புதன், 15 பிப்ரவரி, 2012

வீரபாண்டியார் மீது அவ்வளவு சீக்கிரம் கை வைக்க முடியாது


சென்னை: திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் மீது இதுவரை இல்லாத பெரும் வருத்தத்தில் திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் மோதலை மையமாக வைத்து வீரபாண்டியார் காய் நகர்த்தி வருவதாகவும், அந்த மோதலில் தான் பலனடைய பார்ப்பதாகவும் கருணாநிதி கருதுவதாகவும், விரைவில் வீரபாண்டியார் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திமுகவில் எத்தனையோ தலைவர்கள் வந்துள்ளனர், போயுள்ளனர். அவர்கள் அத்தனை பேருக்குமே கருணாநிதி மனதில் ஒவ்வொரு இடம் இருக்கும். இருப்பினும் கருணாநிதி மனதில் தனி இடம் பிடித்துள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்களில் வீரபாண்டியாரும் ஒருவர். சேலத்தில் கட்சியைப் பற்றி கருணாநிதி ஒருமுறை கூட கவலைப்பட்டதில்லை. காரணம், வீரபாண்டியார் மீது அவருக்கு உள்ள நம்பிக்கை.கருணாநிதியின் நம்பிக்கையை ஒருமுறை கூட வீணடித்ததில்லை வீரபாண்டியார். சேலம் மாவட்டத்தில் கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். தொடர்ந்து வெற்றிகளைத் தேடிக் கொடுத்தார். நாளை பொதுக் கூட்டம் என்று கூறினால் கூட லட்சம் பேரை திரட்டிக் கொண்டு வரக் கூடிய திறமைசாலி வீரபாண்டியார்.

ஆனால் இன்று வீரபாண்டியார் பெயரைக் கேட்டாலே கோபமாகும் அளவுக்கு கருணாநிதி போய் விட்டாராம். காரணம், வீரபாண்டியார் தரப்பு சமீப காலமாக நடந்து வரும் போக்கு.

ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே அடுத்த வாரிசு யார் என்பதில் சமீப காலமாக பெரும் மோதல் மூண்டு வெடித்துக் கொண்டிருக்கிறது. தன்னை விட்டு விட்டு ஸ்டாலினுக்கு உயர் பதவி தரக் கூடாது என்று அழகிரி கடுமையாக முட்டுக்கட்டைப் போட்டு வருகிறார். ஸ்டாலினுக்கு ஏதாவது பதவி தரப்படலாம் என்ற பேச்சு வரும்போதெல்லாம் அழகிரி புயல் கிளம்பி அண்ணா அறிவாலயத்தை கடந்து விடுகிறது. இதனால் ஸ்டாலினை மேலே உயர்த்தும் வேலைகள் தடைபட்டுப் போகின்றன.

அழகிரி, ஸ்டாலின் மோதலில், திமுக முக்கியத் தலைவர்கள் ஆளுக்கு ஒரு கோஷ்டியாகப் பிரிந்து காணப்படுகின்றனர். இதில் இதுவரை எந்தக் கோஷ்டியிலும் சேராமல் கருணாநிதி கோஷ்டியில் மட்டுமே இருந்து வந்த வீரபாண்டியார் அழகிரி கோஷ்டிக்கு ஆதரவாக மாறியுள்ளார். அழகிரிதான் வீரபாண்டியாரை அவர் உடம்புக்கு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது நேரில் சந்தித்துப் பேசி அவரை தன் பக்கம் ஈர்த்தார்.

அன்று முதல் அழகிரிக்கு ஆதரவாக பேசி நடந்து கொள்கிறார் வீரபாண்டியார். அழகிரி பக்கம் வீரபாண்டியார் திரும்ப முக்கியக் காரணமாக கூறப்படுவது, கடந்த திமுக ஆட்சியின்போது சேலத்தில் நடந்த மிகக் கொடூரமான 6 பேர் படுகொலையாகும். இந்தக் கொலை வழக்கில் வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவர் வழக்கில் சிக்கி கைதாக ஸ்டாலின்தான் காரணம் என்பது வீரபாண்டியாரின் கருத்தாகும். இந்தக் கைதை அப்போதே கடுமையாக கண்டித்தவர் வீரபாண்டியார். மேலும், சிறைக்குப் போய் சுரேஷையும் பார்த்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சுரேஷ் விவகாரத்தில் ஸ்டாலின் மீது கொண்ட கோபத்தால்தான் தற்போது அழகிரிக்கு அவர் ஆதரவாக செயல்படுவதாக கருணாநிதி குடும்பத்தினர் கருதுகிறார்களாம். மேலும் அழகிரியை தூண்டி விட்டு ஸ்டாலினுக்கு எதிராக திருப்பி வருகிறார் வீரபாண்டியார், இதனால் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் கருணாநிதி குடும்பத்தினர் வருத்தப்படுகிறார்களாம்.

வீரபாண்டியார் ஒரு மூத்த தலைவர். அழகிரி, ஸ்டாலின் இடையே பிரச்சினை இருந்தால் அதைத் தீர்க்கவல்லவா அவர் முயற்சித்திருக்க வேண்டும். ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து அதைச் செய்யாமல், அவரை ஒருவரைத் தூண்டி விட்டு இன்னொருவருக்கு எதிராக செயல்படுவது என்ன நியாயம் என்பது கருணாநிதி குடும்பத்தினரின் வருத்தம் என்கிறார்கள்.

மேலும் சமீபத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திலும் கூட அழகிரிக்கு ஆதரவான முறையில் வீரபாண்டியார் நடந்து கொண்டதும், இளைஞர் அணிக்கான சேலம் மாவட்ட நிர்வாகிகளை வீரபாண்டியாரின் மகனே நேரடியாக தேர்வு செய்ய திட்டமிட்டதும் கூட கருணாநிதியை கோபப்பட வைத்ததாம். இதனால்தான் சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வைக் கண்டித்து திமுக மேலிடம் அறிக்கை விட்டது, எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த எச்சரிக்கை தனது மனதை புண்படுத்தி விட்டதாக உடனடியாக அறிவித்தார் வீரபாண்டியார்.

இப்படி வீரபாண்டியாருக்கும், கருணாநிதிக்கும் இடையிலான சமீபத்திய பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விரைவில் வீரபாண்டியார் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் வீரபாண்டியார் மீது அவ்வளவு சீக்கிரம் கை வைக்க முடியாது என்பதால் அதற்குத் தகுந்த காரணத்தை கண்டுபிடித்த பின்னர் நடவடிக்கை பாயும் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக