புதன், 8 பிப்ரவரி, 2012

பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன?

கேள்வி - பதில் : பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன ?
சமீக காலமாக கேரளாவைச் சார்ந்த நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கிளைகளை அதிகமாக திறந்து வருகின்றனவே இதன் உண்மையான பின்னணி குறித்து விரிவாக விளக்க முடியுமா?
- லிவிங்ஸ்டன்
__________________________________
அன்புள்ள லிவிங்ஸ்டன்,
தமிழகத்தில் கேரள நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதன் பின்னணி குறித்து பார்க்கும் முன், இதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்காக வேறு சில விஷயங்களை பார்த்து விடுவோம். குறிப்பாக நமக்கெல்லாம் அதிகம் அறிமுகமாகாத கேரள மக்களின் ‘மஞ்சள் பித்து’ குறித்து புரிந்து கொள்வது அவசியம்.
இந்தியாவின் வருடாந்திர ஆபரணத் தங்க நுகர்வு அளவான சுமார் 800 டன் தங்கத்தில் (2010ம் ஆண்டுக் கணக்கு) ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பங்கு அளவு கேரளாவில் மட்டும் நுகரப்படுகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கேரளத்தில் ஆலுக்காஸ், ஜோஸ், ஜோய், மலபார் கோல்ட், பீமாஸ், ஆலாபட் போன்ற பிரம்மாண்ட சங்கிலித் தொடர் நகைக்கடைகள் திரும்பிய சந்து பொந்துகளிலெல்லாம் கடைகளைத் திறந்துள்ளன.

இதெல்லாம் போக, ஆர்ரென்ஸ் கோல்டு சவுக் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது கொச்சியில் ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் ஒன்றை உருவாக்கி வருகிறது. சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக இருக்கும் இந்த ஷாப்பிங் மாலில், மேலே பட்டியலிடப்பட்டுள்ளதைப் போன்ற சங்கிலித் தொடர் நகை சாம்ராஜ்ஜியங்கள் தமது கடைகளைத் திறக்க உள்ளன. அவை மட்டுமல்லாமல், நகை உருவாக்கம், வடிவமைப்பு, தரச் சோதனை மற்றும் ரத்தினக்கற்கள் பற்றிய தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் பயிற்சி நிறுவனம் ஒன்றும் இதில் துவங்கப்படவுள்ளது.
சுதந்திரத்துக்குப் பின் மற்றய இந்திய மாநிலங்களை விட கல்வி அறிவு சதவீதத்தில் முன்னணியில் இருந்த கேரளம், ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் முன்னணியில் இருந்தது. எண்பதுகளின் இறுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதிலும் கேரளமே முன்னணியில் இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கு ஒன்றின் படி, நூற்றுக்கு சுமார் 25 சதவீத வீடுகளில் யாரேனும் ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குள் வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவனியில் 25 சதவீதம் கேரளாவுக்கே செல்கிறது.
வரலாற்று ரீதியாகவே உற்பத்தித் தொழில் சாராத வணிகப் பின்புலம் கொண்ட கேரளாவில், இப்படி வெளியிலிருந்து வரும் பணம் இரண்டே வழிகளில் தான் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று நிலம் மற்றது தங்கம். மேல் நடுத்தர வர்க்க மலையாளிகளின் திருமணங்களில் மணப் பெண்ணை நடமாடும் தங்க நகை ஸ்டாண்டு போல ‘அலங்கரிக்கும்’ கோமாளிக் கூத்துகள் சாதாரணம். அதே போல் கேரளப் புறநகர்ப் பகுதிகளில் பயணிக்கும் போது அலங்காரமான பிரம்மாண்டமான மாளிகைகளையும் காணலாம். இப்படி வீடு கட்டிக் கொள்வதும், நகைகளை வாங்கிக் குவிப்பதும் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
இந்தப் போக்கு இரண்டாயிரங்களில் மத்தியப் பகுதி வரை நீடித்தது. மேற்கில் துவங்கிய பொருளாதாரப் பெருமந்தம் மத்திய கிழக்கு நாடுகளையும் விடாது போட்டு உலுக்கியதில் கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரே மாதத்தில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து ஊர் திரும்பவிருப்பதாக அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு இத்தனை நகைக் கடல்கள் திரும்பிய திசையெல்லாம் தமது பிரம்மாண்டமான கடைகளைத் திறப்பதென்பது அதீதமான போட்டியை உண்டாக்கவல்லது.  இன்னொரு பக்கமோ இவர்களின் வாடிக்கையாளர்களே வருமானமற்று ஊர் திரும்பும் நிலை. மூன்றாவதும் முக்கியமானதுமான வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தங்க நகை விற்பனைக்கான மதிப்புக் கூட்டு வரி கேரளாவில் 4 சதவீதம் – இதே பிற மாநிலங்களில் 1 சதவீதம் தான். இந்த அதிக வரி விதிப்பை இத்தனை நாளும் மலையாளிகளின் தங்க நூகர்வு வெறிக்குத் தீணி போடுவதன் மூலம் ஈடுகட்டி வந்த நிலையில், அதில் விழுந்த அடி தான் இவர்களைக் கேரளத்தை விட்டு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறது.
சாமானிய இந்தியர்களைப் பொருத்தவரையில் நகையும் அடகும்,  உடலும் நிழலும் போலப் பிரிக்க முடியாதது. அந்த வகையில் கேரளாவில் நகைக்கடைகள் எந்தளவுக்கு அதிகமோ அதே அளவுக்கு நகை அடகு நிறுவனங்களும் அதிகமே. அதில் முன்னணில் இருப்பது, முத்தூட் பைனான்ஸ், முத்தூட்டு மினி மற்றும் மணப்புறம் கோல்ட் பைனான்ஸ். இவர்களும் நமக்குப் பரிச்சியமான ‘சேட்டு’கள் மட்டும் ‘செட்டிகளை’ப் போன்ற அடகுக்கடைக்காரர்கள் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் வங்கிகளைப் போன்றே மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் கொண்டவை. இதன் ஒவ்வொரு கிளையும் கணினி மயமாக்கப்பட்டு தலைமையகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.
கொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட முத்தூட் பைனான்ஸ்க்கு, 2011 ஆண்டு வாக்கில் 3,369 கிளைகள் இருந்தன. 2009-ம் ஆண்டு வாக்கில்  985 கிளைகளாக இருந்து இரண்டே வருடத்தில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளைகளது எண்ணிக்கை தற்போது நாட்டிலேயே மூன்றாவது அதிகக் கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்தக்  கிளைகளில் சுமார் 85 சதவீதமானவை தென்னிந்திய மாநிலங்களில் தான் அமைந்துள்ளது.
தற்போது தங்க நகைக்கடன் சந்தையில் சுமார் 19.5 சதவீத அளவை முத்தூட் பைனான்ஸ் நிறுவனமே கட்டுப்படுத்துகிறது. கடன் அளிப்பதில் பொதுததுறை வங்கிகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத முத்தூட், அடகுக்காக நகைகளை எடுத்துவரும் ஒருவருக்கு பத்தே நிமிடத்தில் கடன் தொகையை அளித்து விடுகிறது. பொதுத்துறை வங்கிகள் கடனளிக்கவும் புதிய கிளைகள் துவங்கவும் ரிசர்வ் வங்கியின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள  அரசு, இது போன்ற தனியார் வட்டிக்கடை நிறுவனங்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. கடந்தாண்டு ஜனவரி 31-ம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் முத்தூட் 103 புதிய கிளைகளைத் துவக்கியுள்ளது.

இந்நிறுவனங்கள் தென்னிந்தியாவில் பிரதானமாகத் துவக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மலையாளி நிறுவனங்கள் தமது கிளைகளை விரிவாக்க அக்கம் பக்கத்து மாநிலங்கள் என்றால் வசதி. மொழி, கலாச்சாரம், உள்ளூர் அரசியல் போன்ற காரணிகளை சுலபத்தில் சமாளிக்கலாம். இரண்டாவதும் முக்கியமானதுமான காரணம், வடஇந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, சிறுதொழில் முனைவு, தனிநபர் வருமானம் போன்றவற்றில் வளர்ந்த மாநிலங்கள். அந்த வகையில் வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்கம் ஒப்பீட்டளவில் அதிகம். இங்கே தங்க ஆபரண நுகர்வு வடக்கை விட அதிகம் என்பதோடு, சிறிய தொழில்களுக்கு உடனடியாக பணம் புரட்டவோ அல்லது ஆத்திர அவசரத்திற்கு அடகு வைக்கவோ இந்நிறுவனங்கள் ஒரு வசதி.
மேலும் தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, சிறு தொழில் முனைவோரிடம் நிலவும் செலாவாணி வறட்சி, சாமானிய மக்கள் எதிர் கொள்ளும் சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் இது போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்புகளை வழங்குகிறது. அந்த வகையிலும் தென்னிந்தியா மாநிலங்களில் அடகுக் கடைகள் நிறைய வளர முடியும்.
வடக்கே தொழில் வளர்ச்சியில் முன்னேறியுள்ள ஒரு சில மாநிலங்களும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மார்வாரி, பனியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு ஊடுருவி கடைகளைத் திறப்பது ஒப்பீட்டளவில் சவாலானது. ஆனாலும், தென்னிந்தியாவினுள் மட்டும் சுருங்கிக் கிடப்பது தமது நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்துள்ள முத்தூட் சகோதரர்களில் மூத்தவரும் அந்நிறுவனத்தின் சேர்மனுமான ஜார்ஜ் முத்தூட், தனது அலுவலகத்தை தில்லியில் அமைத்துக் கொண்டு வட இந்தியாவில் கிளை பரப்பும் திட்டத்தை சொந்த முறையில் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆக, முத்தூட், மணப்புரம் போன்ற மலையாள அடகுக் கடைகளும், கேரளத்தை மையமாகக் கொண்ட பிற சங்கிலித் தொடர் நகைக் கடைகளும் தமிழகம் என்றில்லாமல் பிற மாநிலங்களிலும் தமது கிளைகளைத் திறந்தே வருகிறார்கள். அதற்கான சூழலும் தற்போது அனைத்து மாநிலங்களிலும் நிலவுகிறது. இந்தியர்களுக்கே உரித்தான தங்கத்தின் மேலான பித்தும், அதை வாங்கி பதுக்கி வைப்பதில் இருக்கும் அற்பத்தனமான பெருமிதமும், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியுமே மலையாளி தங்க முதலாளிகளுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே நகைக் கடைகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்ட இந்த நிறுவனங்கள் அண்டைய மாநிலங்களில் விரிவு படுத்துவது சாத்தியம்தான். அதற்கு தோதாக மறுகாலனியாக்கத்தின் விளைவாக வளரும் நடுத்தர வர்க்கமும், பெருகி வரும் அதன் வாழ்க்கைப் பிரச்சினைகளும் ஒருங்கே சேர்ந்து இத்தகைய நகைக்கடைகளுக்கான சமூக அடிப்படையை தோற்றுவிக்கின்றன. இதை நாம் தமிழர், மலையாளி என்ற இனவாத அரசியலுக்கு அப்பால் உள்ள பொருளாதார அடிப்படைகளின் மூலம்தான் புரிந்து கொள்ள முடியும்.
www.vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக