்கு சக்திகளின் ஒரு பட்டாலியனின் - படைப்பிரிவின் - அழிவு மட்டுமே. அதன் தாய்ப்படை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலும், புலிகளின் எச்சசொச்சங்கள் புலம்பெயர் புலிகளாகவும் இன்னமும் வலுவுடன் செயற்படுகின்றனர். புலிகள் இயக்கம் என்பது தமிழ் பிற்போக்கு பாசிச சக்திகளின் ஒரு வெளிப்பாடு மட்டுமே. எனவே அதைப் பெற்றெடுத்த அந்தப் பிற்போக்கு சக்திகள் இருக்கும்வரை அந்தப் பாசிச அபாயமும் இருந்துகொண்டே இருக்கும்.

எனவே தமிழ் பிற்போக்கு சக்திகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு, தமிழ் மண்ணிலும் இலங்கையிலும் ஒரு நிலையான மக்கள் ஜனநாயக அரசியல் அதிகாரம் நிலைநாட்டப்படும் வரை, புலிகளுக்கும், தமிழ் பிற்போக்கு சக்திகளுக்கும், சகலவிதமான ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கும் எதிரான பிரச்சார வழியிலான அரசியல் போர் தவிர்க்க முடியாதது. எப்படி சர்வாதிகாரி ஹிட்லர் அழிக்கப்பட்டும்கூட, மேற்குலகில் இன்னமும் நாஜியக் கருத்துக்களும் பாசிச சிந்தனைகளும், அதற்கெதிரான பிரச்சாரங்களும் நிலவுகின்றதோ, அது போன்றதே புலியிசமும் அதற்கெதிரான போரும்.

எனவே புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தை தமிழ்மக்கள் மத்தியில் தொடர்ந்து  நடாத்துவது என்பது ஒரு வரலாற்றுத் தேவையாகும்.                     
நன்றி: வானவில் 14, 2012
வானவில் பத்திரிகையின் மின்னஞ்சல் முகவரி: sunvaanavil@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக