ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இலவச பொருட்கள் வினியோகம் ஜோர்


Sankarankovil By Election
சங்கரன்கோவில்: சங்கரன் கோவில் இடைத் தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் அங்குள்ள மக்களுக்கு ஆளுங்கட்சி சார்பில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய இலவச பொருட்கள் வினியோகம் முழு விச்சில் தொடங்கியுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை ஏப்ரல் முதல் வாரத்திற்கு முன்பு தேர்தல் நடத்தவேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் அதிமுக, தேமுதிக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்த பின்னர் தான் திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் என தெரிகிறது. இடைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டிய காட்டாயத்தில் அதிமுக உள்ளது. இதற்காக 26 அமைச்சர்கள் உள்பட 34பேர் கொண்ட தேர்தல் பொறுப்புக்குழு ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் பணிகளில் மற்ற கட்சிகளை விட முந்துவதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அதிமுக வேட்பாளராக தற்போதைய நகர்மன்ற தலைவி முத்துசெல்வியை ஜெயலலிதா அறிவித்தார். மேலும் இத்தொகுதியில் ஜெயலலிதா 5 நாட்கள் முகாமிட்டு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதையொட்டி கடந்த வாரம் தமிழக நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர் மற்றும் கிராம தொழில்கள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் சங்கரன்கோவில் தொகுதியில் சுற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர். பின்னர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், சங்கரன்கோவில் தொகுதியில் இலவச பொருட்களை உடனடியாக வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து தற்போது சங்கரன்கோவில் தொகுதியில் அறிவிக்கப்படாத திட்டப்பணிகள் பல லட்சம் மதிப்பில் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இலவசங்கள் வெகு ஜோர்

சங்கரன் கோவில் தொகுதிக்கு உள்பட்ட 74 பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் தமிழக அரசின் இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய பொருட்கள் கடந்த சில நாட்களாக அனைத்து பகுதி மக்களுக்கும் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் நேற்று லாரி லாரியாய் வந்து குவிந்து வருகின்றன. தேர்தலை காரணம் காட்டி வழங்கப்பட்டு வரும் இலவச பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்று வருகின்றனர். இன்னும் ஒருசில தினங்களில் இலவச பொருட்கள் வழங்கும் பணி முழுமையாக நிறைவுபெறும் வகையில் பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக