ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சினிமா ஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அச்சம்:மாணவர்கள் என்றால், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கிறவர்கள் என்று தான், இதுவரை நினைத்தோம். தற்போது, மாணவர்கள் கூட்டமாகக் கூடினாலே, பொதுமக்களும், பெண்களும் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையிலுள்ள ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், தனது ஆசிரியரை, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர் சம்பவங்கள்:கொலை நடந்த நாளில், சென்னையில் பிரசித்தி பெற்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பஸ் "டே' கொண்டாட அனுமதி கிடைக்காததால், கல்லூரிக்கு முன் திரண்டு, அரசு பஸ்சின் மீது, கற்களை வீசி ரகளை செய்தனர். இதில், பயணிகள் உயிருக்கு பயந்து, ஜன்னல் வழியே தப்பித்தனர். பிஞ்சுக் குழந்தையுடன் பஸ்சில் வந்த பெண்களையும், கொலைவெறி மிக்க ரகளை கும்பல், விட்டு வைக்காமல் விரட்டியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், சென்னை நந்தனம் கலைக் கல்லூரி அருகே, மாணவர்கள் கோஷ்டியில் ஏற்பட்ட தகராறில், பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவனை, எதிர்தரப்பு மாணவர்கள் விரட்டிச் சென்று வெட்டியதால், பயணிகள் அலறியடித்து ஓடினர்.கடந்த மாதம், சென்னை புறநகரில் தங்கியிருந்த வெளிமாநில மாணவர்களில் இருவர், பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக, போலீசார் கைது செய்தனர்.

மேற்கத்திய கலாசாரம்:இப்படி மாணவர் சமுதாயத்திற்கும், குற்றங்களுக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் தான், மாணவர்களின் வன்முறை சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தற்போது இந்தியாவில், அதுவும் பாரம்பரியமும், கல்வி, பொருளாதார வளர்ச்சியிலும் மேம்படும் தமிழகத்திலும், இந்த வகை வன்முறை அதிகரித்திருப்பது, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காரணம்:இந்த சம்பவங்களுக்கு, பெரிய காரணங்களை கண்டுபிடிக்க தேவையில்லை என, அனைத்து தரப்பிலுமே கருத்துகள் நிலவுகின்றன. வீட்டிலேயே பெற்றோர், பிள்ளைகளிடையே தேவையான அன்பும், பாசமும், கண்டிப்பும், கண்காணிப்பும் குறைகிறது. அதேநேரம், வன்முறை விதைகளை தூவும் படங்கள் மற்றும் கார்ட்டூன் காட்சிகளை பெற்றோரின் ஆதரவுடன், ஊக்கத்துடன், "டிவி'யில் மாணவர்கள் பார்ப்பது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.முன்பெல்லாம், தொலைக்காட்சிகளில் மாணவர்களுக்கு என்றால், அறிவியல் ரீதியான, தொழில்நுட்ப ரீதியான ஆக்கப்பூர்வ நிகழ்ச்சிகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால், சிறு வயது மாணவர்களுக்கு, கார்ட்டூன் விலங்குகள், அதிசயமான, நகைச்சுவை வடிவிலான மனிதர்களுடன் கூடிய படங்கள் காட்டப்படும்.ஆனால், தற்போது பெரும்பாலான சினிமா, தொலைக்காட்சி, கார்ட்டூன் நிகழ்ச்சிகளில், கொள்ளைக்காரன், ரவுடி, பயங்கரவாதி போன்ற தோற்றமளிக்கும் உடை உடுத்தி, துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் வெட்டி பழிவாங்கும், வெறித்தனமான காட்சிகள் காட்டப்படுகின்றன.

ஹீரோயிசம்:இதனால், பல மாணவர்கள் தங்களை தாங்களே ஹீரோக்களாக எண்ணி, பள்ளிகளில், கல்லூரிகளில் படிப்பை விட்டு விட்டு, ஹீரோயிசம் காட்டும் நிலை வந்துவிட்டது. இதனால், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, பொது இடங்களை, தங்களது ஹீரோயிசத்திற்கான தளமாக பயன்படுத்தி, சமூகத்தை சீரழிவுக்கு கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பள்ளிக்கூடங்களிலும், பாடத்திட்டங்களிலும், மாணவர்களின் மனநிலையை மாற்றும் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர் அன்பையும், பாசத்தையும் சுதந்திரமாக கொடுக்கும் நிலையில், பிள்ளைகளுக்கு கண்டிப்பையும், கண்காணிப்பையும், சிறுவயதிலிருந்தே ஏற்படுத்த வேண்டும். வன்முறை சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதிலிருந்து, தாங்களும் விலகுவதுடன், பிள்ளைகளையும் விலகியிருக்க செய்வதே, இனி வரும் காலம், வன்முறையை துறந்து, சமுதாயத்திற்கு வழிகாட்டும் மாணவர்களை உருவாக்க உதவும்.

சினிமா, "டிவி' காட்சிகளுக்கு சென்சார்:சினிமா, "டிவி'யில் அதிகரிக்கும் வன்முறை காட்சிகள் தான், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை, திசை திருப்பி வன்முறை விதைகளை தூவக் காரணமாகின்றன. சில தினங்களுக்கு முன், ஆசிரியை மாணவன் கொலை செய்த சம்பவத்தில், "இந்தி திரைப்படம் ஒன்றைப் பார்த்து தான் கொலை செய்ய தெரிந்து கொண்டேன்' என்று, மாணவன் கூறியிருப்பது, சிந்திக்க வேண்டிய ஒன்று. இப்போதாவது, தங்கள் சந்ததிகளின் நலன் மற்றும் சமுதாய மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு, வன்முறை காட்சிகளை, மனசாட்சியுடன் ரத்து செய்ய, சென்சார் போர்டு உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஹெச்.ஷேக் மைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக