புதன், 15 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் இலவசங்களை வாரி வழங்கும் அதிமுக-முதல் போணி முடிந்தது

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் செயலப்டும் அதிமுக அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி வருகின்றதாம். முதல் கட்ட பட்டுவாடாவை வெற்றிகரமாக முடித்து விட்டார்களாம்.
தமிழக அமைச்சர் கருப்பசாமி உடல்நலக் குறைவால் இறந்தார். இதனையடுத்து அவரது தொகுதியான சங்கரன்கோவிலுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட அதிமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்துள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி உள்ளார்.

ஆனால் மற்ற முக்கிய கட்சிகளான தேமுதிக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகின்றது. இதற்காக 26 அமைச்சர்கள் உள்பட 34 பேர் கொண்ட தேர்தல் பொறுப்புக் குழு ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், சங்கரன்கோவில் தொகுதியில் இலவசப் பொருட்களை உடனடியாக வழங்குமாறு வருவாய் துறை அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட 74 பஞ்சாயத்துகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் தமிழக அரசின் இலவசப் பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை கடந்த சில நாட்களாக வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றது.

பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்வெட்டு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மதில் மேல் பூனையாக உள்ளது. இதனால் திருமங்கலம் பார்முலாபடி ஒரு வாக்காளருக்கு ரூ. 1000 வீதம் வழங்கி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.

மேலும் சங்கரன்கோவில் தொகுதியில் முதல் கட்ட பட்டுவாடா முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தேர்தலின் போது அடுத்த கட்ட பட்டுவாடா நடைபெறும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக