செவ்வாய், 10 ஜனவரி, 2012

The Hindu பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம் விலகல்

சென்னை: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
இந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார்.
இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார்.
அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார்.
நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார்.
கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடையே பத்திரிக்கையை நடத்துவதிலும் யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசியராகவும் செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது.
தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக மிகத் திறம்பட செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக