சனி, 18 பிப்ரவரி, 2012

பிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை!

பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா, அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா
“பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா. அவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். அவரது மனைவியும் ஒரு அரசு ஊழியர்.
இப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்கள் ஒரே செல்ல மகனை சாதாரண லெவலுக்கு வளர்க்க விரும்புவார்களா? பையனுக்கு காலையில் கராத்தே வகுப்பு, பிறகு கான்வென்ட் பள்ளிக்கூடம். மாலை ஸ்பெசல் டியூசன், பிறகு கம்யூட்டர் கிளாஸ் இப்படி 24 மணிநேரமும் பையனை கடிகார முன்னாய் நகர்த்திக் கொண்டிருப்பவர் அந்த அரசு ஊழியர். ஒரு நாள் மாலை நேரம் பையன் தெருவில் இறங்கி விளையாடப் போய்விட்டான்.
பையனைத் தேடிப்பார்த்த தந்தைக்கு தலைக்கேறியது கோபம். “வீட்லதான் விளையாட கம்யூட்டர் கேம்ஸ் வாங்கித் தந்துருக்கேன்ல. டியூசன் போய்விட்டு வந்து அதுல விளையாடறது. காச கொட்டி சேர்த்துவிட்டா கம்யூட்டர் கிளாஸ் போகாம, கண்ட கண்ட பசங்களோட சேர்ந்துகிட்டு தட்டான் புடிக்கவா போற? போடா கிளாசுக்கு” என்று அவர் கைய ஓங்கி அதட்டியதுதான் தாமதம் இறுகிய முகத்துடன் வீடு திரும்பிய பையன் ஓங்கி ஒரு அறைவிட்டான் அப்பாவை.
அதுவும் வாசல்படியிலேயே பதிலுக்கு விளாசித் தள்ளிவிட்டாலும் அந்த அதிர்ச்சியிலிர்ந்து அவரால் இன்னும் மீள முடியவில்லை. இது சேருவார் தோஷமா இல்லை செய்வினையா என்று குழம்பித் தவித்தார்.
ஆம்! உண்மையில் இது செய்வினைதான் அதாவது ”உன்னைப்பார் உலகத்தை பார்க்காதே.போட்டி போட்டு முன்னேறு” என்று முதலாளித்துவ வாழ்க்கை முறையின் ஒரு வித செய்வினைதான் என்பதை கொஞ்சம் குழந்தைகள் வளர்ப்பு சமாச்சாரத்தின் உள்ளேபோய் பார்த்தால் ஒத்துக்கொள்ளத் தோன்றும்.
உலகத்தை நெருங்கி, நெருங்கி – அது என்ன? இது என்ன? ஏன் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன, இயங்குகின்றன என்று – அறியத்துடிக்கும் ஆர்வம் ததும்பும் பிள்ளைப் பருவத்திற்கும், ஒண்ணாந் தேதி சம்பளத்தையும் ஒவ்வொரு நுகர்பொருளும் வாங்குவதற்குவொரு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் மட்டும் மனதில் வைத்துக் கொண்டு  “அந்த உலகத்தை அறியத் துடிக்கும்” அரசு ஊழியர்க்கும் உள்ள இயல்பான முரண்பாட்டின் விளைவே மேற்சொன்ன சம்பவம்.
கொம்பு சீவுவனையே குத்திப்பதம் பார்த்துவிடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காளையைப்போல போட்டி உலகின் கட்டுக் காளையைப்போல போட்டி உலகின் அவஸ்தை தாங்காமல் குழந்தை வடிவத்தில் இருக்கும் மனிதன். முதலாளிய வாழ்க்கை முறையின் செய்வினைக்குப் பதிலை அப்பாவின் முகத்தில் திருப்பித்தரும் அதியமும் சில நேரங்களில் நடக்கத் தான் செய்யும்.
ஒரு ஈடுக்கு எத்தனைக் குஞ்சு பொறிக்கும், அதற்கு என்ன தீவனத்தை போடலாம் என்ற முதலாளியின் கணக்கைப்போல போட்டி மயமான இந்த உலகில் தமது பிள்ளைகள் போணியாக வேண்டுமென்றால் கம்யூட்டர், கேம்ஸ், கராத்தே, வாய்ப்பாட்டு, கருவி இசை என்று எல்லாத் துறைகளிலும் ஒண்ணாம் நம்பரா இருந்தால்தான் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் கருத்து.
இப்படி குழந்தைகளுக்கு வகை வகையான தீவனம் போட வசதி இல்லாவிட்டாலும் அவரவர் நிலைமைக்கு ஏற்றவாறு பிள்ளைகளை அடைகாக்க முயற்ச்சிக்கும் பண்பாடு கோழி செல்லைப் போல பெற்றோர்களின் மனதில் அரித்துக் கொண்டிருக்கிறது.
கோழி வியாபாரிக்காவது ஒரு ஈடுபொய்த்து விட்டாலும் அடுத்த ஈடுவரைக்கும் காத்திருக்கும் பொறுமையு நிதானமும் இருக்கிறது. இப்படி குறி வைத்து வளர்க்கும் பெற்றோர்களுக்கோ தன்னுடைய குஞ்சுகள் ஒரே ஈடில் கோழிகளாக சிறகடிக்க வேண்டும் என்ற அவசரமும் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் பிள்ளைகள் மேல் ஆத்திரமும் வருகிறது.
ஆனால் குழந்தைகள் உலகமோ இதற்கு நேர்மாறானது. இந்த உலகத்தை உற்று பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற தேவையிலிருந்து அவர்கள் பார்வை தொடங்கவில்லை. இந்த உலகில் என்ன இருக்கிறது என்ற தேடலிலிருந்து அவர்கள் பார்க்கத் தொடங்குகின்றார்கள்.
முடியவில்லாத மலைத் தொடர்கள், ஓய்வில்லாத அலைகளின் ஓட்டகம், இலைகளின் பின்னணியை ஆராயத் தொடங்குகிறது அவர்கள் மனம். மேகத்திற்குள் மறைந்த  நிலவு வெளிவரும் சோற்றையும் தட்டிவிட்டுவிட்டு நிலவை ஆராய்கிறது பிள்ளைமனம். இப்படி இயற்கையை மட்டுமல்ல மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், அவற்றின் இயக்கம். சிலர் கையில் அவைகள் இருப்பதும், பலரிடம் இல்லாததும், கட்டிடங்கள் பக்கத்திலேயே குடிசைகள் இருப்பதும் ஏன்,ஏன் என்ற கேள்விகள் பிள்ளைப்பருவத்தின் ஆர்வத்தை அள்ளி வருகின்றன.
தனித்தனியாக காணக் கிடக்கும் இந்த காட்சிகள் குறித்த புரிதலை ஒருங்கிணைந்த முறையில் பெறுவதுதான் குழந்தைகளின் முதல் தேவை. ஆனால் அனைத்தையும் அழித்து தான்மட்டும் வாழத்துடிக்கும் முதலாளித்துவமோ பல சிறு தொழில்களை அழித்தால்தான் பெரிய பன்னாட்டுக் கம்பெனி வாழ முடியும் என்ற தனது பொருளாதார கொள்கையையே, குடும்பத்தின் இலக்கணமாகக் கொண்டுவந்து “ உன்னைப்பார் உலகைப் பார்க்காதே” “போட்டி போட்டு முன்னேறு! சகமனிதர்கள் மீதான போட்டியில் வெற்றி பெறு. அதுவே உனது வாழ்க்கை லட்சியம். கனவு” என குட்டி இளவரசர்களுக்கு முடிசூட்டி விடுகிறது.
உயிர்களின் தோற்றத்தையும், பரிணாமத்தையும் இடையறாது ஆராய்ந்து உழைப்பைச் செலுத்தி டார்வின் பரிணாமக் கொள்கை, தனிமனித முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி அல்ல.
ஆனால் (முதலாளித்துவம்) சுயநலமனம் கொண்ட குடும்பங்களோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கண்டுபிடித்துவிட்டால் குடும்பம் நடத்த முடியுமா? எங்களுக்கு டார்வினைப் போல ஆராய்ச்சி மனம் படைத்த ஒரு மனிதன் தேவையில்லை. கோடீஸ்வரன் முத்திரையைச் சரியாகப் பயன்படுத்தி கட்டங்கட்டமாகத் தாவி வெற்றி பெறும் ஒரு குரங்கு போதும் என்கின்றனர். அதாவது சமுதாயத்தை ஒண்ணாம் நம்பராக்கும் அறிவு தேவையில்லை. இந்த சமுதாயத்தில் நான் ஒண்ணாம் நம்பராகும் வழியைச் சொல் என்கிறது நடுத்தர வர்க்கம்.
குழந்தைகளின் ஆர்வத்தைத் தட்டி எழுப்புவது, அவர்கள் மனம் விரும்பிய விளையாட்டை பழக அனுமதிப்பது, முக்கியமாக சமுதாய உறுப்பினர்களான சக மனிதர்களுடன் கூடி இயங்க விடுவது என்ற கருத்தெல்லாம் இல்லாமல், 2500 மைல்களுக்கு அப்பால் குறி வைத்து ஏவக்கூடிய ஒரு ஏவுகனையைப் போல பெற்றோர்கள் அந்தஸ்தான வாழ்க்கைதரக் கூடிய ஒரு கனவுப் பிரதேசத்துக்கு பிள்ளைகளை ஏவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நடக்கிறது.
இதனால்தான் பிள்ளைகள் கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றை நோக்கில் பயன்படுத்தும்போது “இது உருப்படறதுக்கு வழியா!” என்று அலறித் துடிக்கிறார்கள். இது குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தனத்தைப் பறித்தெடுக்கும் பலாத்தார நடவடிக்கையாக மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும். கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்த்தால் குழந்தைகளாய் இருக்கும் மனிதர்களிடம் முதலாளித்துவத்திற்கு தேவையான வளர்ப்பும், சுரண்டலும் ஆரம்பமாகி விட்டது என்ற அபாயம் புரியும்.
”சரக்கு உற்பத்தியின் போட்டா போட்டியில் கல்வி,பண்பாடு, மனிதர்களையும் கூட முதலாளித்துவம் ஒரு சரக்காக மாற்றி விடுகிறது” என்று கார்ல் மார்க்ஸ் இந்த அபாயத்தைக் கோடிட்டுக் காண்பித்தார். இரண்டு வழிகளில் இந்த அபாயத்தை முதலாளித்துவம் அரங்கேற்றி வருகிறது. ஒன்று சாதாரண உழைக்கும் மக்களின் கைகளிலிருந்து கைத்தொழில் சிறு தொழில்களைப் பிடுங்கி எறித்துவிட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் பிள்ளைப் பருவக் கனவுகளை அழித்து அவர்களையும் தனது சுரண்டலுக்கு குழந்தைப் பணியாளர்களாய் மாற்றிவிடுகிறது.
ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் உணவு விடுதிகளில் மேசை துடைக்கும் சிறுவனின் உள்ளத்திலிருந்து அவனுக்கு விருப்பமான படைப்புணர்ச்சியை பிள்ளைப் பருவத்திலேயே துடைத்தெறிந்து விடுகிறது முதலாளித்துத்துவச் சமுதாயம் இன்னொருபுறம் மேட்டிக்குடி, நடுத்தர வர்க்க குழந்தைகளிடம் இந்தா பிடி சாப்ட்வேர், மேல்படி ஜாவா, ஈகாம் இப்பொழுதே, நல்ல எதிர் காலத்துக்கான திறமையை வளர்த்துக் கொள் என்று அவர்களுடைய பிள்ளைப் பருவத்தையும் தங்கள் சுரண்டலுக்கான அச்சாரமாக மாற்றிக் கொள்கிறது. இதை கோட்பாடாகக் கேட்பதற்கு மிகையாகத் தோன்றலாம். குடும்பங்களின் நடைமுறையைக் கவனித்தால் பெற்றோர்கள் தமது
பிள்ளைகளை ஒரு நல்ல ‘பொசிசனுக்கு’க் கொண்டுவர அவர்களை வளரும் சரக்காக வளர்த்தெடுக்கும் முறைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியும்.
பிள்ளைகளிடம் குழந்தைத்தனம் பறிக்கப்படுகிறது. கல்விச் சுமை ஏற்றப்படுகிறது, குழந்தை  உழைப்பு தடுக்கப்பட வேண்டும் என்று கண்டிக்கும் அறிவாளிகள் கூட இவற்றுக்குக் காரணமான முதலாளித்துவச் சுரண்டல் சமூக அமைப்பைத் தூக்கியெறியந்தாலொழிய இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை ஊருக்குச் சொல்வதில்லை. குழந்தைப் பருவத்தின் தேடல்களைத் தொலைத்துவிட்டு குழந்தையும் சேர்ந்து உழைத்தால் தான் குடும்பத்தில் சோறாக்க முடியும் என்ற சமூக நிலைமையைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் ஒரு வேளைச் சோற்றுக்கு வயிற்றுப் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு தீச்குச்சி அடுக்கப் போகும் பெண்களிடம் போய் உங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள் குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள் என்று அறிவொளி இயக்கம் நடத்துகிறார்கள் இந்த அறிவாளிகள்.
மாற்றாக மக்கள் சீனத்திலும், சோசலிச சோவியத் ரசியாவிலும் தனியுடைமைச் சுரண்டலை ஒழித்துக் கட்டியதன் மூலம் பிள்ளைகளுடைய கல்வி வளர்ப்பு அனைத்தையும் அரசின் கடமையென உறுதி செய்யப்பட்டதுடன் பிள்ளைகளின் தனிப்பட்ட திறமைகள் இந்தச் சமுதாயத்தையே முன்னேற்றிக் காட்டின. சகமனிதர்களைத் தோற்கடித்து அவனை அழித்தாவது தான் முன்னேற வேண்டும் என்ற முதலாளித்துவ வளர்ப்பு முறையினால் தனது இச்சைக்கு எதிராக இருக்கும் பெற்றோரைக் கூடத் தீர்த்துவிடும் குழந்தைகளை முதலாளித்துவம் உருவாக்குகிறது.
ஆனால் நாட்டு மக்களின் நலனுக்காக இட்லரை எதிர்த்த போரில் ரசியச் சிறுவர்கள் தன்னிகரில்லாமல் உதவிய ‘த இவான்’ நாவலில் பார்க்க முடிகிறது. இப்படி சமூக நோக்கில் குழந்தை வளர்க்கப்பட  வேண்டும் என்று சொன்னால் “எங்கள் பிள்ளைகளை எங்கள் விருப்பப்படி வளர்க்கும் உரிமைகூட எங்களுக்குக் கிடையாதா? என்று அறிக்கையில் பெற்றோர்களைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இப்படிப் பேசுகிறது.
“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…”
“குடும்பம், கல்வி என்றும், பெற்றோருகும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவெறுக்கத் தக்கனவாகி வருகின்றன. ஏனெனில் நவீனத் தொழில்துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.”
இப்பொழுது இந்தக் கட்டுரைகயின் துவக்கத்தில் சொன்ன சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். தனது குழந்தைப் பருவத்தைச் சுரண்டுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஆளாக்கிய அப்பாவின் கன்னத்திலேயே அறைந்து விட்டான் அந்தச் சிறுவன். சமுதாயத்தையே இந்த சுரண்டல் நிலைமைக்கு ஆளாக்கிய அப்பனான முதலாளித்துவத்தின் கன்னத்தில் நீங்கள் அறையப் போவது எப்போது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக