ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சிதம்பரத்தை சிக்க வைக்கும் வரை சுப்பிரமணியன் சுவாமிக்கு உறக்கமே வராது

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்க வைக்கும் வரை, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு உறக்கமே வராது போலிருக்கிறது.
சிதம்பரத்துக்கு ஆதரவாக கீழ்கோர்ட் தீர்ப்பளித்தாலும், உச்சநீதிமன்றத்தில் விடமாட்டேன் என்று ‘ரெட்’ சிக்னல் கொடுத்திருக்கிறார். நாடு தழுவிய அளவில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ். இந்த இயக்கத்தின் தலைவராக சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். புதுடில்லியில் நடந்த இந்த இயக்கத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சுவாமி உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை உலுக்கி எடுத்துவிட்டார்.

‘‘2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கை சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்தது பற்றி நான் கவலைப்படவில்லை. மகாபாரதப் போரில் தோல்வியைச் சந்தித்த பாண்டவர்கள், அபிமன்யுவை இழக்க நேர்ந்தது. இருந்தாலும், இறுதியில் தர்மமே வென் றது. அதே நம்பிக்கையுடன் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாதத்துக்குள் அப்பீல் செய்வேன்.
ஒன்றைரை ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் வழங்கப்பட்ட அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். டில்லி உயர் நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்தது. நான் தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை ரத்து செய்து தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றோர், விதிமுறைக்கு மாறாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றிருப்பதை சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இருந்தாலும், ப.சிதம்பரம் மேற்கொண்ட முடிவுகள் தவறானவை இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ராசா மேற்கொண்ட முடிவுகள் தவறானவை என்றும், ப.சிதம்பரத்தின் முடிவுகள் தவறானவை இல்லை என்பதையும் நீதிபதி எப்படி முடிவு செய்தார் என்று தெரியவில்லை.

ஊழல் மூலம் கிடைத்த 70 லட்சம் கோடி ரூபாய் பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது. இப்படி பணத்தை ‘டெபாஸிட்’ செய்திருப்போர் பட்டியலை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. கையில் வைத்துக் கொண்டு இந்திய அரசியல்வாதிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு ஊழல் நடந்தும் பிரதமரும், சோனியாகாந்தியும் மவுனம் சாதிக்கிறார்கள். சர்க்கஸில் சிங்கங்களை ‘ரிங் மாஸ்டர்’ ஆட்டிப் படைப்பது போல், பிரதமர் ம ன்மோகன் சிங்கை சோனியா காந்தி ஆட்டிப் படைக்கிறார்’’ என்று தனது ‘சீரியஸ்’ பேச்சை கலகலப்பாக முடித்தார் சுப்பிரமணியன் சாமி.

ஆக கறுப்பு விடாது போலிருக்கிறது!

ஜெ.வெங்கடராமன்
thanks kumudam +ghani chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக